PUBLISHED ON : டிச 07, 2025 03:32 AM

மு.வெற்றிவேல், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'எந்த அரசியல் கட்சியும், சாலைகளின் நடுவிலும், அருகிலும் தற்காலிக கொடிக் கம்பங்கள் அமைக்கவில்லை என்பதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதை மீறினால், அரசு அதிகாரிகள் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு எதிராகவும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சாலைகளில் கொடி கம்பங்கள் இருக்க கூடாது, அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட, அதை உச்ச நீதிமன்றம் வழிமொழிந்தது.
அந்த உத்தரவிற்கு பின், நாட்டில் எங்காவது, ஏதாவது ஒரு கொடி கம்பம் அகற்றப்பட்டதாக நீதிபதிகள் உறுதியாக கூற முடியுமா?
தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்கவில்லை என்பதை உறுதி செய்ய தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்த மிரட்டலை பத்திரிகையில் படிக்கும் போது, சிரிப்பு தான் வந்தது. காரணம், நீதிபதிகளால் உத்தரவு தான் போட முடியும்; அதை அமல்படுத்த வேண்டியது அரசும், அதிகாரிகளும் தான்.
கையில் கத்தியை கொடுத்து, நீங்களே குத்திக் கொள்ளுங்கள் என்றால், உடனே குத்திக் கொண்டு விடுவரா என்ன!
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனோ, கல்லணையை கட்டிய கரிகால் சோழனோ கூட அவர்கள் பெயர்களை அங்கு பொறித்து கொள்ளவில்லை.
ஆனால், ஒவ்வொரு கொடிக்கம்பத்தின் பீடத்திலும், கட்சி தலைவர் பெயர் முதல், கடைநிலை தொண்டனின் பெயர் வரை நுாற்றுக்கணக்கான பெயர்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்கும்.
கொடி கம்பங்கள் நடுவதே இதுபோன்று சுய விளம்பரத்திற்காக தான்.
அதை அகற்றச் சொன்னால் அகற்றி விடுவரா?
ஒவ்வொரு கொடியையும் சுற்றி, தொப்பி போன்ற மூடியால் மூடி வைத்து, அடுத்த விசாரணையின் போது, அனைத்து கொடி கம்பங்களையும் அகற்றி விட்டோம் என்று அறிக்கை தாக்கல் செய்வர் பாருங்கள்... அவர்களாவது கொடி கம்பங்களை அகற்றுவதாவது?
அரசியல்வாதிகளா, கொக்கா?
காங்கிரஸ் நிலையை தி.மு.க., மறந்து விட வேண்டாம்!
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது, தி.மு.க., அரசு.
தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை பார்க்கும் போது, நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா இல்லை பாகிஸ்தானில் இருக்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது.
அதிலும், தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டபோது, 'திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்ற முயல்கின்றனர்' என்று நீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார், மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி., வெங்கடேசன்.
தமிழ் கடவுள் முருகனின் முதல் படைவீடாம் திருப்பரங்குன்றத்தில் ஆடு, கோழியை வெட்டுவோம் என்று ஒரு பிரிவினர் சொன்னபோது, அது அவர்களின் மத உரிமையாக தெரிந்த வெங்கடேசனுக்கு, ஆண்டாண்டு காலமாக தீபம் ஏற்றப்பட்ட இடத்தில் ஹிந்துக்கள் தீபம் ஏற்றினால், திருப்பரங்குன்றம் கலவர பூமியாகி விடுமாம்!
யார் கலவரம் செய்வர்; எவர் கலவரம் செய்ய வேண்டும் என்று வெங்கடேசன் எதிர் பார்க்கிறார்?
இதேபோன்று தான், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், பொது அமைதியை சீர்குலைக்க, தன் அதிகாரத்தை நீதிபதி சுவாமிநாதன் தவறாக பயன்படுத்துவதாகவும், அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன், வக்கீல் ராஜிவ் காந்தி என்பவரின் இரு சக்கர வாகனத்தின் மீது திருமாவளவன் கார் மோதியதுடன், கேள்வி கேட்ட அவரை, தன் கட்சி அடியாட்களை வைத்து அடித்ததுடன், 'முறைத்தால் அடிப்போம்' என்று பேசிய இந்த உத்தமர், இன்று பொது அமைதி குறித்து பாடம் நடத்துகிறார்.
சிறுபான்மையினர் மீது இவ்வளவு பற்றும் பாசமும் இருக்கும் இவர்கள், ஓட்டு கேட்கப் போகும் போது, வெட்கமே இல்லாமல் எதற்கு ஹிந்துக்களிடம் ஓட்டு பிச்சை கேட்டு வருகின்றனர்?
வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது தானே... 'நாங்கள் எல்லாம் சிறுபான்மையினர் காவலர்கள்; எங்களுக்கு எந்த ஹிந்துவும் ஓட்டுப்போட வேண்டாம்' என்று!
தேர்தல் வந்து விட்டால், நெற்றியில் பட்டைப் போடுவது, தேர்தல் முடிந்ததும், கோவில் கோபுரங்களில் பொம்மைகள் உள்ளன என்று கேலி பேசுவது!
வெட்கமாக இல்லையா... இதுபோன்று கீழ்த்தரமான அரசியல் செய்ய!
தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், நீதிமன்றத்தை அவமரியாதை செய்த இவர்கள் தான், கடந்த ஆண்டு பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரின் போது, சட்டப் புத்தகத்தை துாக்கியபடி, அரசியல் சாசனத்தை காப்பாற்ற போராடுவதாக கூறி, கூச்சல் போட்ட அரிச்சந்திரர்கள்!
இதில், ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய அரசு, சிறுபான்மை ஓட்டுக்காக மிகவும் கேவலமான அரசியல் செய்து வருகிறது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரஸ், இன்று ஒவ்வொரு மாநிலத்திலும் துடைத்தெறியப்பட்டு வருகிறது என்றால், அதற்கு, அக்கட்சியின் போலி மதச்சார்பின்மையும், ஹிந்து விரோத அரசியலும் தான் காரணம் என்பதை ஆட்சியாளர்கள் மறந்து விட வேண்டாம்!
அவ்வளவு பெரிய தேசிய கட்சியே இன்று கோவணத் துண்டு போல் மூன்று மாநிலங்களில் சுருங்கிப் போய் கிடக்கிறது. ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் போது, தி.மு.க.,வும் அதற்கு ஜால்ரா அடிக்கும் கட்சிகளும் எம்மாத்திரம்?

