sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

ஸ்டாலினின் சாதுர்யத்தை பாராட்டலாம்!

/

ஸ்டாலினின் சாதுர்யத்தை பாராட்டலாம்!

ஸ்டாலினின் சாதுர்யத்தை பாராட்டலாம்!

ஸ்டாலினின் சாதுர்யத்தை பாராட்டலாம்!


PUBLISHED ON : மார் 13, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 13, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு, லோக்சபா தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்திருக்கும் முறையை பார்க்கும் போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் சாதுர்யத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

முதலில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார். 'மூன்று தொகுதிகள் கட்டாயம் வேண்டும்' என்று அடம் பிடித்த வி.சி., தலைவரின் கோரிக்கையை ஏற்காமல், இரண்டு தொகுதிகளை மட்டும் ஒதுக்கீடு செய்து, திருமாவளவனை தன் வழிக்கு கொண்டு வந்து விட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இரண்டு தொகுதிகளை தந்த ஸ்டாலின், ம.தி.மு.க., தலைவர் வைகோவுக்கு மட்டும் ஒரே ஒரு தொகுதியை ஒதுக்கி அவரை ஆப் செய்து விட்டார். அவர் கேட்ட ராஜ்யசபா எம்.பி., பதவியையும் தராமல், 'பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்றும் சொல்லி விட்டார்.

ஒரு காலத்தில் தி.மு.க.,வின் போர் வாள் என்ற புகழோடு இருந்த வைகோவுக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்காமல், ஒரே ஒரு தொகுதியை மட்டும் மறுப்பு ஏதும் சொல்லாமல் வாங்கிக் கொள்ளும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.

வைகோவின் இன்றைய பரிதாப நிலையை பார்க்கும் போது, ஒரு திரைப்படத்தில் காமெடி நடிகர் விவேக் பேசிய, 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது.

நல்லவேளை ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கீடு செய்த அந்த ஒரே ஒரு தொகுதியிலும் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலின் கட்டாயப்படுத்தாமல் விட்டாரே... அதை நினைத்து, வைகோ ஆறுதல் அடைய வேண்டியது தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மூன்று தொகுதிகள் தர வேண்டும் என போராடிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமலுக்கு, ஒரு சீட் கூட ஒதுக்காமல், ராஜ்யசபா சீட் என்ற வாக்குறுதி தந்து வளைத்தது, ஸ்டாலின் ராஜதந்திரத்துக்கு சிறந்த உதாரணம்.



இன்னும் சில சீர்திருத்தங்கள் தேவை!


ந.தேவதாஸ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: இடைத்தேர்தல் என்பதே இருக்கக்கூடாது என்ற தலைப்பில், இப்பகுதியில் வாசகர் ஒருவர் எழுதியிருந்தார். அவரது கருத்து முற்றிலும் சரியானதே.

ஒரு சட்டசபை அல்லது லோக்சபா தொகுதிக்கான தேர்தல், மக்களின் வரிப்பணத்தில் தான் நடத்தப்படுகிறது.

ஒரு தொகுதியில் அந்த வேட்பாளர் காலமானாலோ அல்லது தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ராஜினாமா செய்தாலோ, அவரை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்றவரை வெற்றியாளராக அறிவித்து, இடைத்தேர்தல் என்ற வார்த்தையே, தேர்தல் வரலாற்றில் இல்லாமல் செய்ய வேண்டும்.

அப்போது தான் மக்களின் வரிப்பணம் வீணடிப்பது தவிர்க்கப்படும். தேர்தல் கமிஷன் இதைப்பற்றி யோசிக்குமா எனவும் கேட்டிருந்தார்.

இதைப் போலவே தேர்தல் கமிஷன் மேற்கொள்ள வேண்டிய அதிரடி நடவடிக்கைகள் நிறையவே உள்ளது.

அதில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்...

 ஒரு கட்சி வெற்றியடைந்து, ஒரு குறிப்பிட்ட கால கெடுவுக்குள் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றத் தவறினால், உடனடியாக அக்கட்சியின் ஆட்சியை கலைத்து, 2வது இடத்தில் வந்த கட்சிக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்க வேண்டும்

 வேட்பாளருக்கு கட்டாய கல்வித்தகுதியும், வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதேபோல் வாக்காளர்களுக்கும் குறைந்த கல்வித்தகுதி நிர்ணயிக்கும்பட்சத்தில், அரசியல்வாதிகள் படிக்காத பாமர மக்களை ஏமாற்றி, ஓட்டு வாங்கும் நிலை தடுக்கப்படும்

 கட்சித்தாவல் தடை சட்டத்தால் கட்சி மாறிய, எம்.எல்.ஏ., - எம்.பி., வேட்பாளர் பதவி இழக்கும் அதேசமயம், ஐந்து ஆண்டுகள் தேர்தலில் நிற்கவும் தடை விதிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட நடவடிக்கைகளில் சிலவற்றை ஜனநாயக நாட்டில் நடைமுறைப்படுத்துவது சிரமமாக இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் மக்கள் ஆதரவு அமோகமாக இருப்பதுடன், மக்கள் வரிப்பணத்தை சூறையாடும் அரசியல்வாதிகள் அடியோடு ஒழிக்கப்பட்டு, நாடு சுபிட்சமடையும். நடக்குமா?



வட மாநிலத்தவரை தாக்காதீர்கள்!


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குழந்தைகள் பிடிக்க வந்திருக்கின்றனர் என்ற சந்தேகத்தில், வட மாநிலத்தவர்கள் இங்கு கடுமையாக தாக்கப்படுவது, கண்டிக்கத்தக்கது.

சட்டத்தைக் கையிலெடுப்பவர்கள், இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், இன, மத, மொழி, பிரிவினைவாத அரசியல் செய்து வரும் திராவிட கட்சிகளே. தமிழகம் அல்லாதோர், தமிழ் பேசாதோர் மீது வெறுப்பை உமிழும் மன நிலையை, திராவிட கட்சியினர் உருவாக்கி விட்டனர்.

சந்தேகத்திற்குரிய வகையில் யாரேனும் தென்பட்டால், காவல் துறையினருக்கு உடனே தெரிவிக்க வேண்டுமே ஒழிய, கூட்டமாக சேர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை, கண்மூடித்தனமாக தாக்கும் செயல் ஏற்புடையதல்ல; சட்டத்திற்கு புறம்பானதும் கூட.

இவ்வாறு செயல்படுபவர்களால், வட மாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு வர அஞ்சக்கூடும். இலவசங்கள், டாஸ்மாக் போன்றவற்றால், தமிழகத்தில் பல துறைகளில் ஏற்கெனவே தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது.

வட மாநில ஊழியர்கள் தமிழகத்திற்கு வரத் தயங்கினால், தமிழகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை, அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.



சிங்கார தமிழ்நாடை காண்பது எப்படி?


ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் பல பகுதிகளிலும் நெடுஞ்சாலை பாலங்களின் பக்கவாட்டு கைப்பிடி சுவர்களிலும், அறிவிப்பு பலகைகள் மீதும், அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களின் சுற்றுச்சுவர்கள் மீதும், கண்டபடி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அசிங்கமான தோற்றத்தைத் தருவது வேதனைக்குரியது.

இதன் காரணமாக, சாலைகளில் காகிதக் குப்பை சேர்ந்து, சுகாதார கேட்டை விளைவிக்கிறது.

பிளக்ஸ் போர்டுகளை வைக்க அரசு சட்ட திட்டங்கள் மூலம் வரையறை செய்தது போல், இதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும்.

பெரும்பாலான சுவரொட்டிகள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டவை. சுவர்களில் படம் வரைந்து விளம்பர வாசகங்களை எழுதும் போக்கும், அதிகரித்து காணப்படுகிறது.

சிங்கார தமிழ்நாட்டைக் காண்பது எப்படி?








      Dinamalar
      Follow us