PUBLISHED ON : ஜன 15, 2024 12:00 AM

ந.தேவதாஸ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் உள்ளது. இரண்டு லோக்சபா தேர்தலிலும், அபார வெற்றி பெற்ற பா.ஜ., மூன்றாவது முறையாக வெற்றி பெற வேண்டி, அதற்கான செயல் திட்டங்களை அரங்கேற்றி வருகிறது.
அதேநேரத்தில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றால், தங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கருதிய காங்கிரசும், மற்ற மாநில கட்சிகளும் பா.ஜ.,வை எதிர்கொள்ள, 28 கட்சிகளை சேர்த்து, 'இண்டியா' கூட்டணியை உருவாக்கின.
இதில் முக்கிய பங்கு வகித்தவர், பீஹார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியுமான நிதீஷ் குமார்.
கடந்தாண்டு டிசம்பர் 19ல், புதுடில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது, இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், தங்களுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டை, விரைவில் முடிக்க வேண்டுமென வலியுறுத்தின.
மேற்கு வங்கத்தில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, 'இண்டியா கூட்டணி, நாடு முழுதும் போட்டியிடும். ஆனால், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே, பா.ஜ.,விற்கு தகுந்த பாடம் புகட்ட முடியும்; மற்ற எந்த மாநில கட்சியாலும் முடியாது.
'எனவே எங்கள் கட்சி தனித்து போட்டியிட்டு, பா.ஜ.,வை தோற்கடிப்போம்' என்றார்.
இதேபோல, இண்டியா கூட்டணியில் உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த உத்தவ் பாலசாகேப் தாக்கரே சிவசேனா அணியும் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் பிடிவாதம் காட்டத் துவங்கியுள்ளது.
'காங்., தேசிய கட்சியாக இருந்தாலும், நாங்களும் மிகப் பெரிய கட்சியே... கடந்த லோக்சபா தேர்தலில் பிளவுபடாமல் இருந்த சிவசேனா, 23 இடங்களில் போட்டியிட்டு, 18 இடங்களில் வென்றது; காங்., ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.
'ஆகவே, இம்முறை ஹாவேலி உட்பட, 23 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்; எந்த வித சமரசத்துக்கும் இடமில்லை' என்றது.
இந்நிலையில், தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இக்கூட்டணியில், பா.ம.க., இடம்பெற்றால், காங்கிரசில் உள்ள வன்னிய சமுதாய நிர்வாகிகளுக்கு சீட் கிடைக்காது என்பதால், காங்., கட்சியில் எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.
இதன் வாயிலாக, இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீடு விஷயத்தில் துவக்கத்திலேயே குழப்பமும், முரண்பாடும், முட்டலும் மோதலும் உருவாகி உள்ளது. முடிவாக, 'தடி எடுத்தவன் தண்டல்காரன்' என்ற நிலைக்கு தள்ளப்பட்ட இண்டியா கூட்டணி, ஒரு துடுப்பில்லாத ஓடம்; அது கரை சேருவது கடினம்!
ஆன்மிக போர்வை போர்த்துவது ஏன்?
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி
மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'கடவுள் இல்லை' என்ற
ஈ.வெ.ரா., கொள்கையை வீதி வீதியாக, மேடைதோறும் முழங்கி, ஆட்சியை பிடித்த
தி.மு.க.,வுக்கு எதிராக, குறிப்பாக, திராவிட கொள்கைக்கு எதிராக,
அண்ணாமலையால் பா.ஜ., வேகமாக வளர்ந்து வருகிறது.
அதனால், திராவிட
கொள்கையை கொஞ்சம் தள்ளி வைத்து, 'ஆன்மிக ஆட்சி செய்கிறோம்' என, அறநிலையத்
துறை அமைச்சர் சேகர்பாபு சட்டென, 'டிராக்' மாறுகிறார். 'சித்தர்கள்,
சான்றோர், ஆன்றோருக்கு விழா எடுத்து சிறப்பு சேர்க்கிற ஆன்மிக ஆட்சி,
இப்போது தமிழகத்தில் நடக்கிறது' என, புளகாங்கிதம் அடைந்து உள்ளார்
சேகர்பாபு.
ஆன்மிகம் கடவுள் நம்பிக்கை சார்ந்தது. தி.மு.க.,வின்
திராவிட கொள்கைக்கும், ஆன்மிகத்திற்கு அதிக துாரம். ஆன்மிக ஆட்சி என்றால்,
எல்லா மதமும் சரிசமம் என்று தானே அர்த்தம். அப்படியெனில், கீழ்கண்ட
கேள்விகளுக்கு சேகர்பாபு பதிலளிப்பாரா?
தமிழகத்தில் ஹிந்து கோவில்களுக்கு மட்டும் அறநிலையத் துறை ஏன்? பிற மதங்கள் ஆன்மிகம் அற்றவைகளா?
ஆன்மிக ஆட்சி என்ற பெயரில், சிதம்பரம் போன்ற ஹிந்து கோவில் ஆகம விதிகளில் அறநிலையத் துறை தலையிடுவது
விஷேச நாட்களில் கடவுளை தரிசிக்க அதிகமான கட்டணம் பிடுங்குவது
பெரிய கோவில்களில், பக்தர்களுக்கு போதிய வசதிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது
கோவில் வளாகத்தில் கடைகள் அமைத்து, தனி நபர்கள் கொள்ளையடிக்க வழிவகுத்து கொடுப்பது
கோவில் வருமானத்தை எடுத்து, ஆட்சியாளர்கள் சொகுசாக செலவிடுவது, போன்றவை தான் ஆன்மிக ஆட்சியா?
தமிழகத்தில் பா.ஜ., விஸ்வரூபமாக வளர்ந்து, திராவிட மாடல் ஆட்சிக்கு ஆப்பு வைத்து வருவதால், ஆன்மிக ஆட்சி என்ற போர்வையா?
ஒன்று
மட்டும் உறுதி... நீங்கள் எத்தனை அவதாரம் எடுத்தாலும், ஹிந்து விரோத கட்சி
தி.மு.க., என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பா.ஜ., தலைமையில்,
தமிழகத்திலும் ஹிந்துக்கள் போற்றக்கூடிய ஒரு ஆட்சி அமையும் நாள்
வெகுதொலைவில் இல்லை.
பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டு நியாயமா?
மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதல்வராக இருந்த ருசி பழனிசாமியை விடவில்லை. நாட்டை சூறையாடி கொள்ளையடிக்க வேண்டும் என்று தான் அ.தி.மு.க.,வை அடாவடியாக அபகரித்திருக்கிறார்' என்று பழனிசாமி மீது குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா இறந்த பின், எப்படியாவது முதல்வர் பதவியை அடைந்துவிட வேண்டும் என்ற பேராசை காரணமாகத் தானே, பன்னீர்செல்வத்திடம் இருந்து, அவசரம் அவசரமாக முதல்வர் பதவியை சசிகலா பறித்தார்.
இதைக் கண்டித்து, ஜெயலலிதா சமாதியில் மூன்று மணி நேரம் மவுன விரதம் கடைப்பிடித்து, அவர் தர்மயுத்தம் நடத்தவில்லையா? எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தானே அ.ம.மு.க., என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தார் தினகரன்.
ஜெயலலிதா சிறை சென்ற போதும், சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும், பன்னீர்செல்வம் தானே முதல்வர் பதவியில் இருந்தார்.
'ஒரு முறை முதல்வராக இருந்து விட்டேன்; அதுவே எனக்கு போதும்' என்று சொல்லி, 'முதல்வர் பதவி எனக்கு வேண்டாம். வேறு யாருக்காவது கொடுங்கள்' என்று, பன்னீர்செல்வம், முதல்வர் பதவியை விட்டுத் தரவில்லையே?
முதல்வர் பதவி மீது இருந்த ருசி காரணமாகத் தானே, ஜெயலலிதா இறந்த போதும், கண்ணீர் விட்டு அழுதபடியே முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டார். அப்படி இருக்கும் போது, 'பழனிசாமி பதவி வெறி பிடித்தவர்' என்று பன்னீர்செல்வம் குற்றம் சொல்வது மட்டும் எந்த வகையில் நியாயம்?