/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
எதிர்ப்பவர்கள் எல்லாம் உத்தமர்களா?
/
எதிர்ப்பவர்கள் எல்லாம் உத்தமர்களா?
PUBLISHED ON : பிப் 21, 2024 12:00 AM

என். வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மத்திய அரசு அமல்படுத்திய தேர்தல் பத்திரங்கள் செல்லாது' என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பா.ஜ.,விற்கு மட்டுமே எதிரானது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்க, நம் எதிர்க்கட்சித் தலைவர்கள் முயற்சி செய்வது கேலிக்குரியது.
தேர்தல் பத்திரம் வாயிலாக, அதிக அளவில் பயனடைந்தது, பா.ஜ., என்றாலும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகளும், திரிணமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம், தி.மு.க., போன்ற மாநிலக் கட்சிகளும், பயன் அடைந்திருப்பதை மறுக்க முடியாது.
பா.ஜ., 6,568 கோடி காங்கிரஸ் 1,547 கோடி, திரிணமுல் காங்கிரஸ் 823 கோடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 367 கோடி தி.மு.க., 616 கோடி, பிஜு ஜனதா தளம் 152 கோடி தெலுங்கு தேசம் 34 கோடி பெற்றிருக்கும் அவலம், தற்போது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
இந்த லட்சணத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே, சீதாராம் யெச்சூரி, சிதம்பரம், ஸ்டாலின் போன்ற தலைவர்கள், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, தங்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பது போல, கருத்து தெரிவித்திருப்பது எந்த விதத்திலும் நியாயமே இல்லை.
இதன் வாயிலாக, தங்களை உத்தமர்கள் போல அடையாளம் காட்ட இவர்கள் முற்படுகின்றனர். அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் செலவை சமாளிக்க, தொழிலதிபர்களிடம் நிதி வசூல் செய்வதில் போட்டி போடும் அவலத்தை, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
இதில், பா.ஜ., கட்சியை மட்டும் எதிர்க்கட்சி தலைவர்கள் குறை சொல்வதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
எதிர்க்கட்சித் தலைவர்கள், தேர்தல் பத்திரம் செல்லாது என்று, உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை வாழ்த்தி வரவேற்பதை பார்க்கும்போது, 'நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்' என்ற, பழைய திரைப்பட பாடல் தான் நம் நினைவிற்கு வருகிறது.
குவாரி தொழிலை மீட்டெடுக்க வேண்டும்!
வெ. சீனிவாசன், திருச்சியில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்தாண்டு, பெரம்பலுாரில் கல் குவாரி எடுக்கும் ஒப்பந்தத்தில் பங்கேற்க வந்த பா.ஜ.,வினர் சிலரை, தி.மு.க., நிர்வாகிகள் சேர்ந்து தாக்கி, அவர்களை பங்கேற்க விடாமல் செய்தது, அனைத்து பத்திரிகைகளிலும் செய்தியாக வந்தது.
முன்னாள் அமைச்சர் பொன்முடியும், அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் மண் அள்ளிய குற்றத்திற்காக, வழக்கில் சிக்கியுள்ளார்.
தமிழக- - கேரள எல்லையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தி செல்லப்படுகின்றன. அதற்கு பதிலாக கேரளாவிலிருந்து இறைச்சி, மருத்துவ கழிவுகள் தமிழகத்திற்குள் வந்து கொட்டப்படுகின்றன.
சமீபத்தில், மதுரை மாவட்டம், மேலுார் தாலுகாவில், பல இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சட்டவிரோத மண் குவாரிகள் அமைக்கப்பட்டு,'கிராவல்' மண் அள்ளப் படுகிறது.
'இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது, அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது' என தொடரப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, கலெக்டரும், குவாரிக்கு வழங்கிய உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறி உள்ளார்.
தமிழகத்தில் நடத்தப்படும் குவாரிகளின் பின் இருப்பவர்களில் பெரும்பாலானோர் கட்சிக்காரர்களே, அதிலும் குறிப்பாக, ஆளுங்கட்சியினர் என்பது உலகறிந்த உண்மை. வருவாய், கனிம வளம், காவல் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து துறையினரும், 'முறைப்படி' கவனிக்கப்படுவதாலும், மேலிட அழுத்தம் காரணமாகவும், எதையும் கண்டு கொள்வதில்லை.
குவாரிகளில் எவ்வளவு கனிம வளம் எடுக்க உரிமம் கொடுக்கப்பட்டிருக்கிறது, இதுவரை எவ்வளவு அள்ளப்பட்டுள்ளது என்பது போன்ற கணக்கு வழக்கெல்லாம் யாரிடம் உள்ளது, அவர்கள் அடிக்கடி களத்திற்கு வந்து ஆய்வு செய்கின்றனரா என்பதெல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இந்த தொழிலில், பெரும்பாலும் அரசியல் பின்புலம் உள்ளவர்களே இருப்பதாலும், வருமானங்கள் மறைக்கப்படுவதாலும், உரிய ஆவணங்களின்றி, கணக்கில் காட்டாமல் வியாபாரம் செய்து வருவதாலும், அடிக்கடி வருமானவரி, அமலாக்கத் துறை ஆய்வுகளும் நடக்கின்றன.
எனவே, அரசியல்வாதிகள், அராஜகவாதிகள் பிடியில் இருந்து குவாரி தொழிலை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். டெண்டரில், கட்சி பாகுபாடின்றி, விரும்பும் அனைவரும் பங்கேற்க வழிவகை வேண்டும்.
சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்படாமல், நவீன முறையில் தொழில் நடத்துவோருக்கு முன்னுரிமை அளிக்கலாம். தமிழக அரசு யோசிக்குமா?

