தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ இலவச திட்டங்கள் வேண்டாமே முதல்வரே!

 இலவச திட்டங்கள் வேண்டாமே முதல்வரே!

 இலவச திட்டங்கள் வேண்டாமே முதல்வரே!

1


PUBLISHED ON : ஜூலை 21, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 21, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2009ல் தி.மு.க., ஆட்சியில், 100 ரூபாயில் துவங்கிய பொங்கல் இலவசம், 2021 அ.தி.மு.க., ஆட்சியில் 2,500 ரூபாயாகவும், 2026ல் தி.மு.க., ஆட்சியில் 3,000 ரூபாயாகவும் உயர்ந்தது.

இப்படி இரு திராவிட அரசுகளும் மாறி மாறி பொங்கல் இலவசம் கொடுத்து வந்த போதிலும், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் தோல்வியே அடைந்தன.

காரணம், இலவச திட்டங்களில் காட்டிய ஆர்வத்தை, பொது சுகாதாரம், தரமான கல்வி, வேளாண் மேம்பாடு, தொழில் கட்டமைப்பு போன்ற விஷயங்களில் காட்டவில்லை.

இலவசங்களால் மட்டும் மக்களின் மனங்களை வென்று விட முடியாது என்பதை, முதல்வர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 'தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்' என்ற பெயரில், ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்க ஆண்டுக்கு, 756 கோடி ரூபாய் தேவை.

ஏற்கனவே, 2026- - 27க்கான நிதி பற்றாக்குறை, 90,000 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிரந்தர செலவினங்கள், சம்பளம், பென்ஷன், கடன்களுக்கான வட்டி இவற்றிற்கே உத்தேச வருவாய், 2 லட்சத்து, 15,000 கோடி ரூபாயில், 65 சதவீதம் சென்று விடும்.

இந்நிலையில், இலவசங்களுக்கான செலவினங்களையும் சேர்த்தால், தொழில் முதலீடுகளுக்கான கட்டமைப்புகளுக்கு நிதி இருக்காது. ஊழலை ஒழிப்பது, நிதி வருவாய் ஓட்டைகளை அடைப்பது ஆகியவற்றுக்கு, த.வெ.க., அரசு முழு முனைப்பு காட்டுகிறது.

அதேநேரம், ஊழலில் ஊறிய அரசு நிர்வாக அமைப்பை மீட்பது அவ்வளவு எளிதல்ல. எனவே, நடப்பு நிதி நிலைமை குறித்து, த.வெ.க., அரசு மக்களிடம் பகிரங்கமாக விளக்க வேண்டும். சாத்தியமில்லாத இலவச அறிவிப்புகளை, தகுந்த காரண ங்களை கூறி ஒத்தி வைக்க வேண்டும்.

விஜயின் அமைச்சரவைக்கு தற்போது எந்த அரசியல் சிக்கல்களும், நெருக்கடியும் இல்லை. அதனால், அரசின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அப்போது தான் தமிழகம் நிதி விஷயத்தில் சுயசார்பு நிலையை எட்ட முடியும்! lll

-----

இமைக்குற்றம் கண்ணுக்கு தெரியவில்லையா?


என்.முருகானந்தன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததோடு, அப்பெண்ணை கடத்த முயன்ற, த.வெ.க., கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலர் மீது, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? முதல்வர் விஜய், முதலில் தன் கட்சியினருக்கு சுய ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்க வேண்டும்' என்று, தமிழக முதல்வருக்கு தி.மு.க., - எம்.பி., கனிமொழி அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த தி.மு.க., ஆட்சியில், 2024 டிசம்பரில் சென்னை, கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில், பல்கலை மாணவி ஒருவர், தி.மு.க., நிர்வாகி ஞானசேகரனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்கு பின்பே குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

அத்துடன், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படும் பெண்ணின் தனிப்பட்ட விபரங்களை வெளியிடக் கூடாது என்ற விதி இருந்தும், அம்மாணவியின் பெயர் முதல் அனைத்து விபரங்களையும் காவல் துறை பகிரங்கப்படுத்தியது.

அதுமட்டுமா... ஞானசேகரனை காப்பாற்றும் விதமாக, பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கும் விதமாக, 'ஆண் நண்பருடன் எதற்காக அந்த இடத்திற்கு சென்றார்?' என்று கேள்வி எழுப்பினர், தி.மு.க.,னர்.

கனிமொழியின் அண்ணனும், தமிழக முதல்வராகவும் இருந்த ஸ்டாலின் கைகளில் தானே அன்று காவல் துறை இருந்தது...

தன் கட்சியினருக்கு சுய ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்க வேண்டும் என்று, இன்று விஜய்க்கு அறிவுரை கூறும் கனிமொழி, அன்று தன் அண்ணனுக்கு அறிவுரை கூறியிருந்தால், தி.மு.க., நிர்வாகி ஞானசேகரனால், அம்மாணவி பாதிக்கப்பட்டிருக்க மாட்டாரே!

இமைக்குற்றம் கண்ணுக்கு தெரியாது என்பது போல், தன் அண்ணன் ஸ்டாலின் ஆட்சியில் நடந்த குற்றங்கள் கனிமொழியின் கண்ணுக்கு தெரியவில்லை போலும்!

ஒருவரை விமர்சனம் செய்து, குற்றம் சாட்டுவதற்கு முன், அதற்குரிய தகுதி தனக்கு உள்ளதா என்று பகுத்தறிந்து பின் குற்றஞ்சாட்டுவது சாலச் சிறந்தது!

-----

திராவிட கட்சிகளின் திணிப்பை நீக்குவாரா விஜய்?


என்.கந்தசாமி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை துவக்க, மாநில அரசு அனுமதிக்க வேண்டும்' என, 2017ல் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல் முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

'தமிழகத்தில் மட்டும் நவோதயா பள்ளிகளுக்கு ஏன் இத்தனை எதிர்ப்பு?' என்று நீதிபதி கேள்வி எழுப்ப, 'நவோதயா பள்ளிகளில் பின்பற்றப்படும் மும்மொழி கொள்கை காரணமாகவே, மாநில அரசு இதை எதிர்க்கிறது' என்று கூறியுள்ளார், தமிழக அரசின் வழக்கறிஞர்.

உண்மையில், தமிழக அரசியல்வாதிகள் நவோதயா பள்ளிகளை எதிர்ப்பதற்கு காரணமே, தமிழக மாணவர்கள் புத்திசாலிகள் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத் தான்!

அதனால் தான், ஹிந்தி திணிப்பு என்று கூறி, நவோதயா பள்ளிகளுக்கு தடை விதிக்கின்றனர்.

இந்த அரசியல்வாதிகளுக்கு, திணிப்புக்கும், பயிற்றுவிப்புக்குமே அர்த்தம் தெரியவில்லை.

'தமிழகத்தில் உள்ள அனைவரும் ஹிந்தி கற்றே ஆக வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்தால், அதற்கு பெயர் தான் திணிப்பு; பள்ளிகளில் ஆசிரியர் மாணவர்களுக்கு ஒரு மொழியை கற்றுத் தருவதற்கு பெயர் பயிற்றுவிப்பு!

இந்த வித்தியாசம் கூட தெரியாத அளவில் தான், இவர்களது அறிவுத் திறன் உள்ளது.

ஒரு மொழியை கற்றுத் தருவதையே திணிப்பு என்று கூறினால், இவர்களது இருமொழி கொள்கையில், ஆங்கிலம் கூட திணிப்பு தானே!

இன்றைய அரசு பள்ளிகளின் நிலையைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்... இவர்களது நோக்கம் என்னவென்பதை!

உயர்தரமான கல்வியை கற்று, மக்கள் கூர்மதியாளர்களாக மாறிவிட்டால், இலவசத்தை காட்டி அவர்களை ஏமாற்ற முடியாது; ஊழல் செய்து கொழுத்தால் ஓட்டு போட மாட்டார்கள், கேள்வி கேட்பார்கள் என்ற அச்சமே, 'திணிப்பு' நாடகத்திற்கான காரணம்!

திராவிட கட்சிகளின் இந்த திணிப்பு நாடகத்தை, விஜய் அரசு முடித்து வைக்குமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us