PUBLISHED ON : அக் 06, 2025 12:00 AM

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஆந்திராவில் இருந்து வணிகம் செய்ய தமிழகத்திற்கு வந்த உறவினரின் மினி
லாரியில், 19 வயது மகளுடன் வந்துள்ளார், ஒரு தாய். திருவண்ணாமலை அருகே
ரோந்து பணியில் இருந்த இரு போலீசார், விசாரணை என்ற பெயரில் அப்பெண்களை
மட்டும் தனியாக அழைத்துச் சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், தாயின்
கண்முன், அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இவர்கள் ரோந்து சென்றது பொதுமக்களை பாதுகாக்கவா, இல்லை தனியாக அகப்படும் பெண்களின் வாழ்வோடு விளையாடவா?
பொதுவாக, இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடும் ஒருவருக்கு, போலீசார் மாவு
கட்டு வைத்தியம் செய்வது வழக்கம். ஆனால், இவர்களுக்கு அப்படி எந்த
வைத்தியமும் செய்யவில்லையே ஏன்?
இனபாசத்தில் மாவு கட்டுப் போட மறந்து விட்டனர் போலும்!
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பாதுகாப்பு தர வேண்டிய போலீசாரே
குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையின் இந்த கருப்பு ஓநாய்கள்
இதுபோன்று இன்னும் எத்தனை பெண்களை சூறையாடினரோ!
தமிழகத்தில் கடந்த
ஒரு மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக, 127 பாலியல்
குற்றங்கள் நடந்துள்ளதாக அ.தி.மு.க., குற்றஞ்சாட்டியுள்ளது.
பெண்
சுதந்திரம் என்பது ஏட்டளவில் தான் உள்ளது. பெண் குழந்தைகள் பள்ளி,
கல்லுாரிகளில் பாலியல் சீண்டல்கள் செய்யப்படுவதும், பணி இடங்களில் பாலியல்
சீண்டல்கள் செய்யப்படுவதும் தொடர் கதையாக உள்ளது.
ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலைகளுக்கு சென்று வரும் நிலையில், அவர்களது பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
'நள்ளிரவில் ஓர் இளம் பெண் தங்க ஆபரணங்கள் அணிந்து, எவ்வித அச்சமும் இன்றி
தெருக்களில் என்று சுதந்திரமாக நடமாட முடிகிறதோ அன்று தான் உண்மையான
சுதந்திரம் தினம்' என்று கூறினார் காந்திஜி.
நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது, அத்தகைய சுதந்திரம் பெண்களுக்கு கானல் நீர் கனவாகவே இருக்கும் போலிருக்கு!
ஏனெனில், மூலை முடுக்கு எல்லாம் மதுக்கடைகளை திறந்து வைத்தும், தாராளமாக
போதைப் பொருட்கள் கிடைக்கும் நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
அதிகரிக்குமே தவிர, ஒருபோதும் குறையாது!
இலக்கை எட்டுமா?
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், தன் பிரசாரத்திற்கு வரும் கூட்டத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்று கனவு காண்கிறார்.
விஜயகாந்த் கட்சி துவங்கிய போது, அவர் நடத்திய பொதுக் கூட்டத்திற்கும், தேர்தல் பிரசாரத்திற்கு அவர் சென்ற ஊர்களிலும் மிகப்பெரிய கூட்டம் வந்தது.
விஜய் போன்றுதான் விஜயகாந்தும் தி.மு.க.,வையும், அன்றைய முதல்வர் கருணாநிதியையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார். அவர் பேசப் பேச மக்கள் எழுச்சியோடு ஆர்ப்பரித்தனர்; ஆரவாரம் செய்தனர்.
ஆனால் அவை ஓட்டாக மாறவில்லை. இதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கென்று தனி ஓட்டு வங்கிகள் உள்ளன. அவற்றை எவராலும் பிரிக்க முடியாது. பரம்பரையாக தி.மு.க.,விற்கே ஓட்டளிப்பவர்கள் உள்ளனர்; அதேபோன்று தான் அ.தி.மு.க.,விற்கும்!
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகளை, அவ்வளவு எளிதில் த.வெ.க.,வுக்கு ஓட்டளிக்க வைத்து விட முடியாது. இதுதான் தமிழக தேர்தல் களத்தின் யதார்த்த நிலை. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல், கூடும் கூட்டத்தைப் பார்த்து, 'தானே அடுத்து முதல்வர்' என்ற கனவில் மிதக்கிறார்.
உதயசூரியன் சின்னமும், இரட்டை இலை சின்னமும் தமிழகத்தின் கடைக்கோடி மக்கள் வரை சென்று, அவர்கள் மனங்களில் ஆழப்பதிந்து விட்டன. விஜய்க்கு இன்னும் சின்னமே ஒதுக்கவில்லை.
மேலும், அவரது ரசிகர்களில் பெரும்பாலானோர் ஓட்டுரிமைக்கான, 18 வயதை இன்னும் எட்டாதவர்கள்.
இந்நிலையில், அவர்களைப் போன்றே விஜயும் பக்குவம் இல்லாதவராக உள்ளார். அவரது பரப்புரை சிறுபிள்ளைத் தனமாக உள்ளது. மரத்தின் மீதும், மதில் சுவர் மீதும், பேனர் மீதும் ஆபத்தாக ஏறி நிற்பவர்களைப் பார்த்து கையசைத்து, 'எல்லாரும் எப்படி இருக்கீங்க?' என்று கேட்கிறார்.
அவரது செயல் தான் இப்படி இருக்கிறது என்றால், பேச்சிலும் முதிர்ச்சியோ, அரசியல் ஞானமோ இல்லாமல் அரை வேக்காட்டுத்தனமாக, சினிமா பாணியில் பேசுகிறார்.
தாறுமாறாக ஓடும் வண்டி தடம்மாறிப் போகும்; இலக்கை எட்டாது என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்!
நீதிமன்றம் உத்தரவிடுமா?
சுக.மதிமாறன், நத்தம், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கடந்த 1991 - -96ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சாலையில் சென்ற போது போக்குவரத்தை நிறுத்தியதை குறைகூறி, நியாயம் கோரிய தி.மு.க., உட்பட சிறிய கட்சிகள் வரை, மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், சாலை சந்திப்பு, கடைவீதிகளில் தான் பொதுக்கூட்டத்தை நடத்துகின்றனர்.
இக்கூட்டங்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருகின்றனர். மேலும், அவர்களை அழைத்து வரும் மினிவேன்கள் மற்றும் லாரிகள் ஊரின் நுழைவில் நிறுத்தப்பட்டு, வாகன போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
இதை தவிர்க்க, நகரின் எல்லையில் உள்ள காலி மைதானங்களில் கூட்டத்தை நடத்தி, தங்கள் கட்சி தொண்டர்களின் பலத்தை அரசியல் கட்சிகள் காட்டலாமே!
பொதுக்கூட்டங்கள் நடத்த ஆளுங்கட்சிக்கு ஒரு மாதிரியும், பிற கட்சிகளுக்கு வேறு மாதிரியும் நிபந்தனைகள் விதித்து காவல் துறை அனுமதி அளிக்கிறது.
கொடிமரம் ஊன்றுவதிலும், பேனர்கள் வைப்பதிலும் கடுமை காட்டும் நீதிமன்றம், போக்குவரத்திற்கு இடையூறின்றி ஊரின் ஒதுக்கு புறத்தில் தான் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும் என உத்தரவிட வேண்டும்.
அப்போதுதான், தமி ழக வெற்றிக் கழக கூட்டத் தில் நடந்தது போன்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்!