PUBLISHED ON : ஜூலை 08, 2026 12:00 AM

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதல்வர் விஜய் தலைமையிலான, தமிழக வெற்றிக் கழக அரசை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ரமேஷ், கார்த்திக் உட்பட சிலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
த.வெ.க., அரசு கடந்த இரண்டு மாத ஆட்சியில், 717 மதுக்கடைகளையும், பல கல் குவாரிகளையும் தற்காலிகமாக மூடியது; தனியார் பள்ளிகள் தங்களின் கட்டண விபரத்தை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்று அறிவித்தது.
மேலும், தனியார் பள்ளிகளின் உரிமத்தை புதுப்பிக்க, இதுவரை பல லட்சங்களை லஞ்சமாக கொடுத்து வந்தனர், பள்ளி நிர்வாகிகள்.
தற்போது, பத்து பைசா செலவில்லாமல், த.வெ.க., அரசு உரிமத்தை புதுப்பித்து கொடுத்துள்ளதாக, ஜோ ேஹா நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
இப்படி வெளிப்படையாகவே பலரும், த.வெ.க., அரசை பாராட்டும் போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினோ, 'இன்னும் ஆறு மாதங்களில் த.வெ.க., அரசு கவிழ்ந்து விடும்; விரைவில் தேர்தல் வரப்போகிறது' என்று ஆருடம் கூறிக் கொண்டிருந்தார்.
'கூட்டணி பலத்துடன், த.வெ.க., ஆட்சி வலிமையாக இருக்கும்போது எப்படி ஆட்சி கலையும்' என்று எண்ணிக் கொண்டிருக்கையில், தற்போது, த.வெ.க., அரசை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதற்காக, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தி.மு.க.,வினர் ஒன்றை மறந்து விட்டனர்... த.வெ.க., தலைவர் விஜயை, சினிமா கவர்ச்சியினால் மட்டும் மக்கள் தேர்வு செய்யவில்லை; திராவிட கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது; குறிப்பாக, தி.மு.க., வந்து விடவே கூடாது என்ற எண்ணத்தில் தான், த.வெ.க.,விற்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்துள்ளனர்.
எனவே, தி.மு.க.,வின் திட்டப்படி த.வெ.க., ஆட்சி கலைந்தாலும், அதையடுத்து வரும் தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறாது என்பதுடன், 'டிபாசிட்' கூட வாங்காது.
இந்த உண்மையை புரிந்து, தோல்வியை பெருந்தன்மையுடன் ஏற்று, ஒரு நல்ல எதிர்க்கட்சியாக தி.மு.க.,வினர் செயல்படுவது, அக்கட்சிக்கு நல்லது!
----
அரசு நடவடிக்கை எடுக்குமா?
சிவ.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடியில் இருந்து எழுதுகிறார்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா, செப்., 17ம் தேதி நடைபெற உள்ளது. உலகப் புகழ் பெற்ற குடமுழுக்கு விழாவை காண, லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
இவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை ஹிந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து செய்ய வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மாநகராட்சி நிர்வாகம் தி.மு.க., வசம் உள்ளது.
ஏற்கனவே, ஊழல் புகாரில் சிக்கி சீரழிந்த மதுரை மாநகராட்சி நிர்வாகம், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அமைந்தபின், தன் செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தி விட்டது போலும்; கோவிலை சுற்றி கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.
மேலும், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முழுதும், ஒரே குப்பையும், கூளமுமாக காட்சி அளிக்கிறது. மழை பெய்தால் பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.
ஒரு காலத்தில் சிறந்த பேருந்து நிலையம் என பெயர் பெற்ற மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், இன்று மிகவும் கேவலமான நிலையில் உள்ளது. இதற்கு காரணம், கடந்த கால தி.மு.க., ஆட்சி!
எனவே, தமிழக அரசு மதுரை மாநகராட்சியை கலைத்து விட்டு, ஒரு தனி அதிகாரியை நியமித்து, மேயருக்கான அதிகாரங்களை அவருக்கு வழங்கி, அவர் வாயிலாக மதுரை மாநகரை சீர் செய்ய வேண்டும்.
குடமுழுக்கு விழாவிற்கு குறுகிய நாட்களே இருப்பதால், மதுரை கலெக்டர், மாநகராட்சி பொறுப்பு அதிகாரி, ஹிந்து சமய அறநிலையத்துறை என மூவரும் சேர்ந்து, குடமுழுக்கு காண வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்!
-----
என்ன செய்யப்போகிறார் முதல்வர்?
கோபால் மாரிமுத்து, டல்லாஸ், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க.,வில் தற்போது இருப் பவர்கள், 'தலைகள்' மட்டும் தான்; தொண்டர்கள் அனைவரும் ஏற்கனவே, த.வெ.க.,வில் இணைந்து விட்டனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்க ு விழுந்த ஓட்டுகள் கூட, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா என்ற, 'இரட்டை இலை'க்கு விழுந்தவையே தவிர, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு விழுந்தவை அல்ல!
அமெரிக்காவில் குடியேறிய மக்களின் வாரிசுகள், தங்கள் பாட்டன் பூட்டன் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் என்று தெரிந்தும், அவர்களுக்கு எதிராக எப்படி போர்க்கொடி ஏந்தினரோ, அதுபோன்று, இன்றைய இளைய சமுதாயம், தி.மு.க., - அ.தி.மு.க., விற்கு எதிராக நிற்கின்றனர்.
இந்த எதிர்ப்புக்கு காரணம், இரு கட்சிகளும் தங்கள் ஆட்சிக்காலத்தில் அடித்த கொள்ளைகள், போடாமல் போட்டதாக கணக்கு காட்டப்பட்ட சாலைகள், போடப்பட்ட சாலைகளில் இருக்கும் ஓட்டைகள், மது ஆலைகள், விஞ்ஞானபூர்வமாக அடித்த பகல் கொள்ளைகள் தான் காரணம்!
அதை சரியான நேரத்தில், சரியாக புரிந்து கொண்டதால் தான், 'மக்கள் பணத்தை தொடவும் மாட்டேன்; மற்றவர்களையும் தொடவிட மாட்டேன்; தொட்டவர்களையும் விட மாட்டேன்' என்று கூறியுள்ளார், முதல்வர் விஜய்.
அதேநேரம், இரு திராவிட கட்சிகளி லிருந்தும் மக்கள் பணத்தை தொட்டவர்கள், சாரை சாரையாக த.வெ.க.,வில் இணைந்து வருகின்றனர்.
நகை செய்யும் ஆசாரி, தன் மகளுக்கே தாலி செய்தாலும், குண்டுமணி தங்கம் எடுப்பாராம்!
அதுபோல், பதவியே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; கொள்ளையடித்த சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என்று, த.வெ.க.,வோடு கைகோர்க்க வந்துள்ளனர். இவர்களை முதல்வர் விட்டு வைப்பாரா அல்லது தட்டிக் கொடுப்பாரா... என்ன செய்யப் போகிறார்?
