/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
திராவிட கட்சிகளின் வேஷம் கலைந்தது!
/
திராவிட கட்சிகளின் வேஷம் கலைந்தது!
PUBLISHED ON : டிச 06, 2025 03:12 AM

ஆர்.கிருஷ்ணமூர்த்தி
ராமசுப்ரமணியன், ஆசிரியர், (பணி ஓய்வு) புதுச்சேரியில் இருந்து அனுப்பிய,
'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து, அதற்கான
நுழைவுத் தேர்வு எழுதியவர்களில், 85,000 பேர் தமிழ் பாடத்தில்
தோல்வியடைந்துள்ளனர்.
அதுவும், பிஹெச்.டி., உள்ளிட்ட உயர் கல்வி
பயின்றோர், 50-க்கு, 20 மதிப்பெண் கூட பெறவில்லை என்பதை பார்க்கும்போது,
திராவிட கழகங்கள் இதுவரை போட்டு வந்த தமிழ் மொழிப் பற்று எனும் வேஷம்
கலைந்து விட்டது.
இந்த, 85,000 பேரின் நிலைதான் இப்படியென்றால்,
தற்போது, தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும்
ஆசிரியர்களின் நிலையோ இதை விட பரிதாபம்.
போட்டிகள் நிறைந்த இன்றைய
காலகட்டத்தில், மாணாக்கர்களை நுழைவுத் தேர்விற்கு தயார் செய்ய வேண்டிய
ஆசிரியர்கள், நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு என்றாலே அலறியடித்து
ஓடுகின்றனர்.
'ஆசிரியர் தகுதித் தேர்வின் வாயிலாக பணி நியமனம்
பெறாத ஆசிரியர்கள், அப் பணியில் தொடர வேண்டுமெனில், இரண்டு ஆண்டுகளுக்குள்
'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என்று கடந்த செப்டம் பரில் உச்ச
நீதிமன்றம் கெடு விதித்தது .
இதனால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு
மூப்பு அடிப்படையிலும், அரசியல்வாதிகளின், 'ஆசி'யிலும் பணி நியமனம் பெற்ற
ஆசிரியர்கள் பலர், பீதியில் உறைந்துள்ளனர்.
ஏனென்றால், இவர்களில்
பலர் தமிழை ஒரு பாடமாகப் படிக்காமல், தனியார் பள்ளி - கல்லுாரிகளில்
படித்து பட்டம் பெற்றவர்கள். தமிழ் மொழியில் போதிய அறிவு இல்லாதவர்கள்.
இதனால், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர்,
சமீபத்தில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், '2011 நவ.,க்கு முன்
பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வில் இருந்து விலக்களிக்க
வலியுறுத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை மத்திய அரசு
தாக்கல் செய்ய வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார்.
இத்தகைய
ஆசிரியர்களை பாதுகாக்க, 'தேசிய ஆசிரியர் கல்வி குழும சட்டத்தில் திருத்தம்
செய்ய வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களே தகுதி தேர்வெழுத
அச்சம் கொண்டால், இவர்களிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்?
இதன்வாயிலாக, 'தமிழ் எங்கள் பேச்சு, மூச்சு' என்று இத்தனை
காலமும் தமிழர்களை ஏமாற்றி பிழைத்த இரு திராவிட கட்சிகளின் வேஷமும் கலைந்து
விட்டது!
வாக்குறுதி என்னாச்சு?
சி.ரா.குப்புசாமி, உடுமலைப்பேட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக ஆசிரியர் -மற்றும் அரசு பணியாளர்கள் அமைப்பான, 'ஜாக்டோ -- ஜியோ' தன், 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி முதல் வாரத்தில், காலவரையறை அற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு ள்ளது.
ஏற்கனவே, சமீபத்தில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தது, ஜாக்டோ - ஜியோ; ஆனால், அதை அரசு கண்டு கொள்ளவில்லை.
ஆளும் தி.மு.க., அரசும் சரி, இதற்கு முன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அ.தி.மு.க.,வும் சரி, இப்போராட்டங்களை ஒடுக்கி அடக்குவதற்கான வழிமுறைகளை தான் தேடுகின்றனவே தவிர, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை செவி மடுப் பதாக தெரியவில்லை.
தற்போது ஜாக்டோ -- ஜியோ அமைப்பு முன்வைத்துள்ள அத்தனை கோரிக்கைகளும், கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் தான். அப்படி இருந்தும், அரசு தான் அளித்த வாக்குறுதிக ளை நிறைவேற்ற மறுக்கிறது.
செய்ய முடியாது எனும்போது எதற்கு வாக்குறுதி கொடுக்க வேண்டும்?
கண் துடைப்பு நாடகம் ஏன்?
எல்.முருகராஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை, விருகம்பாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர், சமூக வலைதளம் வாயிலாக கனடா வாழ் தமிழக இளைஞரை காதலித்துள்ளார். அவர் சென்னை வரும் சமயங்களில், இருவரும் காதல் பயிரை பேணி வளர்த்ததில், அப்பெண் கர்ப்பமடைந்துள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொன்ன போது தான், அவர் ஏற்கனவே திருமணமாகி, மனைவி, பிள்ளைகளுடன் இருப்பது அப் பெண்ணிற்கு தெரிந்துள்ளது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் பெனாசிர் பேகத்திடம் புகார் அளித்துள்ளார். அவரும், 'வெளிநாட்டில் வசிப்பதால், அவரை கைது செய்ய கொஞ்சம் செலவாகும்' என்று கூறி, அப்பெண்ணிடம் இருந்து பல லட்சம் ரூபாயை ஆட்டை போட்டுள்ளார்.
அதேநேரம், சம்பந்தப்பட்ட வாலிபரை தொடர்பு கொண்டு, 'உன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் என்னை கொஞ்சம், 'கவனிக்கணும்' என்று மிரட்டி, அவரிடம் இருந்தும் பல லட்சம் ரூபாயை, 'ஆட்டை' போட்டு, அவரை கனடாவிற்கு தப்பவிட்டுள்ளார்.
இதை அறிந்த பெண், மனம் நொந்து, உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபுவிடம் முறையிட, அவரும், 'கவலைப்படாதீர்கள்; நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று ஆறுதல் கூறி, விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அப்பெண்ணை வரவழைத்து, 'கடலை' போட்டு வந்தவர், கடைசியில், அப்பெண்ணையே, 'ஆட்டை'யப் போட ஆசைப்பட்ட போது, மிரண்டு போன பெண், போலீஸ் கமிஷனரிடம் போய் நின்றுள்ளார்.
அவர் விசாரித்து, பெனாசிர் பேகத்தையும், உதவி கமிஷனரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளார்.
இதனால் அவர்கள் என்ன பெரிதாக தண்டிக்கப்பட்டு விடுவர்?
கொஞ்ச காலத்திற்கு அதிகாரம் செய்து, ஆட்டம் போட முடியாது என்பதைத் தவிர, அதே சம்பளம், சலுகையுடன்தான் இருக்கப் போகின்றனர். பின், விசாரணையில் எல்லாவற்றையும் சரிக்கட்டி பழையபடி அதிகாரத்திற்கு வந்து, தங்கள் வேட்டையை துவங்குவர்!
ஏற்கனவே, விருகம்பாக்கம் சாலையோர வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கினார் என்று, இதே பெனாசிர் பேகம் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர் தான். இனியும் அதேதான் நடக்கப்போகிறது.
இங்கே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு காவல் துறை என்ன நியாயம் செய்துள்ளது?
அப்பெண்ணிடம் இருந்து பெனாசிர் வாங்கிய பணத்தை மீட்டுக் கொடுத்துள்ளதா இல்லை அப்பெண்ணை நம்ப வைத்து மோசம் செய்து, கம்பி நீட்டிய வாலிபரை தான் கைது செய்துள்ளதா?
அதிகார துஷ்பிரயோகம் செய்த உதவி கமிஷனரையும், லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பெனாசிர் பேகத்தையும் டிஸ்மிஸ் செய்யாமல், காத்திருப்பு பட்டியல் என்ற கண் துடைப்பு நாடகம் ஏன்?

