/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
பொது அறிவை வளர்த்து கொள்ளுங்கள்!
/
பொது அறிவை வளர்த்து கொள்ளுங்கள்!
PUBLISHED ON : மே 12, 2025 12:00 AM

ஆர்.சந்திரன்,
கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காஷ்மீரில் சுற்றுலா
பயணியரை கொலை செய்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, துல்லிய துப்பாக்கி
சூடு நடத்த உத்தரவிட்ட, பிரதமர் மோடியை உலகமே பாராட்டுகிறது' என்று
கூறியுள்ள அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அத்துடன்
நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.
'பழனிசாமி உத்தரவிட்டால்,
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க., இளைஞர்கள் 1,000 பேரை,
பாகிஸ்தானுடன் துப்பாக்கி ஏந்தி போரிட, போர் களத்திற்கு அழைத்து செல்ல
தயாராக இருக்கிறோம்' என்று ஒரு, 'பிட்டை' போட்டு கிச்சு கிச்சு
மூட்டியுள்ளார்.
ராணுவம் என்ன அ.தி.மு.க., தலைமை அலுவலகமா இல்லை
பழனிசாமி தான் முப்படைகளின் தளபதியா? விருதுநகரிலிருந்து இவர் திரட்டி
வரும் 1,000 பேர்களுக்கு உத்தரவிடுவதற்கு?
அது சரி... இவர் அழைத்து வருவோருக்கு துப்பாக்கியை துாக்கவாவது தெரியுமா?
குடும்பத்துடன்
மகிழ்ச்சியாக சுற்றுலா சென்ற அப்பாவி ஹிந்து ஆண்களை, குருவியை சுடுவது
போல் சுட்டுக் கொன்றுள்ளனர், பாகிஸ்தான் பயங்கரவாதிகள். அவர்களை தேடிச்
சென்று, நம் ராணுவம் வேட்டையாடியது, ஒவ்வொரு இந்தியரையும் உணர்ச்சி வசப்பட
வைத்திருக்கிறது என்பது உண்மையே!
அதற்காக, இப்படியா உளறுவது?
பஞ்சாப் மாநிலத்தில், 'பஹல்காம் தாக்குதலுக்கு பழி வாங்க போகிறேன்' என்று, விவசாயி ஒருவர் அரிவாளுடன் புறப்பட்டாராம்...
படிக்காத பாமரரான அவருக்கும், முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜிக்கும் என்ன வித்தியாசம்?
அ.தி.மு.க., தலைவர்கள் எல்லாம் இப்படி தெர்மாக்கோல் புகழ் செல்லுார் ராஜுவை போலவே இருந்தால் எப்படி?
சிறிதாவது பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டாமா?
கற்பது சுமை அல்ல சுகம்!
எஸ்.ஆர்.ரத்தினம், செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியல்வாதிகளுக்கு எதில் அரசியல் செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
தகுதியான மருத்துவர்களை அடையாளம் காண உதவும் நீட் தேர்வு, உயர்தர கல்வியை போதிக்கும் நவோதயா மற்றும் பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள், அறிவை விசாலமாக்கும் மும்மொழி கொள்கை என, எல்லாவற்றையும் எதிர்த்தவர்கள், தற்போது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கான தேர்வையும் எதிர்க்கின்றனர்.
கட்டடத்திற்கு அஸ்திவாரம் தேவைப்படுவது போல், வாழ்விற்கான அஸ்திவாரம் கல்வி!
இவ்விஷயத்தில் இரக்கம், சலுகை, பரிதாபம் என்பதெல்லாம், மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் செயல்!
முழுமையாக கற்கும் ஒருவன் தான் வீட்டிற்கும், நாட்டிற்கும் பயன்படுவான். அப்படி இரண்டிற்கும் பயன்படாத வகையில் கல்வி திட்டம் இருந்தால், அதனால் என்ன பயன்?
மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொடுக்கும் அறிவுச் சாலைகளாக பள்ளிகள் இருக்க வேண்டுமே தவிர, வெறும் சான்றுகளை வழங்கும் இடமாக இருக்கக் கூடாது.
படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்தி, திறமையான ஆசிரியர்களை கொண்டு அவர்களுக்கு புரியும் விதத்தில் பாடங்களை நடத்தி, தேர்வுகளில் வெற்றி பெற வைப்பதற்கான வழிமுறைகள் குறித்து தான் சிந்திக்க வேண்டுமே தவிர, இடைநிற்றல் என்ற ஒற்றை புள்ளியில் நின்று, மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது, அரசு செய்யும் காரியமல்ல!
படிப்பை சுமை என்று பிரசாரம் செய்து, தேர்வு பயத்தை மாணவர்களிடம் விதைப்பதும், சலுகை காட்டுகிறேன் என்ற பெயரில் மாணவர்களின் எதிர்காலத்தை சவக்குழியில் தள்ளுவதையும் பெற்றோரும், கற்றவர்களும் எதிர்க்க வேண்டும்!
சிறகடிப்பதை சுமையாக உணர்ந்தால் பறவைகளின் வாழ்வு முடிந்து போகும். வேட்டையாடுவதை சுமையாக உணர்ந்தால், விலங்குகள் பசியால் மடிந்து போகும். கல்வியை சுமை என்று உணர்ந்தால் அறிவு செல்வத்தை எப்படி பெற முடியும்?
எனவே, மாணவர்கள் முழுமையாக கற்க வழிவகை ஏற்படுத்தி தர வேண்டுமே தவிர, அரசே தேர்வு பயத்தை காட்டி, அவர்கள் வாழ்வோடு விளையாடக் கூடாது!
கற்பது சுமை அல்ல; சுகம் என்று உணர வைப்பது ஆசிரியர்களின் கடமை மட்டுமல்ல; அரசின் கடமையும் கூட என்பதை ஆளுவோர் மனதில் கொள்ள வேண்டும்!
'இண்டி யா' கூட்டணியின் புதுவித கொள் கை!
வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக் கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்'கடிதம்:கேரளா மாநிலம் விழிஞ்ஞம் பன்னோக்கு சர்வதேச சரக்கு போக்குவரத்து ஆழ்கடல் துறைமுகத்தை பிரதமர் மோடி, கேரளா முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்தனர். அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் லிமிடெட் சார்பாக, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இத்துறைமுகம் உருவாகியுள்ளது.
கடல் வழி சரக்கு போக்குவரத்துக்கு, 75 சதவீதம் அந்நிய நாடுகளின் துறைமுகங்களையே சார்ந்துள்ளது, நம் நாடு; இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இந்தியா வரவேண்டிய வெளிநாட்டு சரக்குகள் தற்போது சிங்கப்பூர், கொழும்பு, துபாய் துறைமுகங்களுக்கு சென்று, அங்கிருந்து கப்பல் மாறி இங்கு வருகின்றன.
இனி, மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து கப்பல்கள் கூட தடம் மாறாமல் விழிஞ்ஞம் துறைமுகம் வந்து, 'ஹால்ட்' ஆகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த திட்டத்திற்காக, 2015ல் தொழிலதிபர் அதானியுடன் கேரளா அரசு உடன்படிக்கை மேற்கொண்டபோது, அதை எதிர்த்து, அங்குள்ள லத்தீன் கிறிஸ்துவ சர்ச் பாதிரியார்கள், மீனவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினர்.
கூடவே, இயற்கை பேரிடர், கொரோனா இவற்றாலும் துறைமுகம் பணி தாமதம் ஆனது.
இந்நிலையில், தற்போது துறைமுக பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
எல்லாவித கால நிலைக்கும் ஏற்ற நிலையில் விழிஞ்ஞம் துறைமுகம் உள்ளதால், மத்திய - மாநில அரசுகள் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தினால், மாநிலத்தில் தொழிற்சாலைகள் அதிகரித்து, விழிஞ்ஞம் மிகப் பெரிய வர்த்தக துறைமுக மையமாக ஆகிவிடும்.
மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைய இருக்கும் இத்துறைமுகத்தை ஆரம்பம் முதல் பாதிரியார், மீனவர்கள் கடுமையாக எதிர்த்த போதும், இடது சாரி அரசு அதை கண்டுகொள்ளவில்லை.
இதையே பா.ஜ., அரசு செய்திருந்தால் முதலாளித்துவம், கார்ப்பரேட் மயம் என்று குதித்திருப்பர்.
இப்போது, மாநில முன்னேற்றம் என்று பெருமையுடன் மார்தட்டுகிறது, கேரள அரசு!
'மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்' என்பது தானே, 'இண்டியா' கூட்டணியினரின் கொள்கை!