/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
கூட்டுக்கொள்ளையரிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா?
/
கூட்டுக்கொள்ளையரிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா?
கூட்டுக்கொள்ளையரிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா?
கூட்டுக்கொள்ளையரிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா?
PUBLISHED ON : அக் 19, 2025 12:00 AM

சி.ஸ்ருதி
ஷிவானி, செங்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
விடுமுறையை மகிழ்ச்சியாக களிக்க வேண்டிய சொந்த ஊர் பயணம், ஆம்னி பஸ்களின்
கட்டண கொள்ளையால் பெரும் சுமையாக மாறிவருகிறது.
ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை பல ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதுகுறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியானவுடன், போக்குவரத்து துறை
அமைச்சர், 'அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்கப்படும்...' என்பார்.
அதிகாரிகளும் கடமைக்கு
சோதனை நடத்தி, சில பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிப்பர்.
உடனே, பேருந்து உரிமையாளர்கள் அமைச்சரை சந்தித்து பேசுவர். அங்கு
என்னதான் பேச்சுவார்த்தை நடக்குமோ, அதன்பின் எந்த நடவடிக்கையும் இருக்காது.
இதுதான் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது; கட்டண கொள்ளைக்கு தான் முடிவு இல்லை.
இதோ... இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகள்
கண்டபடி கட்டணத்தை உயர்த்தி விட்டன. வழக்கம்போல் ஊடகங்களும் செய்திகள்
வெளியிட, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரும் எப்போதும் போல், 'புகார்
தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
புகார் தெரிவிக்க அவர்கள் என்ன ரகசியமாகவா கட்டணம் வாங்குகின்றனர். பகிரங்கமாக கட்டண விபரங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளனரே...
அதை வைத்து அமைச்சரால் நடவடிக்கை எடுக்க முடியாதா?
'நான் அடிப்பது போல் அடிக்கிறேன்; நீ அழுவது போல் அழு' எனும் ஏமாற்று
நாடகத்தை இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் ஆட்சியாளர்கள் அரங்கேற்றுவர்?
புயல் சிதம்பரத்தை கடக்குமா?
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காங் கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம், சமீபத்தில், காங்., ஆட்சியில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து தன் கருத்துக்களை தெரிவித்திரு ந்தார். அது, இப்போது காங்., கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதையும்,இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு தானே காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்னதை வைத்தும் அரசியல் செய்து, அலப்பறையை கூட்டியவர்கள் காங்கிரசார்.
இந்நிலையில், '2008ல் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், மும்பையில் திடீர் தாக்குதல் நடத்தி, நுாற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்தனர்; நாடே அதிர்ச்சிக்குள்ளானது.
'பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மக்களின் விருப்பமாக இருந்தது; ராணுவமும் தயாராகவே இருந்தது. ஆனால், சில நாடுகளின் அழுத்தத்தால், நம்மால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது...' என்று கூறியுள்ளார் சிதம்பரம்.
மேலும், 'ஆயிரக்கணக்கான காலிஸ்தான் பிரிவினைவாதிகள், அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலுக்குள் இருந்து கொண்டு, மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்து வந்தனர்.
நிலைமை தீவிரமாகவே, 'ஆப்பரேஷன் புளூஸ்டார்' எனும் பெயரில் ராணுவம் பொற்கோவிலுக்குள் நுழைந்து பிரிவினைவாதிகளை கொன்று, சிறைபிடித்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது. பிரதமர் இந்திராவின் இந்த தவறான அணுகுமுறையால், அவர், தன் உயிரையே இழக்க நேரிட்டது...' என்றும் கூறியுள்ளார்.
சிதம்பரத்தின் இந்த பேச்சு, காங்., கட்சிக்குள் புயலை ஏற்படுத்தியுள்ளது.
புயல், சிதம்பரத்தின் அரசியல் வாழ்வை துவசம் செய்யுமா, இல் லை சிதம்பரத்தை கடந்து செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
ரோஷம் பார்த்தால் பதவியில் அமர முடியுமா?
எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஈ.வெ.ராமசாமியை எதிர்த்து, திராவிட இயக்கத்தை விமர்சித்த கம்யூனிஸ்டுகள், இன்று ஈ.வெ.ரா., தேவை என்று கூறுகின்றனர். அதேபோல் ஈ.வெ.ராவை விமர்சித்து, நாங்கள் நாட்டை துண்டாடுகிறோம் என்று சொன்ன காங்கிரசார், இன்று தி.மு.க.,வின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர்...' என்று கூறியுள்ளார், தி.மு.க., - எம்.பி., ராஜா.
தி.மு.க.,வையும் தான், ஈ.வெ.ரா., கேவலமாக விமர்சித்துள்ளார். அவரைப்போல், தி.மு.க.,வை தரக்குறைவாக விமர்சித்தவர் எவரும் இல்லை. இன்று, அவரை துாக்கிவைத்து தி.மு.க., கொண்டாடவில்லையா?
அதேபோன்று தான், 'காங்கிரஸ் கட்சி என்பது நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று...' என்றும், 'கம்யூனிசம் என்பது சர்க்கரை தடவப்பட்ட விஷத்தன்மையுள்ள மாத்திரை, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...' என்றும் விமர்சித்திருந்தார், ஈ.வெ.ரா.,
இப்போது, தி.மு.க., உட்பட காங்., - கம்யூ., கட்சிகள் அவரை தலையில் துாக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர் என்றால், அன்று இக்கட்சிகள் குறித்து ஈ.வெ.ரா., கூறியது உண்மை என்று தானே அர்த்தம்?
அதேபோன்று, காங்., தலைவர்களான நேரு, இந்திரா, காமராஜரை மிகவும் கொச்சைப் படுத்திப் பேசி, அதில் பேரின்பம்கண்டவர், மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி.
அதையெல்லாம் இப்போது சவுகரியமாக மறந்துவிட்டு, தி.மு.க.,வினருக்கு சாமரம் வீசிக்கொண்டே, 'காமராஜர் ஆட்சி அமைப்போம்' என்று பிதற்றுகின்றனர், தமிழக காங்கிரசார்.
தமிழகத்தில், பல கட்சிகளுக்கு பல்டியடித்துக் கொண்டிருக்கும் நாஞ்சில் சம்பத் என்ற மூத்த அரசியல்வாதியிடம், பத்திரிகையாளர் ஒருவர், 'அடிக்கடி உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருக்கிறீர்களே... மக்கள் என்ன நினைப்பர்?' என்று கேட்டாராம்.
அதற்கு, 'மக்கள் விமர்சிக்கத்தான் செய்வர்; அதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டேன்...' என்று கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் கூறினார்.
இன்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள், நாஞ்சில் சம்பத்தின் கொள்கையைத்தான் பின்பற்றி வருகின்றனர். அதனால், அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதில் பெரிய ஆச்சரியம் இல்லை!
ரோஷம் பார்த்தால், பதவியில் அமர முடியுமா?