தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ கல்வியில் ஜாதியா முதல்வரே...?

 கல்வியில் ஜாதியா முதல்வரே...?

 கல்வியில் ஜாதியா முதல்வரே...?


PUBLISHED ON : ஜூலை 13, 2026 12:24 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 13, 2026 12:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி.சிவகுமார், கீழகாட்டூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு முடிவை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர் என பிரிக்கப்பட்டு தனித்தனியே தேர்ச்சி, மதிப்பெண் வரையறுக்கப்பட்டுள்ளது.

கற்கும் ஆர்வமும், கற்பித்தலில் திறமையும், நல்லொழுக்கமும் கொண்ட ஆசிரியர்களால் மட்டுமே அறிவும், ஒழுக்கமும், பண்பும் கொண்ட மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.

இதுபோன்று ஜாதிவாரியாக மதிப்பெண்கள் வரையறுக்கப்பட்டு பணி அமர்த்த, இது வெறும் அரசு உத்தியோகம் இல்லை; கல்வியில் சிறந்த ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் உன்னத பணி.

இதற்கு திறமை மட்டுமே அளவுகோலாக வைக்க வேண்டுமே தவிர, ஜாதிக்கொரு நீதி என்று வரையறுக்க கூடாது.

ஏற்கனவே, அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரம் குறைந்து கொண்டே வருகிறது. மது அருந்தி பள்ளிக்கு வருவது, வகுப்பு நடக்கும்போது மொபைல் போன் பார்ப்பது, கண்டிக்கும் ஆசிரியர்களை மிரட்டுவது என்று, அவர்களது ஒழுக்கமும் மெச்சும்படி இல்லை.

அதற்கேற்ப அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனும், கற்றுக் கொள்ளும் திறனும் பாராட்டும்படி இல்லை என்பதே உண்மை.

எனவே, நல்லதொரு மாணவ சமுதாயம் உருவாக, ஆசிரியர் தேர்வில், ஜாதிய அரசியல் செய்யாமல் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரே அளவுகோலாக தேர்ச்சி மதிப்பெண் இருக்க வேண்டும்.

மாற்றத்திற்கான அரசு, இதிலும் மாற்றி யோசிக்குமா?

சமஸ்கிருதத்தை கொண்டாடும் இஸ்லாமிய நாடு!


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

பிரதமர் மோடி இந்தோனேஷியா நாட்டுக்கு சென்றிருந்தபோது, அந்நாட்டு பிரதமர், இந்தோனேஷிய மொழிக்கு, சமஸ்கிருதமே ஆதாரம் என்று கூறியுள்ளார்.

உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் சமஸ்கிருதம் போற்றப்படுகிறது. அந்த நாட்டின் விமான சேவைக்கு, 'கருடா ஏர்வேஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது; அவர்களுடைய நாணயங்களில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது; அந்நாட்டு மக்களில் பலர் தங்கள் குழந்தைகளுக்கு சமஸ்கிருத பெயர்களை வைத்துள்ளனர். அங்குள்ள பாலித்தீவில் ஹிந்து மதமும், இதிகாச புராணங்களும் போற்றப்படுகின்றன.

ஆனால், சமஸ்கிருதத்தின் தாய் வீடான நம் நாட்டில், தமிழகம் உட்பட சில மாநிலங்களில் பிரிவினைவாத அரசியல்வாதிகளாலும், அமைப்புகளாலும், அம்மொழிக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வெறுப்புக்கு, தாய் மொழி மீது கொண்ட பற்று காரணம் அல்ல!

ஹிந்து இதிகாசங்கள், மந்திரங்கள் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருப்பதால், தங்கள் ஹிந்து மத எதிர்ப்பை இப்படி மொழி வழியாக காண் பிக்கின்றனர்.

இதனாலேயே அம்மந்திரங்களை படித்து, ஹிந்து மதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் குறிப்பிட்ட சமூகத்தவரை இவர்களுக்கு பிடிப்பதில்லை.

அவர்களை ஒடுக்குவதன் வாயிலாக, ஹிந்து மதத்தை அழித்து விடலாம் என்று எண்ணியே, கோவில்களில் சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை செய்வதற்கும், கும்பாபிஷேகங்களில் மந்திரங்களை ஒலிக்கவும் எதிர்ப்பு குரல் எழுப்புகின்றனர்; சமஸ்கிருதம் செத்த மொழி என்கின்றனர்.

அந்நியர்கள் நம் நாட்டின் மீது படையெடுத்து வந்து, தங்கள் மதத்தை வலுக்கட்டாயமாக திணித்து, கோவில்களை அழித்து, ஹிந்து மதத்தை துடைத்தெறிய நினைத்தனர்; இன்று, அவர்களது வித்துகளும், அடிவருடிகளும், ஹிந்து மதத்தை அழிக்க, மொழி அரசியலை கையில் எடுத்துள்ளனர்.

கூடு கட்டும் திறனற்ற கூகைகள், இடிந்து கிடக்கும் கட்டடங்களை தான் தேடுமாம்; அதுபோல், பீரங்கிகளாலும், துப்பாக்கிகளாலும் அழிக்க முடியாத சனாதனத்தை, மொழி எனும் உணர்ச்சியை துாண்டி, அதில் காரியம் சாதிக்க துடிக்கின்றனர், அரசியல்வாதிகள்.

ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

தமிழக அரசு பரிசீலிக்குமா?


மு.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ஓய்வூதியர் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை, மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிட்டுள்ளது, தமிழக அரசு. இதில் காப்பீட்டு வரம்பு, 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டாலும், மாத சந்தா, 497 ரூபாயி-லிருந்து, 614 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதியோரின் நலன் கருதி கொண்டுவரப்பட்ட இத்திட்டம், நடைமுறையில் ஓய்வூதியர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளது.

காரணம், புற்றுநோய், 'டயாலிசிஸ்' போன்ற சில சிகிச்சைகளை தவிர, பிற நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே நிதி உதவி கிடைக்கிறது. சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனை செலவுகள் எதற்கும், காப்பீட்டு தொகை கிடைப்பதில்லை.

சில பெரிய மருத்துவமனைகள் காப்பீடு அட்டையை அலட்சியப்படுத்துகின்றன. அவசர காலத்தில், காப்பீடு பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால், 60 சதவீத தொகையை திரும்ப பெறலாம் என்ற விதி இருந்தாலும், அதை வாங்குவது குதிரைக் கொம்பாக உள்ளது.

மருத்துவ செலவை மருத்துவமனை தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, காப்பீட்டு நிறுவனம் அல்ல என்று, சமீபத்திய சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பும் இங்கு மதிக்கப் படுவதில்லை.

அரசின் நிதித்துறை மானிய கோரிக்கை குறிப்பின்படி, 2025 மார்ச் 31 அன்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தில், 6,94,174 ஓய்வூதியர்கள் உள்ளனர். ஆனால், 2022 ஜூலை முதல் 2025 மார்ச் வரை 33 மாதங்களில், 2,41,017 ஓய்வூதியர்களுக்கு, 1,119.05 கோடி ரூபாய் தான் காப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இதே காலத்தில், ஓய்வூதியர்களிடமிருந்து, 497 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்ட மொத்த சந்தா, 1,138.51 கோடி ரூபாய்!

அதாவது, வழங்கப்பட்ட தொகையை விட, 16.46 கோடி ரூபாய், அரசிடம் உபரியாக உள்ளது. தரவுகளின்படி காப்பீட்டு நிறுவனம் லாபத்தில் இயங்கும் போது, எதற்காக இப்போது சந்தா தொகையை, 614 ரூபாயாக உயர்த்த வேண்டும்?

ஓய்வூதியர் சங்க பிரதிநிதிகளை கலந்தாலோசிக்காமல், முந்தைய அரசின் முடிவை இயந்திரகதியில் அமல்படுத்தியிருப்பது வருத்தத்தை ஏற் படுத்துகிறது.

எனவே, கூடுதல் சந்தா வசூலிக்கும் உத்தரவை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில், இத்திட்டத்தை கட்டாயமாக்காமல், விருப்பமுள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து பயனடையும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்!

தமிழக அரசு பரிசீலிக்குமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us