PUBLISHED ON : நவ 01, 2026 12:00 AM

எஸ்.கந்தன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாதாந்திர மின்கட்டண முறையை அமலுக்கு கொண்டு வருவோம்' என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வரும் கட்சிகள், அதன்பின், அந்த வாக்குறுதியை முற்றிலும் மறந்து விடுகின்றன. அதற்கு, தமிழக வெற்றிக் கழக அரசும் விதிவிலக்கு அல்ல!
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுக்கும் முறையை தொடர்வதன் வாயிலாக, மக்கள் தலையில் மிளகாய் அரைத்து, வசூலில் சாதனை புரிந்து, வரலாறு படைத்து கொண்டிருக்கிறது!
கடந்த 1987 வரை, மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு முறை தான் நடைமுறையில் இருந்தது. அப்போதெல்லாம், மின் கணக்கெடுப்பாளர் வீடு வீடாக வந்து, மின் பயன்பாட்டை கணக்கெடுத்து குறித்து கொண்டு செல்வார். பின், மின் பயன்பாட்டுக்கு உரிய கட்டணத்தை, வெள்ளை நிறத்தில் அச்சடித்த அஞ்சல் அட்டை வாயி லாக, பயனாளிகளுக்கு அனுப்பி வைப்பர்.
நுகர்வோர் அந்த அஞ்சல் அட்டையை, தபால்காரர் வாயிலாக பெற்று, குறிப்பிட்டுள்ள கெடுவுக்குள் மின்வாரிய அலுவலகம் சென்று, மின் கட்டணத்தை கட்டுவர்.
இந்த மின் கட்டண அட்டை, ஒவ்வொருவரது வீட்டுக்கும் தவறாமல் வந்து விடும்.
ஒவ்வொரு வீட்டுக்கும் ஏறி இறங்கி, 'டெலிவரி' செய்வது சிரமமான ஒன்று தான்; ஆனாலும், தபால்காரர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் உரிய, மின் கட்டண அட்டையை பட்டுவாடா செய்து விடுவர்.
எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில், 1987, ஆகஸ்ட் மாதத்திலிருந்து தான், மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்புக்கு மூடுவிழா நடத்தி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுக்கும் முறை துவங்கியது.
இதை எந்த மேதாவி, எம்.ஜி.ஆரிடம் விளக்கி, இதனால் அரசுக்கு கூடுதல் வருவாய் வரும் என்று ஐடியா கொடுத்தாரோ... அன்றைக்கு பிடித்தது தமிழக மக்களுக்கு சனி!
கடந்த 39 ஆண்டுகளாக, இப்படி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுத்து, மின்வாரியம் கொள்ளையடித்த தொகையில், தமிழகத்தின் கடனையே அடைத்திருக்கலாம்; ஆனாலும் அடைக்கவில்லை. கொள்ளை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
அரசியல் கட்சிகளும், தேர்தல் தோறும், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் மின் கட்டண முறையை அமல்படுத்துவோம்' என்ற பல்லவியை பாடி ஆட்சிக்கு வருகின்றன.
ஆனால், ஆட்சிக் கட்டிலில் ஏறியதும், 'அம்னீஷியா' நோய் வந்து, கொடுத்த வாக்கை மறந்து போகின்றன.
அவ்வகையில், த.வெ.க., தலைவர் விஜயும், இதே வாக்குறுதியை தேர்தலின் போது கொடுத்தார். அவரும் தமிழக மக்களுக்கு, 'அல்வா' கொடுத்து விட்டார்.
வழக்கம் போல், இம்முறையும் மக்கள் ஏமாந்தது தான் மிச்சம்!
பணி மாறுதலில் சென்றவர்களை திரும்ப அழையுங்கள்!
பி.சாந்தி பாஸ்கர், வேளாண்துறை அதிகாரி, (பணி ஓய்வு), விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வேலை வாய்ப்புத் துறையின் கீழ் பணிபுரிந்து வரும் சிலர், பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கைகளுக்காக, நிர்வாக வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு நேரடியாக மனு அளிப்பது தெரியவந்துள்ளது. இனி, அவ்வாறு செயல்படக் கூடாது.
துறை தலைவர் வழியாக, நிர்வாக நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். மீறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று, துறை சார்ந்த அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார், தமிழக அரசு வேலை வாய்ப்புத் துறை கூடுதல் இயக்குநர் ராஜசேகர்.
உண்மையில், இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்!
இதேபோல், இன்னொரு சுற்றறிக்கையையும் இயக்குநர் ராஜசேகர் வெளியிட வேண்டும்.
பல்வேறு அரசுத் துறைகளில், அலுவலர்கள் சிலர், அரசியல் பின்புலத்துடன், தாங்கள் விரும்பும் துறைக்கு மாறிச் சென்று பணியாற்றி வருகின்றனர்.
அரசு விதிப்படி, மாற்றுப் பணிக்கு சென்றவர்களை, மூன்றாண்டுக்குப் பின், தலைமையிட பணிக்கு மீண்டும் அழைக்க வேண்டும்.
ஆனால், துறைச் சார்ந்த உயர் அதிகாரிகளோ, அலுவலர்களை திரும்ப பெறுவது இல்லை. இதனால், பணி மாறுதலில் சென்றவர்கள், அங் குள்ள உயர் அதிகாரிகளை தங்களுக்கு சாதகமாக்கி, அவர்கள் வாயிலாக, ஆண்டுக்கு ஒரு முறை பணி நீடிப்பு நற்சான்றிதழை பெற்று, அதை தங்கள் தலைமை அதிகாரிக்கு அனுப்பி, மாற்றுப் பணியில் சொகுசாக அமர்ந்து, பதவி உயர்வும் பெற்று விடுகின்றனர்.
சிலர் அங்கேயே பணி நிறைவும் செய்கின்றனர். இதனால், மாற்றுப் பணிக்கு செல்ல விரும்பும் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும், ஒரே துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் பதவி உயர்வு பெறுவதில் நடைமுறை சிக்கல்களும் ஏற்படுகின்றன.
எனவே, மூன்றாண்டுக்கு மேல் மாற்றுப் பணியில் உள்ள அலுவலர்களை, தலைமையிடத்துக்கு மீண்டும் திருப்பி அழைக்க, வேலை வாய்ப்புத் துறை கூடுதல் இயக்குநர், துறை சார்ந்த அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, நடவடிக்கை எடுக்க வேண்டும்!
கேரளாவை பின்பற்ற வேண்டும் தமிழகம்!
கோ. பாண்டியன், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதியோரை துன்புறுத்துவது, அவர்கள் சொத்துக்களை சட்டவிரோதமாக அபகரிப்பது, பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்களை நடத்துவது போன்ற குற்றங்களை தடுப்பதற்காக, கேரளாவில், 'மூத்த குடிமக்கள் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மசோதா - 2026' என்ற புதிய மசோதாவை, அம்மாநில அரசு, சட்டசபையில் நிறைவேற்றி உள்ளது.
இத்தகைய சட்டத்தை இயற்றும் முதல் மாநிலம் என்ற பெருமையையும், இதன் வாயிலாக கேரளா பெற்றுள்ளது.
முதியோரின் இயலாமையை தங்களுக்கு சாதகமாக்கி, அவர்களை தாக்குவதும், அவமதித்து உதாசீனப்படுத்துவதும் தற்போது அதிகரித்து வருகின்றன.
இம்மாதிரியான துன்புறுத்தல்கள் பொது வெளியில் மட்டுமல்லாமல், வீட்டில் உறவினர் மத்தியிலும் நிலவி வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, தனி சட்டங்கள் இருப்பது போல், மூத்த குடிமக்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க, கேரளாவைப் போன்று, அனைத்து மாநிலங்களிலும் சட்டம் இயற்ற வேண்டும்.
அப்போது தான், மூத்த குடிமக்களின் உடல்நலம், சமூக பாதுகாப்பு, கண்ணியமான வாழ்க்கை, பொது இடங்களில் சுதந்திரமாக சென்று வருவதற்கான பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்ய முடியும்.
தமிழக அரசும் கேரளத்தை பின்பற்றி, முதியோர் பாதுகாப்பிற்காக சட்டத்தை இயற்ற வேண்டும்.
இது, தற்போதைய காலக்கட்டத்தில் மிகவும் அவசியம்!
lll
