தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/நவோதயா பள்ளிகளுக்கான முட்டுக்கட்டை உடைக்கப்படுமா?

நவோதயா பள்ளிகளுக்கான முட்டுக்கட்டை உடைக்கப்படுமா?

நவோதயா பள்ளிகளுக்கான முட்டுக்கட்டை உடைக்கப்படுமா?


PUBLISHED ON : ஜூலை 19, 2026 12:22 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 19, 2026 12:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.கீதாஞ்சலி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'மத்திய அரசின் திட்டங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, நவோதயா பள்ளிகளை தமிழக அரசு நிராகரிக்கக் கூடாது; தமிழகத்திற்கு என்று தனித்துவமான கல்வி முறை இருக்கலாம். அதற்காக மத்திய அரசுப் பள்ளிகளைத் தடுக்காதீர்கள்; நாங்கள் ஏன் இதை ஏற்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை வேண்டாம்' என்று தமிழக அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது, உச்ச நீதிமன்றம்.

கடந்த தி.மு.க., ஆட்சியில், ஏழை - எளிய மாணவர்களின் கல்வி நலன் குறித்து சிந்திக்காமல், மத்திய அரசு கொண்டு வரும் திட்டம் என்ற ஒரே காரணத்திற்காகவே, நவோதயா பள்ளிகளை எதிர்த்து வந்தனர், தி.மு.க.,வினரும், அதன் கூட்டணி கட்சியினரும்!

அதற்கு சப்பைக்கட்டாக, 'நவோதயா பள்ளிகள் வாயிலாக ஹிந்தியை திணிக்கப் பார்க்கிறது மத்திய அரசு' என்ற பொய்யை பரப்பினர்.

அதேநேரம், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களோ, நவோதயா பள்ளிகளை ஏற்று, வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றன.

நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகள் வாயிலாக, சர்வதேச தரத்திலான, சி.பி.எஸ்.இ., கல்வியை ஏழை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறது, மத்திய அரசு. இதனால், மாநில கல்விக் கூடங்களுக்கோ, இருமொழி கொள்கைக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அது நன்றாக தெரிந்திருந்தும், 'நவோதயா பள்ளிகளை அனுமதித்தால், கட்சியினர் நடத்தும் கல்விக் கூடங்கள் பாதிக்கப்படும்; ஏழை மாணவர்கள் உலகத்தரத்திலான கல்வியை பெற்று விட்டால், வருங்காலத்தில் நம் கட்சியின் கொடியை பிடிக்க, துதிபாட ஆட்கள் இருக்க மாட்டார்கள்' என்ற, 'தொலைநோக்கு'சிந்தனையில், இதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது, தி.மு.க.,

தற்போது, மாற்றத்தை முன் வைத்து ஆட்சி நடத்தும் புதிய அரசாவது, முந்தைய தி.மு.க., அரசின் இந்த சுயநல சிந்தனைகளை விடுத்து, கல்வியின் முக்கியத்துவத்தை மட்டுமே யோசித்து, உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று, நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் தடையின்றி துவங்குவதற்கும், கிராமப்புற மாணவர்கள் சிறந்த கல்வியை பெறுவதற்கும் ஆவன செய்ய வேண்டும்!

க.ஹேமமாலினி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன், குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் இருந்த போது உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லையே...' என்று குற்றஞ்சாட்டுகின்றனர், எதிர்க்கட்சியினர்.

ஆட்சி மாற்றம் மட்டுமே, காவல் துறையின் அத்துமீறல்களுக்கு தீர்வாகி விடுமா?

ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின்படி, ஒரு லட்சம் பேருக்கு, 222 காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு, 132 காவலர்கள் தான் உள்ளனர்.

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய காவல் நிலையங்களும், பணிகளும் உருவாக்கப்பட்டுள்ளதால், வழக்கமான விடுமுறை, ஓய்வு மற்றும் அலுவலகப் பணிகள் போக, களத்தில் இருக்கும் காவலர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.

இதனாலேயே, காவலர்கள் கடுமையான பணி சுமைக்கு ஆளாகி, மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

அதன் விளைவே இதுபோன்ற, 'லாக்கப்' மரணங்கள்!

அணையில் தேக்கப்பட்டிருக்கும் நீர் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருந்தால் தான், அணை பாதுகாப்பாக இருக்கும். நீரை வெளியேற்றாமல் தண்ணீரை மட்டும் தேக்கிக் கொண்டே இருந்தால், ஒரு கட்டத்தில் அணை உடைந்து சுற்றுப் பகுதியை அழித்து விடும். அதுபோன்று தான் மனித மனமும்!

காவலர்களுக்கு போதிய ஓய்வு இருந்தால் தானே தர்மம், நியாயம் குறித்து சிந்திக்கவாவது முடியும்?

மனம் ஆரோக்கியமாக, நிதானமாக இல்லை என்றால் அது மிருகமாகத் தான் மாறும்.

எனவே, இதுபோன்ற லாக்கப் மரணங்களை தவிர்க்க வேண்டும் என்றால், தமிழக அரசு முதலில், காவல் துறையின் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

அத்துடன், சுழற்சி முறையில் வார விடுமுறையும், பண்டிகை கால விடுமுறையையும் அளிக்க வேண்டும். கூடவே, யோகா பயிற்சிகளையும், ஆண்டுக்கு ஒரு முறை மனநல மருத்துவர்கள் வாயிலாக, காவலர்களுக்கு மனநல ஆலோசனையும் வழங்க வேண்டும்.

இந்த அடிப்படை பிரச்னைகள் சரி செய்யப்பட்டால் மட்டுமே, சட்டம் - ஒழுங்கை சரி செய்ய முடியும்; 'லாக்-கப்' மரணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்!

பசித்தவர்களுக்கு தான் உணவு பரிமாற வேண்டும்!


கெ.சந்திரா, நாகமலை புதுக்கோட்டை, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

கடந்த தி.மு.க., ஆட்சியில், பொருளாதார வசதியுள்ள பெண்களும் மகளிர் உரிமைத் தொகையை பெற, பொய்யான தகவல்களை கூறி விண்ணப்பித்து, மாதந்தோறும், 1,000 ரூபாய் வாங்கினர்.

அதேபோன்று தான், மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டமும்!

ஏழை - எளிய பெண்களுக்கு மட்டும் இலவச பஸ் பாஸ் கொடுத்து, இத்திட்டத்தை நிறைவேற்றி இருந்தால், போக்குவரத்து துறை இந்த அளவு நலிவடைந்து இருக்காது.

அலுவலகம் சென்று கைநிறைய சம்பாதிக்கும் பெண்களும் பயன்பெறுமாறு, அனைவருக்குமான இலவச பேருந்து பயணத் திட்டமாக செயல்படுத்தியதால், போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய பணப்பலனைக் கூட, அன்றைய, தி.மு.க., ஆட்சியாளர்களால் கொடுக்க முடியவில்லை.

தமிழக வெற்றிக் கழக அரசாவது இலவச பேருந்து பயணத் திட்டத்தை, ஏழை - எளிய மகளிருக்கு மட்டுமானதாக மாற்றினால், அரசின் நிதிச்சுமை குறையும்; போக்குவரத்து துறையின் கடனும் அடையும்!

அரசின் நலத்திட்டங்கள் எதுவாயினும், அது தேவைப்படுவோருக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்; அனைவருக்கும் கொடுத்து, நிதிச்சுமையில் அரசு சிக்கிக் கொள்ளக் கூடாது.

பசித்தவர்களுக்கு தான் உணவு பரிமாற வேண்டுமே தவிர, புளிச்ச ஏப்பக்காரனுக்கு பரிமாறுவதால் எந்த நன்மையும் ஏற்படாது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us