PUBLISHED ON : பிப் 16, 2025 12:00 AM

டி.ஈஸ்வரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அத்திக்கடவு - அவிநாசி
திட்ட பாராட்டு விழாவில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா படங்கள் இடம்
பெறவில்லை' என, தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள அ.தி.மு.க., முன்னாள்
அமைச்சர் செங்கோட்டையனுக்கு, 'அரசியல் கலப்பு இல்லாத, விவசாயிகள் நடத்திய
கூட்டம் என்பதால், அவர்களது படங்கள் இடம்பெறவில்லை' என பதில்
அளித்துள்ளார், அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.
ஜெயலலிதாவால்
அரசியலில் அறிமுகம் செய்யப்பட்ட பழனிசாமி, ஐ.நா., சபையின் பொதுச்செயலராக
இருந்திருந்தால், விவசாயிகள் நடத்திய விழாவில், அரசியல் கலப்பு
இருக்கக்கூடாதுதான். ஆனால், பழனிசாமியோ அ.தி.மு.க., என்ற அரசியல் கட்சியின்
பொதுச் செயலர். அக்கட்சியும், அதன் தேர்தல் சின்னமான இரட்டை இலையும்
எம்.ஜி.ஆருக்கு சொந்தமானது; தேர்தலில் அந்த சின்னத்தில் நின்றுதானே
பழனிசாமி எம்.எல்.ஏ., ஆனார்; முதல்வராகவும் பதவி வகித்தார். அதன்வாயிலாக
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றினார்?
அப்போது, அது ஓர் அரசியல் நிகழ்வு தானே?
அதனால்,
மேடையில் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா படங்கள் இல்லையே என்ற செங்கோட்டையனின்
அதிருப்தியில் தவறு இல்லை; அதேநேரம், அந்த அதிருப்தி காலம் கடந்து
வந்ததுதான் தவறு.
செங்கோட்டையனை 1974ல் ஈரோடு மாவட்டம் குள்ளபாளையம்
பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும், 1977ல் சத்தியமங்கலம் சட்டசபை மற்றும்
1980, 1984ல் நடைபெற்ற கோபிச்செட்டிபாளையம் சட்டசபை தேர்தல்களில்
போட்டியிட வாய்ப்பு அளித்து, வெற்றி பெற செய்து, ஈரோட்டில் அவரை பெரிய
துாணாக உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்., அவர் மறைவிற்குபின், அ.தி.மு.க., பொதுச்
செயலராக பதவி ஏற்ற ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக மாறினார் செங்கோட்டையன்.
அப்போது,
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், 'இனி பட்டிதொட்டி
எங்கும் புரட்சித் தலைவி திருநாமத்தை முழங்குவோம்' என்று ஆவேசமாக பேசி,
ஜெயலலிதாவின் அன்பை பெற்றார். இதன் வாயிலாக, 'எம்.ஜி.ஆர்., பெயரை மறந்து,
இனி ஜெயலலிதா பெயரைதான் கட்சியினர் உச்சரிக்க வேண்டும்' என, மறைமுகமாக
கூறப்பட்டது.
அன்றிலிருந்து, அரசு மற்றும் கட்சி விழா மேடைகளில், ஜெயலலிதாவின் படம் தான் பெரிதாக போடப்பட்டது-.
கடந்த
1991ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற
ஓர் அரசு நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆரின் பெரிய அளவிலான உருவப்படத்தை
அதிகாரிகள் தெரியாமல் வைத்து விட்டனர். அதைக் கண்ட அமைச்சர் ஒருவர்,
ஜெயலலிதா வருவதற்குள் அப்படத்தை அகற்றி, சிறிய படத்தை வைத்தார்.
அன்று செங்கோட்டையன் தன் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை!
சென்னை
தரமணி திரைப்பட நகருக்கு எம்.ஜி.ஆ-ர்., பெயர் சூட்டப்பட்டிருந்த நிலையில்,
அதை அகற்றி, ஜெயலலிதா பெயரை சூட்ட அரசாணை வெளியிட்ட போதும், உணவகத்திற்கு,
உப்புக்கு, குடிக்கும் நீருக்கு, உடல் பரிசோதனைக்கு என, திரும்பிய
திசையெல்லாம் ஜெயலலிதா பெயரையே சூட்டியபோது, 'எம்.ஜி.ஆர்., பெயர் இல்லையே'
என்று இப்போதுபோல், அப்போது ஜெயலலிதாவிடம் தன் அதிருப்தியை வெளிப்படுத்தி
இருந்தால், செங்கோட்டையனை பாராட்டலாம்!
ஆனால், அவர் அப்படி செய்யவில்லை; காரணம், இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர்களில் இவரே முதன்மையானவர்!
அன்று செங்கோட்டையன் போட்ட பிள்ளையார் சுழியை, இன்று ஜெயகுமார் போட்டுள்ளார்.
அரசியலில், தன்னை உருவாக்கியவர்களை ஓரம் கட்டுவது சகஜம்தான். அதுவும் அ.தி.மு.க.,வில் இந்த விஷயம் ரொம்பவே சகஜம்!
எனவே, காலம் கடந்து வெளிப்படும் செங்கோட்டையனின் அதிருப்தியால் எந்த பிரயோஜனமும் இல்லை!
எத்தனை காலம் இது தொடரும்?
எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2024 ஆகஸ்ட் மாதம், கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் தனியார் பள்ளியில், போலி என்.சி.சி., முகாம் நடத்திய சிவராமன் என்பவனால், 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம், தமிழகத்தை அதிர வைத்த நிலையில், தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகாவிலுள்ள ஒரு கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவியை, அப்பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்ற செய்தி, பெண்ணை பெற்றவர்களின் நெஞ்சைப் பதற வைத்துள்ளது.
ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மடியில் நெருப்பை கட்டியது போன்று இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
குற்றவாளிகள் இதற்கான தண்டனையை அனுபவித்து, வெளியில் வந்து விடுவர்; ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியின் மனதில், நெருஞ்சி முள்ளாய் தொடரும் இந்த அவமானம், அவள் வாழ்நாள் முழுதும் துரத்துமே... இந்த மன பாதிப்புக்கு எதைக் கொண்டு சரிசெய்ய முடியும்?
தமிழக முதல்வர், பள்ளி மாணவியர் தன்னை, 'அப்பா' என்று அன்பாக அழைப்பதாக கூறியுள்ளார்.
அந்த மகள்களுக்கு, அவரது ஆட்சியில் நடக்கும் இத்தகைய கொடூர செயல்களுக்கு, என்ன பதில் கூறப்போகிறார்? ஆசிரியர் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் இந்த மனித விலங்குகளுக்கு என்ன தண்டனை தரப் போகிறார்?
இன்னும் எத்தனை காலத்துக்கு, பெண் பிள்ளைகளுக்கு இந்த கொடுமை தொடரும்?
தமிழகத்தின் தலைவிதி!
என்.நக்கீரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர், தமிழகத்தின் முதல்வராக வர வேண்டும்' என்று, தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார், தமிழக கவர்னர் ரவி.
அவரது விருப்பம், எக்காலத்திலும், தமிழகத்தில் நிறைவேற வாய்ப்பே இல்லை!
இதுவரை, நாடார் இனத்தைச் சேர்ந்த காமராஜர், ரெட்டியார் - ஓமந்துார் ரெட்டியார், முதலியார் - அண்ணாதுரை, பக்தவத்சலம், பிராமணர் - ராஜாஜி, ஜெயலலிதா, இசை வேளாளர் - கருணாநிதி, தேவர் - பன்னீர்செல்வம், கொங்கு வேளாள கவுண்டர் - பழனிசாமி என, இவர்களே முதல்வர் பதவி வகித்துள்ளனர்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த, கக்கன் போன்றவர்கள், அதிகபட்சமாக உள்துறை அமைச்சராக மட்டுமே உயர முடிந்து உள்ளது.
எனவே, இந்திய ஜனாதிபதி ஆக முடிந்தாலும், கழகங்களின் ஆட்சியில் முதல்வர் பதவி என்பது, பட்டியல் இனத்த வருக்கு கானல் நீரே!
இங்கு, வாய் அளவில் தான் சமூக நீதி பேசப்படும்; செயலில், பிளாஸ்டிக் சேர் தான் கிடைக்கும்!
இது தான் தமிழகத்தின் தலைவிதி!