தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ ஊர் ரெண்டுபட்டால் ராகுலுக்கு கொண்டாட்டம்!

 ஊர் ரெண்டுபட்டால் ராகுலுக்கு கொண்டாட்டம்!

 ஊர் ரெண்டுபட்டால் ராகுலுக்கு கொண்டாட்டம்!

2


PUBLISHED ON : ஆக 01, 2026 12:52 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 01, 2026 12:52 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்' என்று கூறியுள்ளார், காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் .

கடந்த 1965ல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில், 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர்; 1974ல் குஜராத்தில் காங்கிரஸ் முதல்வர் சிமன்பாய் படேல் ஆட்சிக் காலத்தில், எல்.டி.பொறியியல் கல்லுாரி மாணவர்கள், விடுதி உணவுக் கட்டண உயர்வுக்கு எதிராக துவக்கிய போராட்டம், மாநிலம் தழுவிய ஊழல் எதிர்ப்பு போராட்டமாக வலுப்பெற்றதில், கிட்டத்தட்ட, 100 மாணவர்கள் உயிரிழந்தனர்.

அதேபோன்று, 1974-ல் பீஹாரில் மாணவர்கள் நடத்திய சட்டசபை முற்றுகை போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பல மாணவர்கள் உயிரிழந்தனர். மாநில அரசுக்கு எதிராக ஆரம்பித்த இப்போராட்டம், மத்தியில் பிரதமர் இந்திராவின் ஆட்சிக்கு எதிரான தேசிய அளவிலான மக்கள் புரட்சியாக மாறியது. இப்போராட்டத்தின் விளைவு தான், 1975ல் இந்திரா அவசர நிலை பிரகடனம் செய்ய முக்கிய காரணம்!

இப்படி காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு போராட்டமும் உயிர் பலியின்றி, அமைதியாக நடந்து முடிந்ததாக வரலாறே கிடையாது.

அதற்கெல்லாம் பொறுப்பேற்று, அன்றைய காங்., பிரதமர்களோ, உள்துறை அமைச்சர்களோ தங்கள் பதவியை ராஜினாமா செய்ததும் இல்லை.

ஆனால், இன்று நேபாளம், இலங்கையில் நடந்தது போன்று, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தை வளர விடாமல், முளையிலேயே கிள்ளி எறிந்துள்ளார், பிரதமர் மோடி.

அதை தாங்க முடியாமல், 'மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்' என்று கூப்பாடு போடுகிறார், காங்., - எம்.பி., ராகுல்.

பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடைபெறும் போது, அப்பகுதியில், 144 தடை உத்தரவு அமலில் இருந்த நிலையில், பாதுகாப்பு வளையங்களை உடைத்து, மாணவர்கள் முன்னேற முயன்றுள்ளனர்.

காவல் துறை கூட்டத்தை கட்டுப்படுத்தாமல் விட்டிருந்தால், என்ன நடந்திருக்கும்?

மாணவர்களின் பெயரில் ஒளிந்திருக்கும் பிரிவினைவாத சக்திகளாலும், அந்நிய கைக்கூலிகளாலும் பல தலைவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.

அப்போது, அதற்கு யார் பொறுப் பாவர்... இதே காவல் துறை தானே?

ஒரு போராட்டம் வன்முறையாக மாறி, பொதுச் சொத்து நாசமாகும் போது, அதை காவல் துறையினர் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும் என்கிறாரா ராகுல்?

ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பது போல், மத்திய அரசுக்கு எதிராக எவராவது போராட வந்து விட்டால், ராகுலுக்கு கொண்டாட்டமாகி விடுகிறதே!

அதிகாரிகளின் தவறுக்கு அமைச்சருக்கு தண்டனையா?


கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

அரசு ஊழியர்களின் அஜாக்கிரதையால் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டால், அதற்கு காரணமான அரசு அதிகாரிகளையோ, ஊழியர்களையோ நேரடியாக தண்டிக்காமல், அத்துறையின் அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்வது நம் நாட்டில் வழக்கமாக உள்ளது.

தவறு செய்த அரசு அதிகாரிகள், ஊழியர்களை அடையாளம் கண்டபின், அமைச்சர் ஏன் இத்தகைய சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும்?

அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்களால் குற்றங்கள் நேருகின்றன. ஆனால், அவர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச தண்டனையோ பணி இடைநீக்கம் அல்லது வேறு துறைக்கு மாற்றுவது என்பதாகத் தான் இருக்கிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் வேறு துறைக்கு மாற்றப்பட்டால் மட்டும், அவர்களது அஜாக்கிரதைத்தனம் போய்விடுமா?

குற்றம் செய்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களை பணியிலிருந்து நீக்குவதோடு, பணிக்காலத்தில் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய மொத்த ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக அவர்களிடமிருந்து பெறுவதோடு, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் போன்ற சேமிப்பு தொகைகளையும் அவர்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உரிமை கோர முடியாதபடி, குற்றவியல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

இப்படி கடுமையான சட்ட திருத்தம் கொண்டு வந்தால் தான், அரசு ஊழியர்கள் தங்களது பணியை கவனக்குறைவின்றி, ஜாக்கிரதையாக கையாள்வர். குற்றங்களும் குறைய வாய்ப்பு உண்டு.

அதைவிடுத்து, அவர்களை சஸ்பெண்ட் செய்வதாலோ, பணியிட மாற்றம் செய்வதாலோ குற்றங்கள் குறையாது!

சூரிய சக்தி மின்சாரத்துக்கு மாறலாமே!


ரா.சேது ராமானுஜம், விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப மின் நுகர்வு அதிகரித்து வருகிறது; இதனால், மின் தட்டுப்பாடும் உயர்ந்து வருகிறது.

இதை தவிர்க்க, பா.ஜ., ஆளும் குஜராத் மாநிலத்தில், சூரிய ஒளி மின்சக்தி திட்டங்கள், படுவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அணைகளின் நீர் மட்டங்களின் மேல் பகுதிகளிலும், அரசுக்கு சொந்தமான காலி நிலங்கள், அரசு கட்டடங்களிலும் சோலார் பேனல்கள் அமைத்து, சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சி, மாநிலம் முழுதும் நடைபெற்று வருகிறது.

அதேபோன்று தான் ஒடிஷாவிலும்!

இங்கு, 3,000 குடும்பங்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே தயாரித்து, உபயோகப்படுத்தி வருவதால், அவர்களுக்கான மின் கட்டணம் பூஜ்ஜியமாக உள்ளது.

எனவே குஜராத், ஒடி ஷாவை பின்பற்றி, தமிழகமும் அரசு கட்டடங்களில் சோலார் பேனல்கள் அமைத்து, சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரித்தால், மின் பற்றாக்குறை இருக்காது.

'ஐயோ வெயில்...' என்று கூவுவதை விட, அந்த வெயிலில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை மக்களும் கடைப்பிடித்தால், குளுகுளு, 'ஏசி'யில் மின் கட்டணமே இன்றி சொகுசாக வாழலாம்!

மின்சார உற்பத்தியில் மிகை மின் மாநிலமாக தமிழகம் மாறினால், தொழிற்சாலைகள் தங்கு தடையின்றி இயங்கும்; உற்பத்தி பெருகும்; புதிய தொழிற்சாலைகள் உருவாகும்; வேலை வாய்ப்புகள் பெருகும்!

இதுகுறித்து அரசு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அரசு துறை சார்ந்த இடங்கள், கட்டடங்களில் சூரிய ஒளி மின்சார தயாரிப்பில் கவனம் செலுத்தினால், தமிழகம் விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும்; மின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது!

தமிழகம் கவனத்தில் கொள்ளுமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us