PUBLISHED ON : ஜூலை 22, 2026 12:00 AM

அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'என் நிர்வாகத்தில் லஞ்சம், ஊழலை அனுமதிக்க மாட்டேன்' என்று அமைச்சரவை கூட்டத்தில் மீண்டும் உறுதியாக உணர்த்தியுள்ளார், முதல்வர் விஜய்.
இதை வாழ்த்தி வரவேற்று, 'தினமலர்' நாளிதழ் மட்டுமே தலைப்புச் செய்தியாக்கியது. குறைகளை சுட்டிக்காட்டும் அதே நேரத்தில், நிறைகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற, பத்திரிக்கை தர்மத்தை தினமலர் மீண்டும் நிலைநாட்டியுள்ளது.
'இதுவரை தமிழகத்தை ஆண்ட எந்த அரசும் முன்னெடுக்காத இந்த முற்போக்கான சிந்தனைக்கு, மக்கள் அனைவரும் பக்கபலமாக இருக்க வேண்டும்' என்று கூறி, லஞ்சம் குறித்து புகார் தெரிவிக்க முதல்வர் அறிவித்த தொடர்பு எண்களை அரை பக்கத்தில் வெளியிட்டு, அதை அரசு அலுவலகங்களில் மக்கள் பார்வைக்கு படும்படியாக ஒட்டி வைக்க, 'தினமலர்' நாளிதழ் கூறியுள்ளது, அதன் சமூக அக்கறையை பிரதிபலித்தது.
மாற்றம் என்பது ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; செயல் மாற்றமும்தான்.
இத்தனை காலமும் சமூக ஆர்வலர்களும், பொருளாதார அறிஞர்களும், அறத்தை வலியுறுத்துவோரும் சொல்லி வந்ததற்குதான், தற்போது, முதல்வர் செயல் வடிவம் கொடுக்கிறார்.
முடியுமா என்று முனங் குவதைவிட, 'எங்களால் முடியும்' என்று உறுதியாக மக்கள் நின்றால், ஊழலை ஒழித்து விட முடியும்.
'நடைமுறைக்கு இது சாத்தியமா?' என்ற எதிர்மறை விமர்சனங்களை முன் வைப்பதைவிட, 'தினமலர்' நாளிதழ் போன்று அரசுக்கு உறுதுணை நிற்க வேண்டும்.
உண்மையான ஜனநாயக மக்களாட்சிக்கு, இனியாவது உயிர் கொடுப்போம்!
---
ரயில்வேயின் பொற்காலம்!
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சியில் இந்திய ரயில்வே பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
ஏற்கனவே, தேஜஸ், வந்தே பாரத் போன்ற அதிவிரைவு ரயில் சேவைகளை செய்து வரும் நிலையில், இப்போது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் சேவையையும் துவங்கி உள்ளது, இந்திய ரயில்வே.
உலகிலேயே ஐந்து நாடுகளில் தான், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்கள் உள்ளன. இப்போது, இந்தியாவும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளதை எண்ணும் போது பெருமிதமாக இருக்கிறது.
சென்னை - -பெங்களூரு இடையேயும் இந்த ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட உள்ளது. இத்திட்டம் நிறைவடைந்தால், இப்போது, ஏழு மணி நேரம் தேவைப்படும் சென்னை - -பெங்களூரு பயணத்தை, 75 நிமிடங்களில் முடித்து விடலாம்.
ஏற்கனவே, நாட்டின் பல நகரங்களில் மெட்ரோ சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது; ரயில்வே நிலையங்கள், நாடு முழுதும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று அதன் சேவையும் முன்னெப்போதையும் விட தரமாக உள்ளது.
இதற்கெல்லாம் காரணம், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
முன்பெல்லாம், முழுநேர அரசியல்வாதிகளுக்கே ரயில்வேதுறை அமைச்சர் பதவி கிடைத்து வந்தது.
பிரதமர் மோடி இந்த நடைமுறையை மாற்றி, நன்கு படித்த, நிர்வாகத் திறன் வாய்ந்த, தொழில் நுட்ப வல்லுநரான அஸ்வினி வைஷ்ணவை ரயில்வே துறை அமைச்சராக நியமனம் செய்துள்ளார்; அவரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனாலேயே இத்துறை பல மடங்கு வளர்ச்சியை அடைந்து வருகிறது.
அதேநேரம் ஒரே ஒரு வருத்தமும் உண்டு... மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. இச்சலுகைகளை மீண்டும் தொடர வேண்டும் என்று, பலமுறை கோரிக்கைகள் வைத்தும், இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
இதை மட்டும் ரயில்வே அமைச்சகம் பரிசீலனை செய்தால், அந்தக் குறையும் போய் விடும்.
இந்த ஒரு குறையை தவிர்த்து, பா.ஜ., ஆட்சியை, இந்திய ரயில்வேயின் பொற்காலம் என்றே கூறலாம்!
----
காம்ரேடுகளுக்கு துணிச்சல் உண்டா?
வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங்கிரஸ் மீது இருந்த ஆத்திரத்தில், மூதறிஞர் ராஜாஜி வகுத்துக் கொடுத்த கூட்டணி பார்முலாவை பின்பற்றி தான், 1967ல் தி.மு.க., தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது.
வரம் கொடுத்த சிவபெருமான் தலையில் கை வைத்த பகாசுரன் போல, கூட்டணி பார்முலாவை கற்றுக்கொடுத்த ராஜாஜியின் அரசியல் வாழ்க்கையையே முடித்து வைத்த கட்சியும் தி.மு.க., தான்!
அதன்பின் வந்த தேர்தல்களிலும் ராஜாஜியின் கூட்டணி பார்முலாவை வைத்து தான், ஆட்சி அதிகாரங்களை கைபற்றியது, தி.மு.க., ஆனாலும், அது தன் சித்தாந்தத்தை விட்டுவிடவில்லை.
ஆனால், கூட்டணி இல்லாத காலத்தில் சித்தாந்த பிடிப்பும், போராட்ட குணத்துடனும் இருந்த கம்யூனிஸ்டுகள், கூட்டணி அரசியலில் சங்கமித்து என்று சுகம் காண ஆரம்பித்தனவோ, அன்று முதல் அவர்களது வர்க்கப் போராட்டமும், விவசாயிகள் நலன் சார்ந்த சிந்தனைகளும் கரைந்து போய், கட்சியும் மெல்ல மக்கள் மனதில் இருந்து காணாமல் போனது.
இப்போது, தி.மு.க., தயவில் தான் சி.பி.எம்., - இந்திய கம்யூ., கட்சிகள் தலா இரண்டு எம்.பி.,க்களையும், இரண்டு எம்.எல்.ஏ.,க்களையும் வைத்துள்ளனரே தவிர, அவர்களது தனித்த செல்வாக்கினால் அல்ல!
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் காம்ரேடுகள் தனித்து போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார், இந்திய கம்யூ., மாநில செயலர் வீரபாண்டி யன்.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல், 'இடதுசாரிகளின் அரசியல் அடையாளத்தை தக்க வைக்க, இந்த நிலைப்பாடு அவசியம்' என்று கூறியுள்ளார்.
அதேநேரம், ஆடி தள்ளுபடி அறிவிக்கும் கடைகள் சின்னதாக ஒரு ஸ்டார் வைத்து, 'கண்டிஷன் அப்ளை' என்று சின்ன எழுத்துக்களில், குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் தான் தள்ளுபடி என்று எழுதுவது போல், 'நடப்பு நிலவரத்தை ஆராய்ந்து, அதற்கேற்ப முடிவெடுப்போம்' என்று ஒரு, 'கமா'வையும் வைத்துள்ளார், வீரபாண்டியன்.
குன்றி வரும் கம்யூனிஸ்டுகள் செல்வாக்கை காப்பாற்ற, தனித்து போட்டியிடுவது வரவேற்க தக்கது தான். ஆனால், அதற்கான துணிச்சல் இன்றைய காம்ரேடுகளுக்கு இருக்கிறதா?
