தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/கொடுப்பவரை கண்டால், யாசிப்பவருக்கு கொண்டாட்டம்!

கொடுப்பவரை கண்டால், யாசிப்பவருக்கு கொண்டாட்டம்!

கொடுப்பவரை கண்டால், யாசிப்பவருக்கு கொண்டாட்டம்!


PUBLISHED ON : ஜூலை 18, 2026 12:59 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2026 12:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தாலும், த.வெ.க., கூட்டணியில் இணைய அதிகாரபூர்வமாக எந்த நிகழ்வும் நடக்கவில்லை. பதவி என்றவுடன், தி.மு.க., கூட்டணியை உதறிவிட்டு செல்லவில்லை. தி.மு.க.,வுடன் உறவும் நீடிக்கிறது; நட்பும் தொடர்கிறது' என்று கூறியுள்ளார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க., கூட்டணியில் ஆட்சியாளர்களின் முறைகேடுகளையும், தவறுகளையும் கண்டு கொள்ளாமல், அதற்கு ஒத்து ஊதிக் கொண்டிருந்தவர், திருமாவளவன்.

சட்டசபை தேர்தலின் போது, இரட்டை இலக்க தொகுதிகளை பெறுவதற்காக, த.வெ.க.,விற்கு தாவி விடுவது போல் பம்மாத்து காட்டி, தி.மு.க.,வை பயமுறுத்திக் கொண்டிருந்தார். பின், எப்படியோ ஒருவழியாக, தி.மு.க., அவரை சரிக்கட்டவே, வழக்கம் போல், 'பா.ஜ., உள்ளே வந்துவிடும்' என்ற, 'டயலாகை' கூறி, தி.மு.க., கொடுத்த எட்டு தொகுதிகளை பெற்றார்.

அப்போதும், திருமாவின் கணக்கு வேறு விதமாக தான் இருந்தது. 'சட்டசபை தேர்தலில், தி.மு.க., பெரும்பான்மை பெறாது; இச்சமயம் மாநில அரசியலில் குதித்தால், தி.மு.க.,விற்கு நெருக்கடி கொடுத்து, துணை முதல்வர் பதவியை பெறலாம்' என்று கணக்கு போட்டு, தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, காட்டு மன்னார் கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட நினைத்தார்.

இந்த சூட்சுமங்கள் எல்லாம் அறியாதவரா தி.மு.க., தலைவர் ஸ்டாலின்... திருமாவின் வேகத்திற்கு, 'ஸ்பீட் பிரேக்' போட்டு தடுத்து விட்டார்.

இந்நிலையில், அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கி, த.வெ.க., வெற்றி பெற்றது. ஆனாலும், அரியணை ஏற போதிய எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத நிலையை பயன்படுத்தி, வழக்கம் போல், 'பா.ஜ., உள்ளே வந்து விடும்' என்று கூறி, தி.மு.க.,விலிருந்து த.வெ.க.,விற்கு தாவி, அப்படியே ஓர் அமைச்சர் பதவியையும் பெற்று விட்டார், திருமாவளவன்.

ஆனாலும் திருமாவளவன் மனதில் சந்தோஷம் இல்லை. காரணம், தி.மு.க., கூட்டணியில் கிடைத்த, 'லாபங்கள்' த.வெ.க., கூட்டணியில் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் தான்!

அதனால் தான், வளம் கொழிக்கும் வாரிய பதவிகளுக்கு துண்டு போடும் விதமாக, 'தி.மு.க.,வுடன் இன்னும் நாங்கள் உறவை முறித்துக் கொள்ளவில்லை' என்று த.வெ.க.,விற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்!

கொடுப்பவரைக் கண்டால், யாசிப்பவருக்கு கொண்டாட்டமாகத் தானே இருக்கும்!

வல்லவனுக்கு வல்லவன்!


ஆர்.சேஷாத்திரி, சென்னையில் இருந்து எழுதுகிறார்:

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல், தமிழக முதல்வர்விஜய் ஒரே கல்லில் பல மாங்காய் அடித்து உள்ளார்.

கழக ஆட்சிகளுக்கு எதிராக, வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் உட்பட எத்தனையோ கட்சிகள் தோன்றினாலும், கால ஓட்டத்தில் அவை, கழகங்களுடன் இணைந்து பயணிக்க துவங்கினவே தவிர, கழகங்களை எவராலும் அசைக்க முடியவில்லை.

இந்நிலையில், 'பொதுக்கூட்டங்களில் பேசத் தெரியாதவர், எழுதிக் கொடுப்பதை வாசிப்பவர், நடிகர், அரசியல் அனுபவம் இல்லாதவர்' என்று பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில், தேர்தலில் தனித்து நின்று, இரு கழகங்களையும் வீழ்த்தி, ஆட்சி பொறுப்புக்கும் வந்து விட்டார்.

ஆட்சிக்கு வந்த கை யோடு, தி.மு.க.,வின் பலமிகுந்த கூட்டணி பலவாறாக சிதைந்து போனது.

அ.தி.மு.க.,வின் நிலையோ அந்தோ பரிதாபம்!

பெரிய தலைகள் முதல், மாவட்ட செயலர்கள் என பலரும், த.வெ.க.,வில் ஐக்கியமாகி விட்டனர். அ.தி.மு.க.,வின் கூடாரம் நாளுக்கு நாள் காலியாகி, 'எங்கே செல்லும் இந்த பாதை' என்ற ரீதியில் சோக கீதம் இசைத்துக் கொண்டிருக்கிறது.

தி.மு.க., இன்று வயதானவர்களின் கூடாரமாக உள்ளது.

'எவராலும் அசைக்க முடியாத இரும்புக் கோட்டை எங்கள் கூட்டணி' என்று, தேர்தலுக்கு முன் வரை பெருமை பேசிய தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகளான, காங்., - கம்யூ., - ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் போன்றவை, தேர்தல் முடிவிற்கு பின், தி.மு.க.,வை, 'அம்போ' என விட்டுவிட்டு, த.வெ.க., பக்கம் கம்பி நீட்டி விட்டன.

இப்போது, தனியே விழித்துக் கொண்டு இருக்கிறது, தி.மு.க.,

பா.ஜ., - காங்கிரஸ் என தேசிய கட்சிகளாலேயே அசைக்க முடியாத சக்தியாக இருந்த கழகங்களை, புதிதாக பிறந்த த.வெ.க., எனும் குழந்தை, ஒரே தேர்தலில் நிலை குலைய வைத்து விட்டது.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருக்கத் தானே செய்வர்!

எல்.ரவி, ஆசிரியர், (பணி நிறைவு) செ.புதுார், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1983-ல் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, 'புரட்சித்தலைவர் சத்துணவுத் திட்டம்' என்ற பெயரில் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

இதில் பட்டம் பெற்றவர்களும், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும், சத்துணவு அமைப்பாளர் பணியில் சேர்ந்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சத்துணவு அமைப்பாளர்களில் தகுதி உள்ள ஊழியர்களை, அரசின் பல்வேறு துறைகளில் தொகுப்பூதிய அடிப்படையில், 2004ல் பணி நியமனம் செய்தார்.

பணி ஓய்வுக்கு பின், கிட்டத்தட்ட, 3,000 பேர் எவ்வித ஓய்வூதியமும் இல்லாமல், 70 வயதை கடந்த நிலையில், உணவுக்கும், மருந்து மாத்திரை வாங்குவதற்கும் கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

தங்களின் வாழ்வாதாரத்திற்காக, குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் வேண்டி, இதுவரை பல அறப்போராட்டங்களை நடத்தி விட்டனர்; எந்த அரசும் இவர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்யவில்லை.

பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட வயது முதிர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சத்துணவு மேற்பார்வையாளர்களுக்கு, உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டமான, 'டாப்ஸ்' திட்டத்தின்படி, 2026 ஜன., 1க்கு முன் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் அகவிலைப்படியுடன் வழங்கி, முதல்வர் விஜய் முதியோரின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us