PUBLISHED ON : ஆக 02, 2026 12:28 AM

கு.காந்தி ராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து மிகவும் குறைந்து, டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது நம் அச்சம் .
ஆனாலும், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது காங்கிரஸ் அரசு. தமிழக அரசியல் கட்சிகளோ, காங்கிரசை எதிர்ப்பதற்கு பதில், மத்திய பா.ஜ., அரசை குற்றம் கூறிக்கொண்டிருக்கின்றன.
கர்நாடக அரசு அணை கட்டுவதற்கும், மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்?
மேகதாது அணை கட்டுவது தொடர்பாக, கர்நாடக காங்கிரஸ் அரசு அனுப்பி வைத்த திட்ட அறிக்கையை, மத்திய பா.ஜ., அரசு ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளது; இது தமிழகத்துக்கு மிகவும் சாதகமான விஷயம்.
மேலும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை, அப்போதைய காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி அரசு கெஜட்டில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது; பா.ஜ., அரசுதான் கெஜெட்டில் வெளியிட்டது.
அதுமட்டுமல்ல... கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் இருந்த காலங்களில், தமிழகத்துக்கு தேவையான காவிரி நீர் எந்த பிரச்னையும் இன்றி திறந்து விடப்பட்டது.
இப்படி மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்திற்கு சாதகமாகவே செயல்படுகிறது. ஆனால், தமிழக அரசியல்வாதிகளோ மேகதாது அணை கட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் குறித்து பேசாமல், மத்திய அரசு குறித்து பேசி, விஷயத்தை திசைமாற்றுவது ஏன்?
தமிழக அரசியல்வாதிகளே... திசை திருப்பும் உங்கள் தகிடுதத்தங்களை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர் என்பதை மறந்து விடாதீர்கள்!
புதிய பாதை காட்டும் ஐ.ஐ.டி., இயக்குநர்!
டாக்டர் பாலசாண் டில்யன், மனநல மருத்துவர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உத்தரபிரதேசம், கான்பூர் ஐ.ஐ.டி-.,யில் இடம் கிடைக்காததால் கோபமுற்ற இளைஞர் ஒருவர், கான்பூர் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.,-களின் சர்வர்களை முடக்கியுள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அடுத்த ஆண்டு அவருக்கு இடம் தருவதாக, அந்த ஐ.ஐ.டி., இயக்குநர் ஒப்புக்கொண்டிருப்பது தான்!
உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பக் நிறுவனங்களின் உயர் பாதுகாப்பு கொண்ட கணினி அமைப்புகளை, தனியொருவராக ஊடுருவுவது என்பது சாதாரண விஷயமல்ல; அது, 'இன்டெலெக்சுவல்' எனச் சொல்லப்படும், 'மேதைமை'த்தன்மை. ஆனால், அந்த மேதைமை வெளிப்பட்ட விதம் தான் தவறாகி விட்டது.
இச்சம்பவத்தில், அந்த இளைஞனின் செயலை நியாயப்படுத்த முடியாது என்றாலும், நமது கல்வி மற்றும் தேர்வு முறைகளில் உள்ள குறைகளையும் நாம் புறக்கணிக்க முடியாது.
ஓர் இளைஞனின் திறமை அல்லது படைப்பாற்றலை மதிப்பிடாமல், மதிப்பெண்களை மட்டும் வைத்து, அவர்களுக்கான கதவுகளை மூடும்போது, இதுபோன்ற அசாதாரண திறமையாளர்கள் வெளியே தள்ளப்படுகின்றனர்.
பொதுவாகவே, 'சைபர் செக்யூரிட்டி' மற்றும் 'ஹேக்கிங்' துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு, அதை, ஆரோக்கியமான, 'ஹேக்கிங்'ஆக மாற்றி, நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் அதை எப்படி பயன்படுத்துவது என்ற சரியான வழிகாட்டுதல் இங்கே கிடைப்பதில்லை. அதனாலேயே சில இளைஞர்கள் அதை தவறான வழிகளில் பயன்படுத்த துணிகின்றனர்.
இதை தவிர்க்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற திறமைகளை நேர்வழியில் பயன்படுத்தவும் அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள், சில முயற்சிகளை எடுக்க வேண்டும்.
மேலைநாடுகளில், 'பக் பவுன்டி' என்ற கலாசாரம் உள்ளது. அதாவது, ஒரு பெரிய நிறுவனத்தின் சர்வரில் உள்ள குறையைக் கண்டறிந்து சொன்னால், அவர்களுக்குப் பரிசும், வேலையும் தருவர். நம் நாட்டிலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் இதுபோன்ற சவால்களை நடத்தி, இளைஞர்களின் ஹேக்கிங் திறமையை நேர்மையான வழியில் வெளிக்கொணரலாம்.
மேலும், தேர்வுகள், மதிப்பெண்களை தாண்டி, ஒரு துறையில் அசாதாரண திறமை கொண்ட இளைஞர்களுக்கு, ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சிறப்புச் சேர்க்கையாக வாய்ப்பு அளிக்கலாம்.
அதேநேரம் திறமை மட்டும் போதாது; அதை சமூகப் பொறுப்புணர்வுடன் சரியாக பயன்படுத்தும் முதிர்ச்சியும் வேண்டும்.
அதற்கு, பள்ளி மற்றும் கல்லுாரிகளிலேயே மாணவர்களுக்கு உணர்ச்சிகளைக் கையாளவும், அவர்களது ஆற்றலை ஆக்கப்பூர்வமாக மாற்றவும் சிறப்பு வழிகாட்டு தல்கள் வழங்கப்பட வேண்டும்.
ஒரு தீப்பெட்டியின் மூலம் விளக்கையும் ஏற்றலாம்; வீட்டையும் கொளுத்தலாம். பொருள் ஒன்று தான்; பயன்பாட்டில் தான் வித்தியாசம் இருக்கிறது.
அதைப்போன்று இளைஞர்களின் அறிவும் ஒரு கூர்மையான கத்தியைப் போன்றது. அதைச் சரியான வழியில் பயன்படுத்தக் கற்றுக் கொடுத்தால், அது நாட்டின் மிகப்பெரிய சொத்தாக மாறும்; தவற விட்டால் அதுவே பேரழிவாக மாறும்!
அவ்வகையில், ஐ.ஐ.டி., இயக்குநர், அந்த இளைஞரை சிறையில் தள்ளி, அவரது எதிர்காலத்தைப் பாழாக்காமல், அவரது திறமையைப் புரிந்துகொண்டு, அடுத்த ஆண்டு வாய்ப்பளித்திருப்பது ஒரு நேர்மறையான அணுகுமுறை.
அம்மாணவரிடம் அவர் காட்டிய பரிவும், புரிதலும், இனிவரும் காலங்களில் நமது ஒட்டுமொத்தக் கல்வி முறைக்கும் ஒரு புதிய பாதையைக் காட்டட்டும்; இளைஞர்கள் தம் திறமையால் நம் தேசத்தை பாரில் உயர்த்தட்டும்!
பிரிவினைவாத அரசியல் செய்யும் காங்.,!
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில், கவர்னர் பங்கேற்கும் நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டதற்காக கண்டனம் தெரிவித்துள்ளார், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்.
மத்திய அரசு வழிகாட்டுதலில், கவர்னர் பங்கேற்கும் அரசு நிகழ்வுகளில், முதலில் வந்தே மாதரம், அடுத்தது தேசீய கீதம், அதற்கடுத்து மாநில மொழி வாழ்த்து என்று தெளிவாக கூறப் பட்டுள்ளது.
எனவே, கவர்னர் பங்கேற்கும் நிகழ்வில் மேற்கூறிய முறையே பின்பற்றப்படும்; இதை துணைவேந்தரும் ஏற்கனவே உறுதி செய்துள்ளார். தமிழக அரசு பதவியேற்ற போதுகூட இதே முறை தானே பின்பற்றப்பட்டது!
தேசிய கட்சி என்று கூறப்படும் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர், இனம் மற்றும் மொழி பிரிவினைவாத அரசியல் செய்யாமல், தேசிய சிந்தனையில் செயல்படுவது, அவரது கட்சிக்கு நல்லது!
