/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
இலவசத்தை காட்டி ஏமாற்றும் விஜய்!
/
இலவசத்தை காட்டி ஏமாற்றும் விஜய்!
PUBLISHED ON : டிச 05, 2025 03:16 AM

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்:
சமீபத்தில், காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்திய தமிழக வெற்றிக் கழக
தலைவரும், நடிகருமான விஜய், இருபெரும் திராவிடக் கட்சிகளைத் துாக்கிச்
சாப்பிடும் அளவிற்கு இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் சிறு, 'சாம்பிள்'தானாம்.
அதுவும்,'கார் லட்சியம்; பைக் நிச்சயம்' என்று மறைந்த தி.மு.க., தலைவர்
அண்ணாதுரை பாணியில் வசனம் பேசியுள்ளார்.
கடந்த, 1967 சட்டசபை
தேர்தலில், ஆட்சியைப் பிடிப்பதற்காக, 'ரூபாய்க்கு மூன்று படி அரிசி
வழங்கப்படும்' என்று வாக்குறுதி கொடுத்து, தமிழகம் முழுதும் பிரசாரம்
மேற்கொண்டார், அண்ணாதுரை.
நாடு சுதந்திரம் அடைந்து, 20 ஆண்டுகளே
ஆகியிருந்ததால், அப்போதிருந்த கடும் பொருளாதார நெருக்கடியில், 'இது எப்படி
சாத்தியம்?' என்று செய்தியாளர்களும், காங்கிரசும் கேள்வி எழுப்ப, 'மூன்று
படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்' என்று வசனம் பேசி ஓட்டுகளைக் கவர்ந்தார்
அண்ணாதுரை. 'லட்சியம், நிச்சயம்' என்றதெல்லாம் வெறும் எதுகை - மோனை
லயத்திற்காக தான்; உண்மையான அக்கறையில் அல்ல என்பதை புரிந்து கொள்ள,
பாமரத் தமிழனுக்கு பல நாட்கள் ஆயிற்று.
ஆட்சிக்கு வந்ததும்
நிதிப்பற்றாக் குறையை காரணம் காட்டி, அந்த ஒருபடி அரிசியைக் கூட கொடுக்க
முடியாமல், தான் வழங்கிய வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டார், அண்ணாதுரை.
தற்போது, முதல்வர் கனவில் மிதக்கும் விஜய், அண்ணாதுரை பாணியில்,
தமிழகத்தில் உள்ள ஒன்பது கோடி மக்களுக்கும் வசிக்க வீடுகள், இருசக்கர
வாகனங்கள் தருவாராம்!
கடந்த, 60 ஆண்டுகளாக இரு திராவிடக்
கட்சிகளும் இலவசங்களுக்கான வாக்குறுதிகளை போட்டிப் போட்டுக் கொடுத்து,
மக்களை ஏமாற்றி ஓட்டுகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது போல், தற்போது,
த.வெ.க.,வும் இலவச ஆசை காட்டி ஓட்டுகளை பெற்று ஆட்சியைக் கைப்பற்ற கனவு
காண்கிறது.
மதுக்கடைகளை மூடுவோம், போதைப்பொருள் நடமாட்டத்தை
தடுத்து நிறுத்துவோம், தரமான சாலை, குடிநீர், மருத்துவம் போன்ற மக்களின்
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, சட்டம் - ஒழுங்கை சீர்படுத்தி ரவுடிகளின்
அட்டகாசத்தை அடக்கி, தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக மாற்றுவோம் என்று
விஜய் சொல்லியிருந்தால், மக்களிடம் ஒரு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கும்.
ஆனால், மற்ற திராவிடக் கட்சிகளைப் போல், விஜயும் இலவச ஆசை காட்டி
ஓட்டுகளைப் பெற நினைப்பது, மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு
ஏமாற்றத்தைதான் அவர் பரிசாகத் தருவார் என்று தெரிந்து விட்டது!
சொந்த நிதியில் பூங்கா அமைக்கட்டுமே!
எஸ்.கந்தன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், சென்னை கதீட்ரல் சாலை பகுதியில், 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 'கலைஞர் பூங்கா' திட்டப்பணிகள் நடந்த நிலையில், 60 கோடி ரூபாய் செலவு செய்ததாக, தோட்டக்கலைத் துறை கணக்கு காட்டியுள்ளது.
வள்ளுவனும், கம்பனும், கபிலனும், அவ்வையும், சங்ககால புலவர்களும் தமிழுக்கு செய்யாதவைகளை, தனியொரு மனிதனாக நின்று கருணாநிதி செய்து காட்டியுள்ளார் பாருங்கள்... அதனால், அவருடைய பெயரில் அமைந்துள்ள பூங்காவுக்கு, 60 கோடி அல்ல, 6,000 கோடி ரூபாய் கூட செலவிடலாம். ஏனெனில் ஆட்சியும், அதிகாரமும் அவர்கள் கையில் அல்லவா உள்ளது.
ஆனால், ஆளும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் ஒரு விஷயத்தை மறந்து விடக் கூடாது...
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள, தலைமைச் செயலகத்திற்கு இடம் போதவில்லை என்று, ஓமந்துார் ராமசாமி ரெட்டியார் பெயரில் அமைந்திருந்த அரசினர் தோட்டத்தை தகர்த்து, துார்த்து சட்டசபை கட்டடம் கட்டினார், கருணாநிதி.
அந்த புதிய தலைமைச் செயலக கட்டடத்தில், பத்து சட்டசபை கூட்டங்கள் கூட நடந்திருக்காது; அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, புதிய சட்டசபை கட்டடத்திற்கு மூடுவிழா நடத்தி, அதை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி விட்டார்.
அதுபோல் அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு, கலைஞர் பூங்காவுக்கு மூடு விழா நடத்தலாம்!
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய பண பலனை கொடுக்கவும், பல்வேறு அரசு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி, அவர்களுக்கு மாத ஊதியம் கொடுக்க நிதி இல்லை என்று கைவிரிக்கும் தி.மு.க., அரசு, கருணாநிதியின் புகழ்பாட மக்கள் வரிப்பணத்தை எடுத்து விரயம் செய்கிறது.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதற்காக, 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்ற ரீதியில், தி.மு.க., அரசு செயல்பட்டால், அதற்குரிய பலனையும் அனுபவித்தே ஆக வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் தன் தந்தை கருணாநிதி நினைவாக, 60 கோடி அல்ல, 60,000 கோடி ரூபாயில் கூட பூங்கா அமைக்கட்டும். ஆனால், அதை அரசு நிலத்தில், அரசு நிதியிலிருந்து செலவு செய்யாமல், தி.மு.க., குவித்து வைத்துள்ள சொந்த நிதியில் இருந்து செலவு செய்யட்டும்!
மாற்றி யோசிக்கலாமே!
ஆர்.கிருஷ்ணசுவாமி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ' நீர் இன்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். வானம் பொய்த்தால் விவசாயமும் பொய்த்து போகும்; பஞ்சமும், பசியும் உயிரினங்களை அச்சுறுத்தும். அதனால் தான், நீரின் முக்கியத் துவத்தை அறிந்த நம் முன்னோர், நீர்நிலைகளை பாதுகாத்தும், நதிகளை போற்றியும் வணங்கினர்.
ஆனால், இன்றோ நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகளையும், கட்டடங்களையும் கட்டுகின்றனர்.
இப்படி ஒருபுறம் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுகிறது என்றால், மற்றொருபுறம் கழிவுநீர், சாயம் மற்றும் ரசாயன கழிவுகளை ஆற்றில் கலக்கவிட்டு, நீரை அசுத்தப்படுத்துகின்றனர். தாங்கள் செய்வது தீங்கு என்று தெரிந்தும், தங்கள் வசதிக்காக, சுயலாபத்துக்காக இதைச் செய்கின்றனர்.
எனவே, மழைநீர் சேமிப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பள்ளிப் பருவத்தில் இருந்தே துவக்க வேண்டும்.
அதற்கு, ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்பறைகளுக்கு காவிரி, கங்கை, யமுனை, சரஸ்வதி, பிரம்மபுத்ரா, வைகை, தாமிரபரணி, தபதி, சிந்து, நர்மதை, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா என்று நதிகளின் பெயர்களை சூட்டி, பள்ளிப் பாட நுால்களின் முதல் பக்கத்தில், அந்நதிகளின் வரலாற்று தொன்மையையும், அதனால் வளம் பெறும் ஊர்களையும் குறிப்பிட்டு, நதிகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விழிப் புணர்வு வாசகங்களை அச்சிடலாம்.
இதன் வாயிலாக, மாணவர்கள் நம் நாட்டில் உள்ள நதிகளை தெரிந்து கொள்வதுடன், நீரின் அருமையையும் எளிதில் புரிந்து, நீர்நிலைகளை பாதுகாப்பதன் அவசியத்தை அறிந்து கொள்வர்!
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை சிந்திக்குமா?

