PUBLISHED ON : ஜூலை 07, 2026 12:00 AM

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, 'கடந்த தி.மு.க., ஆட்சியில், என் மீது, 43 பொய் வழக்குகள் போடப்பட்டு, பல அடக்குமுறைகளை சந்தித்தேன். ஆனால், தீயசக்தி தி.மு.க.,வுடன் கைகோர்த்து, அவர்கள் தயவோடு ஆட்சிக்கட்டிலில் அமர பழனிசாமி முற்பட்டதைக் கண்டபோது, என் மனம் ரத்தக் கண்ணீர் வடித்தது. இப்பவும் நாங்கள் தலைமைக்கு எதிரானவர்கள் அல்ல' என்று, தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
பழனிசாமி செய்த தவறுக்கும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் தொடர் ராஜினாமாவுக்கும் என்ன சம்பந்தம்?
கப்பலை இயக்கும் மாலுமி சரியில்லை என்றால், மாலுமியை மாற்றுவதை விட்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று கப்பலை விட்டு வெளியேறுவது சரியா?
பழனிசாமி தான் அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச்செயலர் என்று, எம்.ஜி.ஆர்., தன் வக்கீல் ராகவாச்சாரி வாயிலாக எழுதிய உயிலில் ஏதேனும் குறிப்பிட்டு இருக்கிறாரா என்ன?
பொதுக்குழு, செயற்குழு, நீதிமன்றம், தலைமை தேர்தல் ஆணையம் இப்படி எத்தனையோ வழிமுறைகள் வாயிலாக பழனிசாமியின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்; அதைவிடுத்து, தன்னை வளர்த்த கட்சியை விட்டு வெளியேறுவது அக்கட்சிக்கு செய்யும் துரோகம் ஆகாதா?
பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., இனி எப்போதும் ஆட்சியை பிடிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்ததால் தானே, எம்.எல்.ஏ.,க் களின் ராஜினாமா கூத்து தினந்தோறும் அரங்கேறுகிறது!
ஒருவேளை தி.மு.க., ஆதரவுடன் பழனிசாமி ஆட்சி அமைத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கரை மீண்டும் போக்குவரத்து துறை அமைச்சராக்கி, அவர் மீது தி.மு.க., போட்ட அத்தனை வழக்குகளில் இருந்தும் அவரை விடுவித்து இருந்தால், அப்போது பழனிசாமியின் நடவடிக்கையை கண்டு, விஜயபாஸ்கரின் மனம் ரத்தக் கண்ணீர் வடித்திருக்குமா அல்லது ஆனந்த கண்ணீர் வடித்திருக்குமா?
-----
திராவிட மாடல் மிஷினா?
எஸ்.ஆர்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை, மாமல்லபுரத்தில் பிறகட்சியினரின் இணைப்பு விழாவில், தமிழக வெற்றிக் கழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அக் கட்சியில் இணைந்தனர்.
இதுகுறித்து, 'வடக்கில் பா.ஜ., பயன்படுத்தி வந்ததை போன்ற, 'வாஷிங் மிஷின்' ஒன்று, தற்போது தமிழகத்துக்கும் வந்து விட்டது. இந்த புது தமிழக மாடல் மிஷின், குட்கா கறைகளைக்கூட நீக்கும் என்று சொல்கின்றனரே உண்மையா?' என எகத்தாளமாக கேட்டுட்டுள்ளார், தி.மு.க., - எம்.பி., கனிமொழி.
கடந்த 2011 -2015 அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பணம் மோசடி செய்து, தி.மு.க.,விற்கு வந்தவர். அவரது ஊழல் கறையை எந்த வாஷிங் மிஷினால் தி.மு.க., நீக்கியது?
அந்த புதுவகை மிஷினை வைத்து தான், அ.தி.மு.க.,வில் இருந்து வந்த எ.வ.வேலு, சேகர்பாபு, வைத்திலிங்கம் போன்றோர் மீது இருந்த ஊழல் கறைகளை எல்லாம் திராவிட மாடல் மிஷின் நீக்கியதா?
இந்தியாவில் அரசியல் வாதிகள் ஒரு கட்சியி லிருந்து, மற்றொரு கட்சிக்கு தாவுவது பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு.
கட்சித்தாவலை நிரந்தரமாக தடை செய்து சட்டம் இயற்றும் வரை, இதுபோன்ற தாவல்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்!
இதற்கு, தி.மு.க., உட்பட எந்த கட்சியும் விதிவிலக்கு இல்லை எனும் போது, கனிமொழி எகத்தாளமாக பேசலாமா?
அரசியல்வாதிகள் கட்சியின் கொள்கை பிடிக்காமல், மற்றொரு கட்சிக்கு தாவுவதில்லை; தங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்குத்தொகைக்கு பங்கம் வரும்போது, லாபம் கிடைக்கும் இடத்திற்கு தாவுகின்றனர்.
அவ்வகையில், பிற கட்சியிலிருந்து எவ்வளவோ பேர் தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். த.வெ.க., பயன்படுத்துவது தமிழக மாடல் வாஷிங் மிஷின் என்றால், தி.மு.க., உபயோகப் படுத்தியது திராவிட மாடல் வாஷிங் மிஷினா?
----
கண்ணீர் வெள்ளத்தில் தொண்டர்கள்!
ஜி.சுவாமிநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வின் விஷம பிரசாரங்களும், அராஜகங்களுக்கும் நடுவில், அ.தி.மு.க., என்ற கட்சியை ஆரம்பித்து, ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் ஆட்சியை பிடித்தவர், எம்.ஜி.ஆர்.,
அவரை தொடர்ந்து ஒரு பெண் சிங்கமாக, அக்கட்சியை கட்டி காத்தவர், ஜெயலலிதா.
இப்படி எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகளாலும் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க., எனும் இரும்புக் கோட்டையை, இன்று, பழனிசாமி எனும் தனி மனிதர் சுக்கு நுாறாக சிதைத்து விட்டார்.
பழனிசாமியின் ஒவ்வோர் நடவடிக்கையையும் ஆராய்ந்து பார்த்தால், அதில் அவரது சுயநலமே முதன்மையாக தெரிகிறது. தன்னுடன் இருந்தவர்களை அரவணைத்து, மதிப்பும், மரியாதையும் தந்திருந்தாலோ, மனத்தாங்கலுடன் இருப்பவர்களை அழைத்து சமரசம் செய்திருந்தாலோ இன்று, அவர்கள் வேறு கட்சியை தேடி ஓடியிருக்க மாட்டார்கள்.
ஆனால், அத்தனை பேர்களையும் விரட்டி அடித்து விட்டு, 'துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி' என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்.
கடந்த 2024 பார்லிமென்ட் தேர்தலில் பல இடங்களில் தோல்வியுற்றும், டிபாசிட் இழந்தும் தோல்வியிலிருந்து பாடம் கற்காமல், தன்னை விட எவரும் பிரபலமாக இருந்து விடக் கூடாது என்று, அண்ணாமலையை பா.ஜ.,வில் இருந்து துரத்தி அடிக்க எல்லா உள்ளடி வேலை களையும் பார்த்தார்.
பா.ஜ., டில்லி தலைமை அளவு மீறி சலுகை தந்தும், சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ.,வை முடிந்த வரை ஓரம் கட்டி அவமானப்படுத்தினார்.
பழனிசாமியின் இந்த சுயநலமும், தான் எனும் அகந்தையும், பொறாமை குணமும் இன்று, ஓர் முட்டு சந்தில் கொண்டு வந்து அவரை நிறுத்தி விட்டது.
அ.தி.மு.க., என்ற கட்சியினை முழுதாக விழுங்கி, சிதற அடித்து பெருமை சேர்த்துக் கொண்டார், பழனிசாமி!
பழனிசாமி எனும் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய, அ.தி.மு.க., இதோ, கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டு இருக்கிறது!
ரத்தமும், வியர்வையும் சிந்தி கட்சிக்காக உழைத்த அ.தி.மு.க., தொண்டர்களோ இன்று கண்ணீர் வெள்ளத்தில்!
