PUBLISHED ON : அக் 20, 2025 12:00 AM

டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தை சிங்கிள் அறையிலேயே கூட்டி விடலாம்...' என்று கிண்டல் செய்துள்ளார், பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன்.
ஜி.கே.வாசனின் த.மா.க., கட்சி, தொண்டர்கள் பலம் நிறைந்தது இல்லை என்பதை தான் இப்படி குத்திக் காட்டி விமர்சனம் செய்துள்ளார், துரைமுருகன்.
இதனால், கொந்தளித்துப்போன த.மா.க., தொண்டர்கள், துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
தி.மு.க.,வின் மூத்த அமைச்சராக இருந்தும், வயதுக்கேற்ப அவர் பேசுவதில்லை. சில மாதங்களுக்கு முன், முல்லை பெரியாறு அணை குறித்து பேசும்போது, 'முல்லை பெரியாறு பிரச்னை ஏன் முடிவுக்கு வரவில்லை என்றால், அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரும், கேரள முதல்வரும் தனி அறையில் சந்தித்து பேசினர். அவர்கள் இருவரும் எந்த மொழியில் என்ன பேசினர் என்ற விபரம் எனக்கு தெரியா-து...' என்று நக்கலாக கூறி, எம்.ஜி.ஆர்., மலையாளி என்பதை குத்திக் காட்டினார்.
இத்தனைக்கும் துரைமுருகனை படிக்க வைத்தவர் எம்.ஜி.ஆர்., அவருடைய மதிப்பெண் அட்டையில், தந்தை கையொப்பம் இடவேண்டிய இடத்தில் எம்.ஜி.ஆர்., தான் கையெழுத்திட்டார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், துரைமுருகனை தத்தெடுத்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.
துரைமுருகன் திருமணத்திற்காக, மும்பையில் இருந்து தனி விமானம் வாயிலாக வந்து, 25 சவரன் நகையை அவருக்கு பரிசளித்து மகிழ்ந்தார், எம்.ஜி.ஆர்.,
இப்படி, துரைமுருகன் வாழ்வை உயர்த்தி அழகு பார்த்த எம்.ஜி.ஆரையே, 'மலையாளி, துரோகி' என்று கூறி, கிண்டல் செய்த துரைமுருகன், த.மா.க.,வினரிடமா மன்னிப்பு கேட்கப் போகிறார்-?
காரியம் ஆக வேண்டும் என்றால், இஷ்டத்திற்கு புகழ்ந்து தள்ளுவதும், காரியம் முடிந்து விட்டால், எவரையும் எடுத்தெறிந்து ஏளனம் செய்வதும் அவரது பிறவி குணம்.
நாய் வாலை நிமிர்த்த முடியாதது போல், துரைமுருகனையும் திருத்த முடியாது!
கட்டுப்பாடுகள் அனைத்து நாட்களிலும் தொடரட்டும்!
முனைவர் ப.நாகலிங்கம் பிள்ளை, தாழக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒலிமாசு மற்றும் காற்றுமாசு ஏற்படுவதாக கூறி, தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடிப்பதற்கு பல கட்டுப் பாடுகளை விதித்துள்ளது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். வரவேற் கத்தக்கது தான்.
அதேநேரம், அரசியல் நிகழ்வுகள் மற்றும் திருமணம், காது குத்து, பூப்புனித நீராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளின்போதும், ஏன் சவ ஊர்வலத்தில் கூட காது சவ்வு கிழியுமாறும், மூச்சு முட்டும் வகையிலும் பட்டாசு வெடிக்கின்றனரே... அது காற்றை, ஒலியை மாசு படுத்தவில்லையா?
அப்போது மட்டும், காற்று, ஒலி மாசுக்கள் விதிவிலக்கு பெற்று ஒதுங்கிப் போய் விடுகின்றனவா?
தீபாவளி பண்டிகையின் போது மட்டுமல்ல; எப்போது பட்டாசு வெடித்தாலும் அதன் மாசு, மனித இனத்திற்கு மட்டுமல்லாது பறவை, விலங்கு, பூச்சியினங்கள் என்று எல்லா உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்ததான் செய்யும்.
எனவே, மாசுக்கட்டுபாட்டு வாரியம் தீபாவளி அன்று மட்டும் கட்டுப்பாடு விதிக்காமல், மேற் குறிப்பிட்ட சடங்குகளிலும் பட்டாசு வெடிப்பதற்கு கடுமையான கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும்.
அதை விடுத்து, தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கும் பட்டாசால் தான் உலகமே காற்று, ஒலி மாசால் பாதிக்கப்படுவது போல், அன்று மட்டும் கட்டுப்பாடு விதித்தால், அது, ஒரு மதத்திற்கு எதிராக நடக்கும் செயலாகவே பார்க்கப்படும்!
அமெரிக்காவிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்!
த.யாபேத்தாசன், பேய்க்குளம், துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: அமெரிக்க பொருளாதாரம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதி தான், இந்தியா போன்ற நாடுகளின் மீது சுமத்தப் பட்ட கடுமையான இறக்குமதி வரி.
இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள வணிக சமமின்மை தான் முதல் காரணம்.
அதேபோன்று, விசா பிரச்னை. அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி இந்நட வடிக்கையை எடுத்து வருகிறது, டிரம்ப் அரசு. இது, நம் நாட்டில், 'மண்ணின் மைந்தர்களுக்கே வேலை' என்பது போன்றது தான். ஆனால், இந்நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால், நிர்வாக செலவுகளை கட்டுப் படுத்தும் விதமாக, அரசு ஊழியர்கள் தாமாக முன்வந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்யும் திட்டம் அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, செப்., 30ல் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தனர்.
இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் , மூன்று லட்சத்தை எட்டும் என்றும், இதனால், 12 சதவீதம் பேர் வேலையில் இருந்து வெளியேறி விடுவர் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நடவடிக்கையால் நடப்பாண்டில் அரசுக்கு, 1.30 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். ஆனால், எதிர்காலத்தில் ஆண்டுக்கு, 2.46 லட்சம் கோடி ரூபாய் சேமிப்பாகும் என டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.
இந்த நிதி நெருக்கடி மத்திய - மாநில அரசு களுக்கு பாடமாக அமைய வேண்டும்.
ஏனெனில், 2023ம் நிதியாண்டில், நாட்டிலுள்ள 28 மாநிலங்களில், 16 மாநிலங்கள் வருவாய் உபரியை எட்டியதாகவும், 12 மாநிலங் களில் வருவாய் பற்றாக் குறை நிலவியதாகவும், தலைமை கணக்கு தணிக்கையாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் உபரியை எட்டிய மாநிலங்களில், உ.பி., மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் ஆந்திரா முதலிடத்தையும், தமிழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.
கடன் சுமை, நிதி நெருக்கடி இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் அரசுகள் செயல்படுமேயானால், மிகப்பெரிய கடுமையான நடவடிக்கைகளை, மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்க வேண்டி வரும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இதுதான் இன்று, அமெரிக்காவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம்!