PUBLISHED ON : ஜூலை 12, 2026 12:37 AM

ரா.சேது
ராமானுஜம், விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'தினமலர்' நாளிதழுக்கு ஆண்டு சந்தா செலுத் தியதன் வாயிலாக, தன் உயிரை காப்
பாற்றிக் கொண்டுள்ளார், வாசகர் ஒருவர்.
பொதுவாக நாளிதழ்
மற்றும் வார, மாத இதழ்களுக்கு வாசகர்கள் மாத மற்றும் ஆண்டு சந்தாவிற்கு
பணம் செலுத்தினால், குறிப்பிட்ட நாட்கள் வரை அந்த பத்திரிகை வீடு தேடி
வரும். அதைத்தவிர, சந்தா செலுத்திய வாசகருக்கு வேறு எந்த தனிப்பலனும்
இல்லை. ஆனால், 'தினமலர்' நாளிதழ் அதற்கு முற்றிலும் விதிவிலக்கு!
வாசகர்களை முதலாளிகள் என்று சொல்லி கொண்டாடுவதுடன் நின்று விடாமல்,
வாரமலர், சிறுவர் மலர், ஆன்மிக மலர் என்று இணைப்பு இதழ்களில் போட்டிகளை
வைத்து, வேறு எந்த பத்திரிகையும் அளிக்காத அளவிற்கு பரிசுகளை அள்ளிக்
கொடுப்பதுடன், கடந்த ஆண்டில் இருந்து, ஆண்டு சந்தா செலுத்தும்
வாசகர்களுக்கு, சந்தாவுடன், 11 லட்சத்திற்கான விபத்து காப்பீடு
திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது.
திடீரென ஏதேனும் விபத்து
ஏற்பட்டு, அதனால் தங்கள் வாசகர்கள் மருத்துவ செலவுகளுக்காக பரிதவித்து
விடக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில், இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த விவசாயி நீதிவேலு, 2025
செப்டம்பரில், 2,499 ரூபாய் செலுத்தி சந்தாதாரராக இணைந்துள்ளார்.
அவருக்கு, 11 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டத்திற்கான சான்றும்
வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் படுக்கையில்
இருந்து தவறி விழுந்ததில், தலையில் வீக்கம் ஏற்பட்டு தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆறு நாட்கள் சிகிச்சைக்கு பின், வீடு
திரும்பியவர், தினமலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் வாயிலாக,
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி அதிகாரிகள் அவருடைய மருத்துவ செலவு
ஆவணத்தை சரிபார்த்து, அவருக்கு, 52,659 ரூபாய் வழங்கியுள்ளனர்.
அதேபோன்று, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ஜோதிராமலிங்கம் எனும்
வாசகர், கடந்த மே11ல், 'தினமலர்' ஆண்டு சந்தா செலுத்தி, காப்பீட்டு
திட்டத்தில் இணைந்திருந்தவர், ஜூன் 2ல் டூ - வீலரில் செல்லும் போது
விபத்துக்குள்ளானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு
திரும்பியவர், தினமலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார்.
அவர்கள் வாயிலாக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி அதிகாரிகள் மருத்துவ
செலவு ஆவணங்களை சரிபார்த்து, ஒரு லட்சம் ரூபாயை வழங்கி உள்ளனர்.
பத்திரிகையில் இச்செய்தியை படித்த போது, 'தினமலர்' நாளிதழ், தன் வாசகர்கள்
மீது வைத்துள்ள அளவற்ற அன்பை நினைத்து பெருமை ஏற்பட்டது. தொடரட்டும்
தினமலர் நாளிதழின் மக்கள் சேவை!
ஒளிந்தே காலத்தை கடத்தும் எண்ணமா?
வா.தியாகராஜன், கல்பாக்கம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போடாத சாலைக்கு ரோடு போட்டதாக, மூன்று கோடி ரூபாய் கணக்கு காட்டிய ஊழல் வழக்கில், முன்னாள் தி.மு.க., அமைச்சர் வேலுவிற்கு லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் அனுப்பியது.
இதை முன்கூட்டியே அறிந்து கொண்ட வேலு, சிங்கப்பூருக்கு தப்பி விட்டதுடன், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளதாக கூறி, வாய்தா வாங்கி உள்ளார்.
மருத்துவ கல்லுாரி வைத்திருக்கிறார், வேலு. அவரது மருத்துவமனையில் சிகிச்சையின் தரம் திருப்தியாக இல்லையென்றால், சென்னை அப்பல்லோ உள்ளது; அவரின் தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்ற காவேரி மருத்துவமனை இருக்கிறது. இதையெல்லாம் விட்டு சிங்கப்பூருக்கு ஏன் செல்ல வேண்டும்?
முன்பெல்லாம் கைது என்றவுடன் அரசியல்வாதிகளுக்கு நெஞ்சு வலி வந்து, அருகில் உள்ள மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகிவிடுவர். இப்போது, நெஞ்சு வலி வந்தால், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.
அடுத்த ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை இப்படியே ஓடி ஒளிந்து, காலத்தை கடத்தி விடலாம் என்று வேலு தீர்மானித்து விட்டார் போலும்!
பனை மரக்கன்றுகள் நட்டால் பஞ்சம் போகும்!
அ.ஜான் பீட்டர், சாத்தனுார், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்னையாக தற்போது உருவெடுத்திருப்பது குடிநீர் பற்றாக்குறை; இதற்கு நிரந்தர தீர்வு, நிலத்தடி நீரை பெருக்குவது மட்டுமே!
ஆழ்துளை கிணறுகள் வறண்டு, ஏரி குளங்கள் துார்ந்து போனதால், மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுக்க ஏரி குளங்களை துார் வாருவதுடன், அதன் கரைகளில் பனை மரக்கன்றுகளை நட வேண்டும்.
பொதுவாக பனைமரத்தை, கற்பக விருட்சம் என்பர். ஒரு பனைமரம், 200 அடி ஆழம் வரை வேர் விட்டு நிலத்தடி நீரை தேடும். மழைநீரை மிக வேகமாக உறிஞ்சி, பூமிக்குள் சேமிக்கும் ஆற்றல் பனைக்கு உண்டு.
அதனால், வீட்டின் முன்பும், வயல் வரப்பு, சாலை ஓரம், அரசு நிலங்கள், குளக்கரைகளில் நட வேண்டும். இதை ஓர் இயக்கமாக, கிராமம் தோறும் செயல்படுத்தினால், நிலத்தடி நீர் ஒரு போதும் வற்றாது. கூடவே, நுங்கு, பதநீர், கருப்பட்டி என குடும்பத்தின் பொருளாதாரமும் பெருகும்.
மேலும், மண்ணின் வளம் காக்க, பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும். இந்த நெகிழிகள், 500 ஆண்டுகள் ஆனாலும் மட்காது; மழைநீரை பூமிக்குள் இறங்க விடாது.
நெகிழி இல்லா ஊர் என்ற நிலை வந்தால் தான், மழை நீரை நிலம், உறிஞ்சுவதில் எந்த தடையும் இருக்காது. கூடவே, ரசாயன உரம், பூச்சிகொல்லி மருந்து இல்லாமல், இயற்கை உரம் பயன்படுத்தினால் நிலம் கடினமாகாது; எளிதாக நீரை உறிஞ்சும்.
அத்துடன், மழைநீர் சேகரிப்பு என்பதை ஒவ்வொரு குடும்பமும் தங்கள் அடிப்படை கடமையாக கொள்ள வேண்டும். அதற்கு வீட்டை சுற்றியோ, வாசலிலோ மூன்று அடி குழி தோண்டி கல், மணல், செங்கல் போட்டு, கூரையில் விழும் மழைநீரை குழாய் வாயிலாக, அக்குழிக்குள் விழுமாறு செய்ய வேண்டும்.
இதன்வாயிலாக, 1,000 சதுர அடி வீட்டில், 1 லட்சம் லிட்டர் மழை நீரை சேமிக்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்கு முன் துார்வாரினால், 10 மடங்கு நீரை தேக்கலாம்!
மேலும், அன்றாட வாழ்வியலிலும், குளிக்க மூலிகை பொடி, பாத்திரம் கழுவ இலுப்பை பொடி பயன்படுத்துவதன் வாயிலாக நீர் மாசுபடாது.
நிலத்தடி நீர் என்பது நம் அடுத்த தலைமுறைக்கான சொத்து!
எனவே, நெகிழியை ஒழித்து, மரத்தை வளர்த்து மழைநீரை சேமித்தால், அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சமற்ற மாநிலமாக தமிழகம் மாறும்!
