தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/அழுக்கு வாடையை தவிருங்கள் அமைச்சரே!

அழுக்கு வாடையை தவிருங்கள் அமைச்சரே!

அழுக்கு வாடையை தவிருங்கள் அமைச்சரே!


PUBLISHED ON : ஜூலை 16, 2026 01:13 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2026 01:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வைகை ஆறு உள்ளது; நீர் இல்லையே... வைகை ஆற்றை அரசு சுத்தப்படுத்த வேண்டும். இல்லையென்றால், லோக்பவன் களத்தில் இறங்கி சுத்தம் செய்யும்' என்று, மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கவர்னர் அர்லேக்கர் கூற, உடனே, தி.மு.க.,வை சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, 'கவர்னரின் பேச்சும், அவரது ஆய்வு கூட்டமும் மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல்; இது, தமிழக வெற்றிக் கழக அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது' என்றார்.

வைகையை சுத்தம் செய்வதற்கும், மாநில அரசின் உரிமைக்கும் என்ன சம்பந்தம்?

கடந்த ஐந்து ஆண்டுகளாக கவர்னருடன் மல்லுக்கட்டுவதிலேயே தங்கள் அரசியல் ஞானத்தை காட்டியவர்கள், தி.மு.க.,வினர். தற்போது, த.வெ.க., அரசு கவர்னருடன் இணக்கமாக செயல்படுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால், கவர்னர் வைகை ஆறு குறித்து பேசியதை தன் கற்பனைக்கு தகுந்தவாறு கொளுத்தி போட்டுள்ளார், உதயநிதி.

இந்த அரசியல் சூழ்ச்சி தெரியாத மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், 'கவர்னர் கடப்பாறையும், மண்வெட்டியும் துாக்கிக் கொண்டு வந்து வைகை ஆற்றை சுத்தம் செய்யப் போறாரா? லோக்பவனில் என்ன வேலை இருக்கிறதோ அதை மட்டும் அவர் செய்யட்டும்' என்றும், 'வரும் காலங்களில் முதல்வர், அமைச்சர்கள் அனுமதியின்றி கவர்னர் நடத்து-ம் ஆய்வு கூட்டங்களில் அதிகாரிகள் பங்கேற்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உயரதிகாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும் போது, அறிவாலய காற்று பனையூரில் வீசுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

முன்னாள் தமிழக கவர்னர் ரவி, ஒருநாள் அதிகாலையில் திடீரென்று தன் அதிகாரிகள், லோக்பவன் பணியாளர்களை அழைத்துக் கொண்டு சென்னை காந்தி மண்டபத்தின் வளாகத்திற்கு சென்று, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் குப்பை கூளங்களை அப்புறப்படுத்தினார்.

அன்று மட்டுமல்ல; அதன்பின் வந்த காந்தி பிறந்த நாள், நினைவு நாள் போன்ற விசேஷ நாட்களில், தான் பதவியில் இருக்கும் வரை இந்த துாய்மை பணியை செய்து வந்தார். இதைத்தான் தற்போதுள்ள கவர்னரும் செய்ய நினைக்கிறார்.

ஒரு மாவட்டத்தின் தலைநகருக்கு கவர்னர் சென்றால், கலெக்டர், காவல் துறை உயர் அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் களநிலவரங்களை கேட்ப-து இயல்பான ஒன்று. இதில் அரசின் உரிமைக்கு என்ன கேடு வந்துள்ளது?

பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., ஆகிய கட்சிகளில் இருந்ததால், அழுக்கு அரசியல் வாடை இவரிடம் வீசுகிறது. முதல்வர் விஜய் தான், இவரின் மன அழுக்கை சுத்தப்படுத்த வேண்டும்!

அரசு வழக்கறிஞர் பணிக்கு தேர்வு வைக்க வேண்டும்!


அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத் தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகம் முழுதும், 800 அரசு வழக்கறிஞர்களை பணி நியமனம் செய்து வருகிறது, தமிழக அரசு.

அதற்காக, வழக்கறிஞர்களிடம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி, பணி நியமனம் செய்யப்பட்டு வருவதாகவும், திருட்டு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு வழக்கறிஞரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது.

சட்டப் படிப்பில் பட்டம் பெற்று, குறைந்தது ஏழு ஆண்டுகள் நீதிமன்றத்தில் தொழில் செய்த அனுபவம் உள்ள தகுதி, நேர்மை மற்றும் திறமை உள்ளவர்களுக்கே அரசு வழக்கறிஞர் பணிக்கு முன்னுரிமை தரவேண்டும்.

மாநில அரசு, கலெக்டர்மற்றும் முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி பரிந்துரைக்கும் வழக்கறிஞர்களே கீழமை நீதிமன்றங்களில் நியமனம் செய்யப்படுகின்றனர்.

அதேபோன்று, மாநில அல்லது மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின்படியே உயர் நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கறிஞர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

ஆனால், அரசு வழக் கறிஞர்கள் பணி நியமனம் என்பது அரசியல் சார்பான நியமனமாகி விட்டது. இதனால், எந்த கட்சி ஆட்சி செய்கிறதோ, அக்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தான் பெரும்பாலும் அரசு வழக்கறிஞர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனால் நேர்மை மற்றும் திறமைக்கு வேலை இல்லாமல் போகிறது.

தற்போது, இப்பணிநியமனம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

நடுவர் நீதிமன்றங்களில் பணிபுரிய, தமிழ்நாடு தேர்வாணையம் வாயிலாக தேர்வுகள் வைத்தே தேர்வு செய்யப்படுகின்றனர். அதேபோன்று, அரசு வழக்கறிஞர்களுக்கும் கடுமையான தேர்வுகள் வைத்தே தேர்வு செய்ய வேண்டும்.

மழைக்கு கூட நீதிமன்றம் பக்கம் ஒதுங்காத வழக்கறிஞர்களுக்கு, அரசியல் ஆதரவு நிலைப்பாட்டினாலும், லஞ்சத்தை வாங்கிக் கொண்டும் அரசு வழக்கறிஞர் பணியில் நியமித்தால், அவர்களிடம் எப்படி நீதி, நேர்மையை எதிர்பார்க்க முடியும்?

அதிலும், மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்களில் கொலை, கொள்ளை, குழந்தைகள், பெண்களுக்கு எதிராக கடுமையான குற்றங்களை செய்த குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும்.

அதற்கு தகுதி மற்றும்நேர்மையான அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்யவில்லை என்றால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?

அரசு யோசிக்குமா?

முதல்வரின் முயற்சிக்கு மக்களின் ஆதரவு தேவை!




வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'அரசு ஊழியர்கள் எவருக்கும் மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டாம்' என்று, கரூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பகிரங்கமாக கூறியிருப்பது, மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கு முன் தமிழகத்தை ஆட்சி செய்த எந்த முதல்வரும் இப்படி கூறியதில்லை.

அரசு துறைகளில் முற்றிலும் லஞ்சத்தை ஒழிப்பதற்கு முதல்வர் எடுத்து வரும் இம்முயற்சிக்கு, ஊழலில் ஊறிப்போன தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் ஒத்துழைப்பு தரமாட்டார்கள்; ஆனால், கட்சிக்கு அப்பாற்பட்ட பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்; அப்போது தான் ஊழலை ஒழிக்க முடியும்.

உதாரணமாக, பட்டா மாற்றம், புதிய மின் இணைப்பு, ஜாதி சான்றிதழ், தடையில்லா சான்று, பத்திரப்பதிவு, வாகனப் பதிவு, முதியோர் பென்ஷன் போன்றவற்றிற்கு லஞ்சம் கொடுக்காமல் வேலை நடப்பதில்லை.

இதனால், மக்களும் வேலை ஆக வேண்டும் என்பதற்காக, அதிகாரிகள் கேட்கும் லஞ்சத்தை கொடுத்து விடுகின்றனர்.

லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும் என்ற விதியை மாற்றி எழுத நினைக்கிறார், முதல்வர். அவரின் முயற்சிக்கு, பொதுமக்களும் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us