sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இது உங்கள் இடம்

/

திருமாவளவன் ஆலோசனை கூறலாமா?

/

திருமாவளவன் ஆலோசனை கூறலாமா?

திருமாவளவன் ஆலோசனை கூறலாமா?

திருமாவளவன் ஆலோசனை கூறலாமா?

2


PUBLISHED ON : ஏப் 20, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 20, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பா.ஜ.,வுடன் கூட்டணி அமைந்தால், மக்களின் ஆதரவை அ.தி.மு.க., இழந்துவிடும்' என்றும், 'அக்கட்சியை பா.ஜ., அழித்துவிடும்' என்றும், தினமும் ஒரு புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகிறார், வி.சி.க., தலைவர் திருமாவளவன்.

அவர் கூறும் யோசனைகள் எல்லாம், அ.தி.மு.க., மீண்டும் பலம் பெற்று ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தினால் அல்ல; பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி அமைந்தால், தங்கள் கூட்டணி தோற்று விடுமே என்ற எஜமான பாசத்தின் வெளிப்பாடு!

தேர்தல் கணக்குகளில், கட்சிகள் பெறும் ஓட்டு சதவிகிதம் தான் முக்கியம் என்பது திருமாவளவனுக்கு தெரியாதா?

கொள்கை கோட்பாடுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுத் தான், அரசியல் கட்சிகள் கூட்டணி பேரத்தில் இறங்குகின்றன. இதில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. ஏன்... திருமாவளவன் கட்சி நடத்துவதே தேர்தல் கூட்டணி நடத்தி, அதில் லாபம் பார்க்கத்தானே...

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என்று மேடைகளில் பேசிவரும் திருமாவளவன், என்றாவது அதுகுறித்து தி.மு.க., தலைமையிடம் பேசியது உண்டா?

போதை மருந்து கடத்தல், லஞ்சம் - ஊழல், கள்ளச் சாராய மரணங்கள், கொலை - கொள்ளை என சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு, ஆளும் கட்சியினரின் அராஜகம் என, தினமும் பல பிரச்னைகள் வரிசை கட்டி வருகின்றனவே...

அவை எவற்றுக்காவது திருமாவளவன் குரல் கொடுத்துள்ளாரா... தி.மு.க., கொடுக்கும் நான்கு, ஐந்து சீட்டுக்காக ஆட்சியாளர்களின் தவறுகளை எல்லாம் வாய் மூடி மவுனம் காக்கும் இவர், அ.தி.மு.க., யாரோடு கூட்டு சேரவேண்டும் என்று ஆலோசனை கூறுவது நகைப்புக்குரிய செயல்!

மோடி எதிர்ப்பு என்ற ஒற்றை கொள்கையை வைத்து, எதிரும் புதிருமாக, எலியும், பூனையுமாக இருந்த கட்சிகள் தேசிய அளவில் ஒன்று சேரும்போது, தி.மு.க.,வை வீழ்த்த தமிழகத்தில் கட்சிகள் ஒன்று சேர்வது எப்படி தவறாகும்?



துரைமுருகனை பாராட்டலாம்!


ஆர்.அபூர்வன், சென்னையில் இருந்து எழுதிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபையில் மெல்லுவதற்கு, 'அவல்' கிடைக்காத நிலையில், புதைத்து வைக்கப்பட்டிருந்த, 'மாநில சுயாட்சி' என்ற கோஷத்தை தோண்டியெடுத்து, 'தீர்மானம்' என்ற லேபிளை ஒட்டி குதுாகலித்துள்ளது, திராவிட மாடல் அரசு.

அதுசரி... தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லையே... கழகத்தின் சுயாட்சி தானே நடைபெறுகிறது?

'மாநில சுயாட்சி தீர்மானத்தை, 1974ல் கொண்டு வந்தார், கருணாநிதி. அப்போது எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தது; 50 ஆண்டுகளுக்கு பின், இப்போது முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

'இதிலும், பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நீண்ட காலம் அரசியலில் இருக்கிறேன். அதற்கு வழி வகுத்தோர் கருணாநிதியும், ஸ்டாலினும் தான். ஒருவேளை, நாளை உதயநிதி தீர்மானம் கொண்டு வந்தாலும் பேசுவேன்' என்று கூறியுள்ளார், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

ஆக... 50 ஆண்டுகளுக்கு முன்பும் இதுகுறித்து பேசத் தான் முடிந்தது; இப்போதும் அதுதான் நடக்கும்; நாளை உதயநிதி தீர்மானம் நிறைவேற்றினாலும் பேசத்தான் முடியும் என்று மறைமுகமாக ஸ்டாலினுக்கு உணர்த்தியுள்ளார், துரைமுருகன்.

இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது... 50 அல்ல; 500 ஆண்டுகள் ஆனாலும், மாநில சுயாட்சி என்பது வெறுமனே பேசி கொண்டிருக்கும் விஷயமே அன்றி, அதனால், எந்த பயனும் கிடையாது என்பது தான்!

இதை, ஸ்டாலினுக்கு உணர்த்திய துரைமுருகனின் தைரியத்தை உண்மையிலேயே பாராட்ட வேண்டும்!



நோக்கம் என்ன?


பெ.வடிவேல், திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட்' தேர்வை ரத்து செய்ய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார், முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்க மறுத்தும், தொகுதி வரையறையை எதிர்த்து என, தீர்மானங்களை நிறைவேற்றினார்.

தற்போது, மாநில சுயாட்சிக்கு ஒரு தீர்மானம்... இப்படி மத்திய அரசு ஏற்க மறுக்கும் விஷயங்களுக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்புவதன் நோக்கம் என்ன?

'நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது' என்று உச்ச நீதிமன்றமே சொல்லி விட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடராமல், மத்திய அரசுக்கு அனுப்புவதன் காரணம் என்ன?

பி.எம்.ஸ்ரீ., திட்டத்தினை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு விட்டன. தமிழகம் முரண்டு பிடிப்பதால் அடையப் போகும் நன்மை என்ன?

மும்மொழி கல்வித் திட்டத்தில், கன்னட மொழியை ஏற்றிருந்தால், வாட்டாள் நாகராஜ் போன்ற மட்டமான அரசியல்வாதிகளுக்கு பிரிவினை அரசியல் செய்ய வேண்டிய வேலையில்லாமல் போயிருக்கும் அல்லது மலையாளத்தை கற்றுக் கொடுக்க முன்வந்தால், 'பாண்டியா' என்ற வார்த்தைக்கு இடமில்லாமல் போயிருக்கும்.

அத்துடன், தமிழகத்தில் தெலுங்கு பேசுவோர் கணிசமாக உள்ளனர். ஏன் முதல்வர் கூட தெலுங்கு தானே... தெலுங்கு மொழியை கற்றுக் கொடுக்கலாம்!

'ஒரு மொழியை கற்றுக்கொண்டால், தமிழ் அழிந்துவிடும்' என்று கூற, தமிழ் என்ன அவ்வளவு பலவீனமான மொழியா? 'நீச பாஷை' என்று சொல்லப்படும் ஆங்கிலத்தில் எவ்வளவோ கலப்பு சொற்கள் உள்ளன.

உலகில் உள்ள அனைத்து மொழிகளிலிருந்தும் வார்த்தைகளை பெற்றுக்கொண்ட ஆங்கில மொழி என்ன அழிந்தா போய்விட்டது?

'எப்பவோ ரோடு போட போறாங்களாம்... அதுக்கு இப்பவே கல்ல கொண்டுவந்து கொட்டி, என் காலை உடைக்கப் பாக்கிறாங்க' என்று, பழைய திரைப்படம் ஒன்றில், எம்.ஆர்.ராதா வசனம் பேசுவார். அதுபோன்று, எப்பதோ வரப்போற தொகுதி மறுவரையறைக்கு இன்றைக்கு தீர்மானம் போடுகிறார் முதல்வர்!

தனித் தமிழ்நாடு என்று கோஷம் எழுப்பிய அண்ணாதுரை, பிரிவினைவாத தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டதும், மாநில சுயாட்சி கோரிக்கையை கைவிட்டார்.

அதை, இன்றைக்கு துாசி தட்டுகிறார், ஸ்டாலின்.

அவரது தந்தை கருணாநிதியே, 'மாநில சுயாட்சிக்கான காரணங்கள் அப்படியே உள்ளன' என்று சொல்லி, தன் காலத்தை ஓட்டி விட்டார்.

எனவே, சாத்தியமற்ற தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்புவதன் நோக்கம் என்ன? 'ஏதாவது காரணத்தை சொல்லி, மத்திய அரசு, பிரிவு 356யை பயன்படுத்தி, தமிழக அரசை கலைத்து விட மாட்டார்களா? அந்த அனுதாப ஓட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட மாட்டோமா...' என்ற உள்நோக்கமா?








      Dinamalar
      Follow us