sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

பெருமை பேசலாமா?

/

பெருமை பேசலாமா?

பெருமை பேசலாமா?

பெருமை பேசலாமா?

1


PUBLISHED ON : நவ 06, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 06, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழ.சுந்தரமூர்த்தி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

பருவ மழையின் காரணமாக, கோவையில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இத்தனைக்கும் சாலை பராமரிப்பிற்காக, 200 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கியதாக, நகராட்சி நிர்வாகம் கூறியிருந்தது.

அப்பணம் எவர்களின் பாக்கெட்டுகளுக்கு சென்றதோ, சாலைகள் அனைத்தும் ஒட்டுக்கோவணம் போல் காட்சியளிக்கிறது.

கி.பி., 150வது ஆண்டில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, இன்னமும் எந்தவித சேதமும் இன்றி கம்பீரமாக இருக்கிறது. ஏன்... காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் கட்டப்பட்ட சாத்தனுார், மலம்புழா, அமராவதி, வைகை போன்ற அணைகளும், பாலங்களும், அரசு அலுவலகம் மற்றும் பள்ளி கட்டடங்களும் இன்றும் உறுதியாக, பயன்பாட்டில் இருக்கின்றன.

ஆனால், திராவிட மாடல் அரசு, சாதாரண தார் சாலைகள் அமைத்தால் கூட, சில மாதங்களுக்கு கூட தாக்கு பிடிக்க முடியாமல், குண்டும் குழியுமாக ஆகிவிடுகின்றன. கட்டடங்கள் கட்டினால், கூரை பெயர்ந்து விழுகிறது; பாலம் கட்டினால், மூன்று மாதங்களில் மழை நீரில் அடித்துச் சென்று விடுகிறது.

பெரும் தொகையை கமிஷனாக பெற்று டெண்டர் வழங்கினால், அக்கட்டுமானங்கள் எப்படி தரமானதாக இருக்கும்?

அதிலும், 'பேட்ச் ஒர்க்' என்று வந்து விட்டால், ஒப்பந்ததாரர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது போல் குஷியாகி விடுகிறது. ஒப்புக்கு கல்லையும், மண்ணையும் கொட்டி, தாரை ஊற்றினால் போதும்; அதற்காக ஒதுக்கிய தொகை லம்பமாக அவர்களின் பாக்கெட்டுக்குள் போய் விடும்.

இந்த லட்சணத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, 'ஒரு சாலை அமைத்தால் ஐந்து ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும். டெல்டா மாவட்டங்களில் மட்டும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலை அமைக்க நிதித்துறை உடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்...' என்று, கடந்த சில மாதங்களுக்கு முன், சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல் அரசு அமைத்த எந்த சாலைகள் ஐந்து ஆண்டுகள் வரை தாக்குபிடித்துள்ளன?

பழனி - கொடைக்கானல் சாலையின் நிலையைப் பார்த்தால், வாகனங்களுக்கு வாய் இருந்தால் கதறி அழுது விடும். அந்த அளவு மோசமாக உள்ளது. அதேநேரம், பிரிட்டிஷ் கவர்மென்ட் அமைத்த பெருமாள் மலையிலிருந்து கொடைரோடு வரையிலான சாலை, ஆண்டுகள் பல கடந்தும் அதன் தரத்தை பறைசாட்டுகிறது.

இதில், 'சாலை திட்டங்கள், மேம்பாலம் கட்டுமான பணிகளின் வாயிலாக, மற்ற துறைகளைப் போல நெடுஞ்சாலை துறையிலும் தமிழகம், இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக புதிய வரலாறு படைத்து வருகிறது' என்று பெருமை பேசுகிறார், முதல்வர்.

தமிழக சாலைகளின் லட்சணம் தெரியாமல் போக, மக்கள் அனைவரும் பார்வை திறனை இழந்து விட்டனரா என்ன!

பெருமை பேச முதல்வருக்கு நாவு கூசவில்லையா?

***

எல்லை மீறும் ஜாதி தலைவர்களின் ஆணவம்! குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ராமநாதபுரம், பசும்பொன் கிராமத்தில், --- முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரிடம், 'கூட்டம் அதிகமாக உள்ளது, சிறிது நேரம் காத்திருங்கள்' என்று கூறியுள்ளார் பூஜாரி.

தன்னை காத்திருக்க சொல்வதா என்ற ஆணவத்தில், பூஜாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார், ஸ்ரீதர் வாண்டையார்.

'தேசியமும், தெய்வீகமும் தன் இரு கண்கள்' என்று கூறி, அதன்படி வாழ்ந்தவர், முத்துராமலிங்கத் தேவர். தன் சொத்தை எல்லாம் ஏழை மக்களுக்கு தானமாக வழங்கிய பெருந்தன்மையாளர். அவரது நினைவிடத்தில், இதுபோன்று நடந்து கொள்வதை என்னவென்பது!

தேசபக்தியை உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்த அந்த செயல்வீரருக்கு செலுத்தும் மரியாதை இதுதானா?

லெட்டர் பேடு, ஜாதி கட்சி தலைவர்களின் ஆணவம், மமதை எந்த அளவிற்கு எல்லை மீறி செல்கிறது என்பதற்கு இச்சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு.

இதுபோன்று தான், சமீபத்தில், வி.சி., தலைவர் திருமாவளவன் முன்னிலையில், வழக்கறிஞர் ஒருவரை, அக்கட்சியின் குண்டர் படை தாக்கியது.

அச்செயலை தடுக்காமல், 'முறைத்துப் பார்த்ததால் அடித்தனர்' என்று கூறி, தன் கட்சியினர் செய்த செயலுக்கு முட்டுக் கொடுத்தார், திருமாவளவன்.

தேசிய தலைவர்களான அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், காமராஜர் போன்றவர்களை இதுபோன்ற ஜாதி கட்சிகள் உரிமை கொண்டாடி, ஆணவத்தில் ஆடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அவர்களது நினைவிடங்களை தேசிய சின்னங்களாக அறிவித்து, ஜாதியை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மத்திய அரசு மூக்கணாங்கயிறு போட வேண்டும்!

***

சாதனை அல்ல; வேதனை! சி.பன்னீர்செல்வம், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மாநிலமாக திகழ்வதாக கூறி, அடிக்கடி பெருமைப்படும் முதல்வர் ஸ்டாலின், தன் கட்சியினரை வைத்து, தன் ஆட்சியின் சாதனை என்று கூறி விழா எடுத்தும் மகிழ்கிறார்.

அதேநேரம், தமிழகம் எதில் முன்மை மாநிலம், முதல்வர் எதற்கு பெருமைப்படுகிறார் என்பது மக்களுக்கு புரிவதில்லை.

காரணம், ஆண்டுதோறும் மது விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, 140 கோடி ரூபாய் வருவாய் அதிகமாம்!

ஆண்களையெல்லாம் இப்படி போதைக்கு அடிமையாக்கி விட்டால், சாதனை எப்படி நிகழ்த்த முடியும்?

ஒவ்வொரு வீட்டு இல்லத்தரசிக்கும் இவர்களால் சோதனை தான் ஏற்படும்!

இதேபோன்று தான், நெல் கொள்முதல் நிலையங்கள்!

போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாததால், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, தானியங்கள் வீணாகின்றன.

வெற்று விளம்பரங்களுக்கும், இலவச திட்டங்களுக்கும் செலவு செய்வதை குறைத்து, இதுபோன்று மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் அல்லவா சாதனை புரிய முடியும்?

சரியான நேரத்தில் நெல் கொள்முதல் செய்து, அவற்றை அரிசியாக்கி, உடனுக்குடன் நியாய விலைக்கடைகளில் வழங்கினால், மக்களுக்கும் தரமான அரிசி கிடைக்கும்.

இலவச அரிசி கொடுப்பதற்கு பதில், தரமான அரிசியை குறைந்த விலைக்கு விற்கலாம். காரணம், ரேஷனில் வழங்கப்படும் அரிசியை, வெகு சிலரே சமைத்து சாப்பிடுகின்றனர். மற்றவர்கள் சிறிய சிற்றுண்டி கடைகளுக்கு விற்றுவிடுகின்றனர்.

இப்படி, மக்கள் நலன் சார்ந்த வழிகளில் வருமானம் ஈட்டினால் அல்லவா தமிழகம் தன்னிறைவு பெற்ற, முதன்மை மாநிலமாக சரித்திரம் படைக்கும்!அதைவிடுத்து, டாஸ்மாக் விற்பனை வாயிலாக சரித்திரம் படைக்க நினைத்தால், அது, தரித்திரத்தில் தான் முடியும்!

***






      Dinamalar
      Follow us