PUBLISHED ON : ஜூலை 30, 2026 12:00 AM

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1956ல் மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் அமைச்சரவையில், ரயில்வே துறை அமைச்சராக இருந்தவர் லால் பகதுார் சாஸ்திரி; சென்னையிலிருந்து சென்ற துாத்துக்குடி எக்ஸ்பிரஸ், அரியலுார் அருகே மருதையார் பாலத்தை கடந்த போது, மழை வெள்ளத்தால் விபத்துக்குள்ளானது. இதில், 150க்கும் மேற்பட்ட பயணியர் உயிரிழந்தனர்.
இது ஒரு விபத்து என்றாலும், அதற்கு தார்மீக பொறுப்பேற்று, தன் பதவியை ராஜினாமா செய்தார், சாஸ்திரி.
அதன்பின் வந்த மத்திய அரசுகளில் எத்தனையோ அமைச்சர்கள் தங்கள் துறை சார்ந்த தவறுகளுக்கும், ஊழல் குற்றச்சாட்டுக்கும் பொறுப்பேற்று, தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அவ்வகையில், 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்பட்ட போதே, அதற்கு தார்மீக பொறுப்பேற்று, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன் பதவியை ராஜினாமா செய்து இருந்தால், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் குதித்து இருக்க மாட்டார்கள்; அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டு இருக்காது!
மேலும், கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு நடத்தும் பல்வேறு பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்து வருகின்றன. அதிலும், நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதும், குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஒருவர் கூட தற்போது வரை தண்டிக்கப்படாததுமே, குற்றம் செய்வோருக்கு துணிச்சலை கொடுத்துள்ளது.
முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது ஆரம்பத்திலேயே கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், நீட் வினாத்தாள் கசிவால், சில மாணவர்கள் தற்கொலை செய்திருப்பது நடந்திருக்காது.
மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசுகளாக இருந்தாலும் போட்டி தேர்வுகளை நடத்தும் போது, முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கினால் தான், மாணவர்களுக்கு தேர்வுகள் மீது நம்பிக்கை ஏற்படும். இல்லையென்றால், இன்று ஒரு கரப்பான் பூச்சி அமைப்பு உருவானது போல், நாளை ஒரு கம்பளி பூச்சி அமைப்பு உருவாகி போராடத்தான் செய்யும்.
ஜனநாயக போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதை காட்டிலும், தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோரை ஓர் அரசால் எளிதில் தடுக்க முடியுமே!
எனவே, வருங்காலத்திலாவது மத்திய - மாநில அரசுகள் தும்பை விட்டு வாலைப் பிடிக்காமல், போட்டி தேர்வுகளில் முறைகேடு செய்வோரை களையெடுக்க வேண்டும்!
-------
எரிச்சலின் தாக்கமே விமர்சனம்!
க.சோணையா, திருமங்கலம்-, மதுரை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம், ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது.
அதேநேரம், தமிழகத்தில் இது குறித்து எந்தவித சலனமும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால், தமிழக முதல்வர் விஜய் நடித்த, ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸான அன்று, திடீரென திரைத்துறையைச் சேர்ந்த கும்பல் ஒன்று, சில மாணவர் அமைப்புகளுடன் சேர்ந்து, நீட் தேர்வு எதிர்ப்பு கோஷத்துடன் களத்தில் இறங்கியது.
அத்துடன், 'நாமெல்லாம் இங்கு ஜனநாயகத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மூடர் கூட்டம் ஒன்று அங்கே, ஜனநாயகன் திரைப்படம் பார்க்க தியேட்டரில் கூடியிருக்கிறது' என்று பேசியுள்ளார், அக்கூட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித்.
அப்படி என்றால், இவர் இயக்கிய கபாலி, காலா, அட்டக்கத்தி படம் பார்த்தவர்கள் எல்லாம் அதி மேதாவிகளோ... அவர்களும் மூடர் கூட்டம் தானே?
அந்த மூடர் கூட்டத்தின் தயவில் பிழைப்பு நடத்தும் ரஞ்சித் போன்றவர்கள் என்ன வகையான கூட்டத்தை சேர்ந்தவர்கள்?
தன் தலைவரின் கடைசி படம் என்பதாலும், அவர் மீதான அன்பின் மிகுதியாலும் தியேட்டரில் கண்ணீர் விட்டார் ஓர் அமைச்சர்.
உடனே, 'ஆட்சி என்பது சினிமா கிடையாது; மக்கள் பிரதிநிதிகள் தியேட்டர்களில் அழுது நாடகம் நடத்தக்கூடாது' என்று, அறிவுரையை அவிழ்த்து விட்டுள்ளார், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா. தன் மகன்களுடன், அவரது கணவர் விஜயகாந்த் நடித்த படத்தைப் பார்த்து தேம்பி தேம்பி அழுதாரே பிரேமலதா... அது யாரை ஏமாற்ற போட்ட நாடகம்?
அடுத்தவருக்கு தான் அறிவுரையா?
ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது... 197௭ல் ஒரு நடிகராக எம்.ஜி.ஆர்., செய்த சாதனையை, 2026ல் நடிகர் விஜய் செய்து காட்டியிருப்பது, அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல; தங்களை தாங்களே அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்ளும் பா.ரஞ்சித் போன்ற சினிமாக் காரர்களுக்கும் பொறாமையில் வயிறு எரிகிறது. அந்த எரிச்சலின் வெளிப்பாடே, இதுபோன்ற ஒப்பாரிகளுக்கு காரணம்!
-------
கள்ள பூசாரிகளை துாக்கி எறிய வேண்டும்!
ஜி.தேவராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பின், அரசு துறைகளில் ஊழல் நடக்கவில்லை என்கின்றனர், அக்கட்சியினர்.
தமிழக அரசு ஓய்வூதியரான என் தாய், 2025 மார்ச் -மாதம் காலமானார். அரசு விதிகளின்படி குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து அவரது வாரிசுக்கு, 50,௦௦௦ ரூபாய் -தர வேண்டும்.
வாரிசுதாரரான என் சகோதரர், 2025 ஏப்., 27-ல் அரக்கோணம் சார்நிலை கருவூலத்தில் விண்ணப்பம் அளித்தார். ஆனால், இன்று வரை மேற்படி தொகை வழங்கப்படவில்லை.
கருவூல அலுவலர், ராணிப்பேட்டை கலெக்டர், ஓய்வூதிய துறை இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் நினைவூட்டல் கடிதங்கள் மற்றும் நேரடி கோரிக்கைகள் வைத்தும் எவரும் கண்டுகொள்ளவில்லை.
அதேபோன்று, சென்னை அம்பத்துாரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கினார், என் மகள். அந்த வீட்டின் சொத்து வரி விதிப்பில் பெயர் மாற்றம் செய்ய, சென்னை மாநகராட்சி அம்பத்துார் அலுவலகத்தில் 2026 பிப்., 27-ல் விண்ணப்பம் கொடுக்கப்பட்டும், நேரிலும், தொலைபேசியிலும் பலமுறை கேட்டும், இன்று வரை பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.
முதல்வர் விஜய் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை தர நினைக்கிறார். ஆனால், அதற்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டுமே!
கடவுள் வரம் கொடுத்தாலும், அதை தடுக்க நினைக்கும் இந்த கள்ளப் பூசாரிகளை முதல்வர் விஜய் துாக்கி எறிய வேண்டும்; இல்லாவிட்டால், மக்கள் பிரச்னைகள் தீரப் போவதில்லை!
