/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
சும்மா பூச்சி காட்டாதீங்க அண்ணாமலை!
/
சும்மா பூச்சி காட்டாதீங்க அண்ணாமலை!
PUBLISHED ON : மார் 15, 2024 12:00 AM
எச்.ஆப்ரகாம், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிவதில், பழம் தின்று கொட்டையை வெளியே துப்பிவிட்டு, தில்லாக நடமாடி கொண்டிருப்பவர்கள் மீது, 'அந்த பைல் ரெடி, இந்த பைல் ரெடி, இதோ காட்றேன் பார்' என்றெல்லாம் சொன்னார் ஒருவர்.
ஆனானப்பட்ட, '2ஜி' வழக்கு விசாரணையின் போதே, டில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு, தண்ணீர் காட்டி, போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலையாகி வெளியே வந்திருப்பவர்கள் அவர்கள்.
சற்று திரும்பிப் பார்ப்போமா?
கருணாநிதி ஆட்சியின் போது, எம்.ஜி.ஆர்., கருணாநிதியின் மீது பல்வேறு வகையான ஊழல் புகார்களை சுமத்தி, அவற்றை கவர்னரிடம் சமர்ப்பித்தார்.
கவர்னர் அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய கோப்பை, அப்படியே கருணாநிதிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நாட்டு சட்ட-திட்டங்களில் உள்ள மாபெரும் கோளாறே இதுதான். யார்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறதோ, அதை அப்படியே குற்றம் சாட்டப்பட்டவருக்கே அனுப்பி விளக்கம் கேட்கும் பழக்கம்... தமாஷாக இருக்கிறது!
அது குறித்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, கருணாநிதி பின் வருமாறு பதில் அளித்தார், 'பார்த்தேன்... படித்தேன்... ரசித்தேன்!' என்று!
அன்று எம்.ஜி.ஆர்., கருணாநிதி மீது சுமத்திய ஊழல் புகார் குற்றச்சாட்டுகளால், கருணாநிதியை, ஆட்டவோ, அசைக்கவோ முடியவில்லை. தண்டனையும் வாங்கித் தர முடியவில்லை.
ஏனெனில், நம் நாட்டு சட்டங்கள் அப்படி!
அவை சாமானியர்களுக்கு சவுக்காகவும், அரசியல்வாதிகளுக்கு மாலையாகவும் தான் பெரும்பாலும் உள்ளன.
அதுபோல, ஏறக்குறைய ஆறு மாதங்களாக அண்ணாமலை, தி.மு.க., பைல்ஸ், பாகம் 1, பாகம் 2 என வெளியிட்டபடி இருந்தார். ஏதாவது நடந்ததா? ஒன்றும் நடக்கவில்லை!
குற்றம் சாட்டப்பட்டவரோ, 'இந்தியா என்று ஒரு நாடே கிடையாது. ராமன் எங்களுக்கு விரோதி தான்' என்று கதைத்து கொண்டிருக்கிறார்.
இவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க இந்த சட்ட திட்டங்களால் கூட முடியவில்லை; அண்ணாமலை எம்மாத்திரம்?
சும்மா பூச்சி காட்டாதீங்க அண்ணாமலை... போரடிக்கிறது!
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?
வி.எஸ்.ராமு,
செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: 'நெல்லை மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், 18 வயதுக்கு
உட்பட்ட 1,448 சிறுமியர் குழந்தை பெற்றுள்ளனர்' என்ற அதிர்ச்சி செய்தி
வெளியாகி உள்ளது.
அதாவது, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது
போல, இம்மாவட்டத்தில் மட்டுமல்ல, மாநிலம் முழுதும் உள்ள அனைத்து
மாவட்டங்களிலும் இதே நிலை தான் இருக்கும்.
இன்று, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கு திருமணம் செய்து வைப்பது என்பது இரண்டு கோணங்களை உள்ளடக்கியது...
பக்குவப்படாத
மனநிலை, அலைபாயும் மனம், அலைபேசி பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட
காரணங்களால், 18 வயதுக்கு முன்பே, காதல் வலையில் விழுந்து விடுகின்றனர்.
இதன்
காரணமாக, பரவலாக கர்ப்பம் அடைவோரும் அதிகரிக்கின்றனர். இந்த வழியை
தேர்ந்தெடுத்து விட்ட சிறுமியரின் பெற்றோர், சமூகத்தில் அவமானப்பட வேண்டாம்
என, நிலைமை கை மீறி போகும் முன்பே திருமணத்தை முடித்து விடுகின்றனர்.
இரண்டாவது
நிலை, 'காலம் கெட்டு கிடக்கிறது.வசதியான இடத்தில், சொந்தத்தில் மாப்பிள்ளை
இருக்கிறார். தொடர்ந்து ஏன் படிக்க வைக்க வேண்டும்? எத்தனை நாட்களுக்கு
தான் நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பது' என்ற மனநிலையிலும், 18
வயதுக்குட்பட்ட சிறுமியருக்கு பெற்றோர் கமுக்கமாக திருமணம் முடித்து
விடுகின்றனர்.
பொதுவாக, தற்போதைய பதின்ம வயதினர், அலைபேசி
பயன்பாட்டால், வயதுக்கு மீறிய விஷயங்களை கற்றுக் கொள்கின்றனர்; இதனால்,
மனம் பக்குவப்படாத வயதிலேயே, காதல் வலையில் விழுந்து பாதை மாறும் போக்கு
அதிகரிக்கிறது.
நல்வழி காட்டும் பெரியோர், ஆசிரியர்கள் மற்றும்
பெற்றோரின் பேச்சை இக்கால இளைய தலைமுறையினர் காது கொடுத்து கேட்பதில்லை.
சட்டென்று காதலில் விழுந்து, பட்டென்று மணம் முடிக்கின்றனர்.
சில மாதங்கள் அல்லது ஆண்டுகளில் யதார்த்தம் புரிந்து, காதல் கசந்து, வாழ்வை தொலைத்து, நிர்கதியாக நிற்கின்றனர்.
எனவே,
தங்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கை, பழக்க வழக்கம், யாருடன்
சேர்கின்றனர், எதை பார்க்கின்றனர் என்பது போன்ற விஷயங்களில், பெற்றோர்
விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்
செய்து பலனில்லை!
தருவீர்களா மக்களாட்சி, மன்னர்களே?
குரு
பங்கஜி, சென்னை-யில் இருந்து அனுப்பிய 'இ - மெயில்' கடிதம்:
---------------------------------------------------------இலவசம் என்ற
பெயரில், தமிழக மக்களை சோம்பேறிகளாக்கிய பெருமை, நம் ஆட்சியாளர்களையே
சேரும்.
ஆடு, மாடு, கோழி, வேட்டி, சட்டை, பொங்கல் இனாம், கரும்பு,
'டிவி' என்று, எதையும் மிச்சம் மீதி வைக்காமல், இலவசம் என்ற பெயரில்
கொடுத்து தீர்த்து விடுகின்றனர்!
வேடிக்கை என்னவென்றால், இப்படி இலவசங்கள் என்ற பெயரில் வாரி இறைப்பது, மக்களின் வரிப்பணத்தை தான்; அவர்களின் சொந்த பணத்தையல்ல.
ஏதோ கர்ணன் பரம்பரை போன்று, சொந்த பணத்தில் கொடுத்தது போல், குடும்பத் தலைவர்களின் ஸ்டிக்கரை ஒட்டி, விளம்பரம் வேறு!
இதோடு
விட்டால் கூட பரவாயில்லை... ஏழை, எளிய, நடுத்தர, உழைக்கும் மக்களை
குடிகாரர்களாக்கி, இலவசத்துக்கு செலவு செய்த பணத்தை விட பல மடங்கை,
'டாஸ்மாக்' வாயிலாக அபகரித்து கொண்டிருக்கின்றனர்.
ஏதோ இந்த
எலும்புத் துண்டு கிடைக்கவில்லை எனில், வாழ்நாள் முழுதும் பட்டினி கிடக்கப்
போகிறோமே என்ற ஏக்கத்தில், தேர்தல் நேரத்தில் போடப்படும் எலும்புத் துண்டை
நாமும் லாவகமாக கவ்வி விடுகிறோம்.
நமக்கு எலும்புத் துண்டு. அவர்களுக்கு மீண்டும் பதவி; ஆட்சி அதிகாரம்; மீண்டும் கொள்ளை!
மக்களாட்சி எங்கே நடக்கிறது... மன்னராட்சி தானே இது! இதில் சிலருக்கு, தனி நாடு இல்லையே என்ற ஏக்கம் வேறு!
கொடுங்கள் எங்களுக்கான ஆட்சியை!

