/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தி.மு.க.,வினர் திருந்த மாட்டர்!
/
தி.மு.க.,வினர் திருந்த மாட்டர்!
PUBLISHED ON : டிச 08, 2025 02:20 AM

ரா.முனியன், பொள்ளாச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் என்பது மழைக்காலம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஓரறிவுடைய எறும்புகள் கூட, மழைக்காலத்துக்கு தேவையான உணவை, கோடைக் காலத்திலேயே சேமித்து வைத்துக் கொள்ளும்.
ஆனால், மழை வெள்ளத்திலிருந்து, மக்களை பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்களோ, மழை துவங்க சில நாட்கள் இருக்கும் போதுதான், மழைநீர், கழிவுநீர் கால்வாய்களை இடித்து, சீரமைப்பு பணிகளையே துவக்குகின்றனர். கேட்டால், '98 சதவீத பணிகளை முடித்து விட்டோம்; இது மீதமுள்ள, 2 சதவீத பணிகளை தான் இப்போது செய்கிறோம்' என்று கதை கூறுவர்.
ஆனால், சில நாட்களுக்கு முன் பெய்த மழையில், சென்னை அண்ணாசாலை ஆயிரம்விளக்கு பகுதி முதல், பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலை வரை நகரே வெள்ளத்தில் மிதந்தது.
பிரதான சாலைகள் மட்டுமின்றி, உட்புற சாலைகளிலும் தண்ணீர் தேங்கி, மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
கோயம்பேடு, தேனாம்பேட்டை, பல்லாவரம், அண்ணாநகர், அசோக் நகர், தி.நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
சில மாதங்களுக்கு முன், 'நவம்பர்- - டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழையை, எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்?' என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, 'வடிகால் பணிகள், 98 சதவீதம் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள, 2 சதவீத பணியும் மழை வருவதற்குள் முடிந்து விடும்' என்று, 'கதை' அளந்தார். 98 சதவீதம் முடிந்த பணிகளே இந்த லட்சணத்தில் இருந்தால், 40 - 50 சதவீதம் மட்டுமே முடித்திருந்தால், மக்களின் கதி என்னாவது?
நீச்சலடிக்க தெரியாதவர்கள் ஜலசமாதி ஆகியிருப்பரோ?
ஒவ்வொரு ஆண்டும், 4,000 கோடி ரூபாயை வடிகால் பணிகளை சீரமைக்க செலவு செய்வதாக சென்னை மாநகராட்சி கூறுகிறது. ஆனால், எந்த மாற்றமும் இல்லாமல், சென்னை வெள்ளக்காடாக தான் காட்சி தருகிறது.
தி.மு.க.,வினருக்கு வாக்குறுதி கொடுப்பதும், அதிலிருந்து வழுக்கி கொண்டு போவதும் கைவந்த கலை.
எனவே, அவர்களை ஆதரித்து ஓட்டளித்து ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் வாக்காளர்கள் மாறும் வரை, அவர்கள் திருந்தப் போவதில்லை!
அதிகார திமிர் அடங்கும்! ஜி.சத்திய மூர்த்தி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், இஸ்லாமியர்களை விட தி.மு.க.,வினரும், கம்யூனிஸ்ட்களும் தான் பிரச்னையை பெரிதுபடுத்தி வருகின்றனர்.
இந்திய விடுதலையின் போது, ஆங்கிலேயர்களை பார்த்து, 'போகாதே... போகாதே... என் கணவா...' என்று ஒப்பாரி வைத்த கூட்டம் தானே நீதிக்கட்சி வழிவந்த தி.மு.க.,வும், தகர டப்பா கட்சியான கம்யூனிஸ்டும்!
இவர்களுக்கு இம்மண்ணின் தொன்மையும் தெரியாது; அதன் மகிமையும் புரியாது.
அதிகார பசிக்காக அந்நிய சக்திகளுக்கு சலாம் அடிக்கும் கூட்டம் இது!
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டால் வாய்மூடி மவுன விரதம் காப்பர்; அதே காஸாவில் பாலஸ்தீன முஸ்லிம்கள் தாக்கப்பட்டால், இங்கு அமர்ந்து நீலிக்கண்ணீர் வடிப்பர்!
எல்லாம் எதற்கு?
இஸ்லாமியர் போடும் ஓட்டு பிச்சைக்காக தான்!
இப்போது, தீபத்துாணில் தீபம் ஏற்றுவதை தடுப்பது கூட, இஸ்லாமியர்கள் மகிழ்ந்து தங்களுக்கு ஓட்டளிப்பர் என்பதால் தான் இத்தனை குட்டிக்கரணங்களும்!
தீபம் ஏற்றுவதை எதிர்ப்பதால், இஸ்லாமியர் மகிழ்வர்; அதையும் மீறி தீபம் ஏற்றினால் இஸ்லாமியர் எரிச்சலடைவர், ஆத்திரம் அடைவர் என்று தி.மு.க., அரசு நினைக்கிறது.
இதன்வாயிலாக, அரசு என்ன சொல்ல வருகிறது?
ஹிந்து மதத்திற்கும், ஹிந்துக்களுக்கும் எதிரானவர்கள் இஸ்லாமியர் என்று தானே சொல்கிறது!
இதில் எங்கே சமூக நல்லிணக்கம் இருக்கிறது?
இரு சமூகங்களுக்கு இடையில் நடுநிலையாக இருந்து பிரச்னையை சுமுகமாக தீர்ப்பதை விடுத்து, ஒரு சமூகத்தின் உரிமைகளை, மரபுகளை மட்டும் தடுத்து நிறுத்துவதால், சமூக நல்லிணக்கம் உருவாகி விடுமா?
தி.மு.க., அரசின் இத்தகைய செயலால் வெறுப்புணர்வும், தேவையில்லாத பதற்றமும்தான் உருவாகும். அதைத்தான் தற்போது, ஸ்டாலின் அரசு உருவாக்கி வைத்துள்ளது.
அனைவரும் மதிக்க வேண்டிய நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும், அதற்கு உள்நோக்கம் கற்பித்து, ஹிந்து சனாதன தர்மத்தின் மீது தங்களுக்கு இருக்கும் வன்மத்தையும், வெறுப்பையும் வெளிப்படுத்தி வருகிறது, தி.மு.க.,
இதற்கான எதிர் விளைவு பெரிதாக இருக்காது என்ற நம்பிக்கை தான், அவர்களை தொடர்ந்து இவ்வாறு பேச வைக்கிறது.
'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பது போல், நீதிமன்ற தீர்ப்பை அலட்சியம் செய்யும் இவர்களின் அதிகார திமிருக்கு, ஹிந்துக்கள் தங்கள் ஓட்டு வாயிலாக, தண்டனை கொடுத்தால் தன்னால் அடங்குவர்!
l
கல்வியில் இருந்து விலகி நில்லுங்கள்! ஏ.ரகுராமன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே சி.ஏ., எனும் பட்டய கணக்காளர் படிப்பில் தேர்ச்சி பெறுகின்றனர். சமூக நீதிக்கு பதிலாக ஜாதி வளர்க்கப்படுகிறது' என்று கூறியுள்ளார், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்- திரு மாவளவன்.
ஒரு துறை சார்ந்த படிப்பில், தேர்வில், இந்த ஜாதியினர் தான் பங்கேற்க வேண்டும் என்று சட்டம் உள்ளதா என்ன, ஜாதி வளர்க்கப்பட?
திறமை இருந்தால் எவர் வேண்டுமானாலும் போட்டியிட்டு வெற்றி பெறலாமே!
ஓர் அரசியல்வாதி எம்.எல்.ஏ., - எம்.பி.,யாக தேர்வாக வேண்டும் என்றால், இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு, அவர்கள் கடுமையாக உழைத்து, மக்களின் நல்லெண்ணத்தை பெற வேண்டும்; அப்போதுதான் மக்களின் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற முடியும்.
அதுபோன்று, ஒரு மாணவன் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால், கடினமாக உழைக்க வேண்டும். மாறாக, 'நான் உழைக்க மாட்டேன்... ஜாதி அடிப்படையில் எனக்கு அதற்கான பலன் கிடைக்க வேண்டும்' என்று சொல்வது எப்படி சமூக நீதியாகும்?
ஒருத்தன் மூச்சுத் திணற ஓடி வெற்றிக் கோட்டை நெருங்கும் போது, மற்றொருவன், 'எனக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளது. அவ்வளது துாரம் ஓட முடியாது. அதனால் பாதி துாரம் மட்டும் ஓடுகிறேன். பரிசை பங்குபோட்டு கொடுங்கள்' என்று சொல்வதற்கு பெயர் தான் சமூக நீதியா?
திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவது, 'சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்' தேர்வு. இதில் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை என்று தெரிந்தும், குறுக்கு வழியில் பலனடைய துடிப்பது ஏன்?
உழைக்க மறுத்த ஒருத்தி, பிள்ளை சோறு கேட்டு, தன் வயிற்றை நிரப்பிக் கொள்வது போல், ஜாதியை காரணம் காட்டி, பலனடைய நினைப்பது எப்படி சரியாகும்?
அரசியல்வாதிகள் கல்வியில் இருந்து விலகி நின்றால் தான், தமிழகம் முன்னேற்றம் அடையும்!
lll

