தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ லஞ்ச ஒழிப்பில் கரம் கோர்ப்போம்!

 லஞ்ச ஒழிப்பில் கரம் கோர்ப்போம்!

 லஞ்ச ஒழிப்பில் கரம் கோர்ப்போம்!

3


PUBLISHED ON : ஜூலை 20, 2026 01:21 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 20, 2026 01:21 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதல்வர் விஜய் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதுடன், ஊழல் அற்ற நிர்வாகம் தர வேண்டும் என்பதில் உறுதியாக உ ள்ளார்.

அவ்வகையில் தற்போது லஞ்சம் கேட்டால் புகார் செய்ய, '94981 80936' என்ற, 'வாட்ஸாப்' எண்ணை அறிமுகம் செய்துள்ளார்.

இதை மற்ற பத்திரிகைகளை போல் ஒரு செய்தியாக வெளியிட்டு, 'தினமலர்' நாளிதழ் கடந்து போயிருக்கலாம்; அவ்வாறு செய்யாமல், நாளிதழின் முதல் பக்கத்தில் தமிழக அரசின் 'வாட்ஸாப்' எண் மற்றும் கைப்பேசி எண்கள், பேக்ஸ் எண், இ -- மெயில் முகவரி மற்றும் அலுவலக முகவரி என அனைத்தையும் பெரிதாக வெளியிட்டது.

அத்துடன் நின்றுவிடாமல், 'லஞ்சம் கேட்கிறார்களா... தயங்காம, 'டயல்' செய்யுங்கள்' என்று விளம்பரமும் செய்து, அந்த விளம்பரத்தின் கீழ், 'லஞ்சம், ஊழலுக்கு எதிரான போரில் இணையுங்கள் வாசகர்களே' என்று அறை கூவி அழைத்துள்ளது.

இது, 'தினமலர்' நாளிதழின் சமூக அக்கறையையும், ஊழலுக்கு எதிரான அதன் அறப்போராட்டத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

எனவே, ஒவ்வொரு வாசகரும் தினமலர் நாளிதழ் காட்டிய வழியில், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கைகோர்க்க வேண்டும்.

ஊழல் கட்சிகளுக்கு எதிராக தான், 1.72 லட்சம் வாக்காளர்கள் த.வெ.க.,விற்கு ஓட்டு போட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும்,'தினமலர்' நாளிதழின் விளம்பரத்தை நகல் எடுத்தோ, 'கட்' செய்தோ, அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொது மக்கள் பார்வையில் படும்படி ஒட்ட வேண்டும்.

அனைவரும் சேர்ந்து ஊழல் எனும் அரக்கனை அரசு இயந்திரத்தில் இருந்து அகற்றினாலே போதும்; தமிழகம் விரைவில் அனைத்து துறைகளிலும் முதன்மையான மாநிலமாக மாறிவிடும்.

கூடவே, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, 100 சதவீதம் நேர்மையாக தன் கடமையை செய்யும் பட்சத்தில், முதல்வர் விஜயின் கனவு மட்டும் அல்ல; நம் கனவும் நிறைவேறும்!

அக்கறையுடன் சொல்கிறேன் கவனிக்குமா அரசு?




எம்.கருணாநிதி, ஓய்வு பெற்ற காவல் துறை கண் காணிப்பாளர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: இரண்டு பெண்கள், ஆற்றில் குளிக்கச் சென்று கொண்டிருந்தனர். வழியில், வயல் வெளியில் ஒருவர், வெறும் தரையில் சிறிய வரப்பின் மீது தலைவைத்து படுத்திருந்தார்.

இரண்டு பெண்களில் ஒருவர், 'அங்கே பார்... அவர் சாமியார் போலிருக்கிறது. வெறும் தரையில் படுத்திருக்கிறார்...' என்றார். மற்றொருவர், 'அவர் சாமியார் அல்ல... வரப்பில் சுகமாய் தலை வைத்திருக்கிறார் பார்...' என்றார்.

படுத்துக் கொண்டிருந்தவர், இதைக் கேட்டு, வரப்பை விட்டு ஒதுங்கி, தரையில் படுத்தார். குளிக்கச் சென்ற பெண்கள் திரும்பி வரும்போது, தரையில் படுத்துக் கொண்டிருந்தவரைப் பார்த்தனர். 'பார்த்தியா... அவர் சாமியார் தான். தரையில் படுத்துவிட்டார் பார்...' என்றார் ஏற்கனவே, அவரை சாமியார் என்று கூறிய பெண்.

மற்றொரு பெண்ணோ, 'இவர் சாமியார் அல்ல. நாம் ஆற்றுக்குப் போகும்போது பேசியதைக் கேட்டு, 'நைசாக' தரையில் படுத்து விட்டார்' என்றார்.

அது போல, ஒரு உத்தரவைப் பிறப்பித்து, யாரோ ஏதோ சொல்கின்றனர் என்பதற்காக, அந்த உத்தரவை வாபஸ் வாங்குவது, நம் தமிழக அரசுக்கு நல்லதல்ல.

உத்தரவைப் பிறப்பிக்கும் முன், தீர விசாரித்து, சாதக பாதகங்களை சீர்துாக்கிப் பார்த்து உத்தரவு போட்டால், பொய் பிரசாரம் செய்யும் சமூக ஊடகங்களின் பசிக்கு இரையாகாமல் இருக்கலாம்.

அக்கறையுடன் சொல்கிறேன்; அரசு கவனம் செலுத்தலாமே!

பட்டா வழங்க இழுத்தடிக்கலாமா?


கி.சந்தானகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே பிள்ளையார் குளம் கிராமத்தில், 1943ல் என் தாய் ரெங்கநாயகி அம்மாள் தன் பெயரில் காலி மனை ஒன்றை கிரயத்திற்கு வாங்கி, ஸ்ரீவில்லிபுத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவும் செய்துள்ளார்.

கடந்த 1997ல், என் தாய் காலமானார். அதனால், நானும், என் மூன்று சகோதரர்களும் கூட்டுப்பட்டா வழங்கக் கோரி, 1997, டிச., 15ல் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தோம்.

கலெக்டர் எங்கள் மனுவை, ஸ்ரீவில்லிபுத்துார் தாசில்தாருக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பியதாக, கடிதம் வாயிலாக தகவல் பெற்றோம்.

அன்றிலிருந்து இன்று வரை விருதுநகர் கலெக்டர் மற்றும் சிவகாசி கோட்டாட்சியரிடம் பலமுறை விண்ணப்பித்து விட்டேன்.

இதற்கிடையே, 2018ல் எங்கள் தாயின் பெயரில் இருந்த பட்டா வேறு ஒருவர் பெயரில் உள்ளதை அறிந்து, வழக்கறிஞர் வாயிலாக, 1940 முதல் 1965 வரை உள்ள வில்லங்க சர்ட்டிபி கேட்டுகளுடன் நேரில் சென்று, சிவகாசி கோட்டாட்சியர் அலு வலகத்தில் புகார் அளித்தோம்.

அவர்கள் உடனடியாக மாற்று பயனாளி பெயரை நீக்கி, மக்கள் குடியிருக்கும் இடம் என்பதாக, 'நத்தம்' என்று குறிப்பிட்டு கொடுத்தனர்.

இந்நிலையில், என் மூன்று சகோதரர்களும் காலமாகிவிட்டனர். குறைதீர்க்கும் முகாம், முன்னாள் முதல்வர் அலுவலகம் என்று முறை யிட்டும் பலன் இல்லை.

அதனால் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.

கடந்த மார்ச் 24ம் தேதி, 12 வாரங்களுக்குள் பட்டா வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தது, நீதிமன்றம்.

அதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்துார் வட்டாட்சியருக்கு ஜூன் 3ம் தேதி உத்தரவு நகலுடன், பதிவு தபாலில் மனு அளித்தேன். ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில், அசல் ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கடிதம் அனுப்பிஉள்ளனர்.

நீதிமன்றம் உத்தரவிட்டும் மீண்டும் விசாரணைக்கு அழைப்பது எந்த வகையில் நியாயம்? 84 வயதாகும் என்னால், சென்னையில் இருந்து, 10 மணி நேரம் பயணம் செய்து ஸ்ரீவில்லிபுத்துார் போய் வர முடியுமா?

எங்களுக்கு உரிமையான ஓர் இடத்திற்கு, ஒரு பட்டா வழங்க இத்தனை அக்கப்போரா? இதை தட்டிக் கேட்க யாரும் இல்லையா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us