/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
தி.மு.க.,வின் எண்ணம் நிறைவேறாது!
/
தி.மு.க.,வின் எண்ணம் நிறைவேறாது!
PUBLISHED ON : ஜன 15, 2026 02:27 AM

ஆர்.முனுசாமி, புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், 'இம்முறை அதிக தொகுதிகளை கேட்டு பெற வேண்டும்' என வலியுறுத்தி வரும் நிலையில், மற்றொருபுறம், 'ஆட்சியில் பங்கு வேண்டும்' எனவும் குரல் எழுப்பி வருகிறது.
இதை, தி.மு.க., ரசிக்கவில்லை. அதனால், ஆட்சியில் பங்கு என்ற கூட்டணி கட்சிகளின் கனவை, ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய நினைக்கிறது, தி.மு.க., தலைமை.
அதன் வெளிப்பாடு தான், அமைச்சர் பெரியசாமியின் பேச்சு!
'ஆட்சியில் பங்கு என காங்கிரசார் பேசி வருகின்றனர்; கேட்பது அவர்களின் உரிமை. பங்கு கொடுப்பது, தி.மு.க.,வின் கொள்கை கிடையாது. தனிப்பட்ட கட்சியின் ஆட்சி தான் நடக்கும்; கூட்டணி ஆட்சி இருக்காது. இதில், முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்' என்று கூறியுள்ளார், பெரியசாமி.
கூடவே, 'பொங்கல் பரிசு, 3,000 ரூபாய் கொடுத்துள்ளோம்; அடுத்து, பெண்களை கவர பொங்கலன்று இனிப்பான செய்தி அளிக்கப் போகிறோம்' என்றெல்லாம் அளந்து விட்டுள்ளார்.
இப்படி, 'வாயால் வடை சுட்டுக்கொண்டே, 234 தொகுதிகளையும் கைப்பற்றி விடலாம் என பகல் கனவு காண்கிறது, தி.மு.க., அரசு.
இன்றைய கள நிலவரப்படி, ஓட்டுக்கு, 5,000 வழங்கினால் கூட, தி.மு.க.,விற்கு மக்கள் ஓட்டளிக்க மாட்டர்.
கழகத்தினுடைய விசுவாசிகளின் ஓட்டுகளே, இம்முறை தி.மு.க., வேட்பாளர்களுக்கு விழுமா என்பது சந்தேகம்!
இதில், நாளைக்கே ஆட்சி அமைப்பது போல், 'ஆட்சியில் பங்கு இல்லை, நுங்கு இல்லை' என்று அறிவிப்பு வேறு!
ll
பாவத்தை போக்க பாதயாத்திரை செல்லுங்கள்! எஸ்.ரேவதி பாலு, சென்னையில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
திருமாவளவன், 'மது ஒழிப்பு மாநாடு' எனும் பெயரில், கடந்த ஆண்டு ஒரு
நாடகத்தை அரங்கேற்றினார்.
இம்மாநாட்டில் பங்கேற்ற ஆளுங்கட்சி
பிரதிநிதி ஒருவர், 'பெண்கள் மட்டும் விழிப்புணர்வோடு இருந்து, ஆண்களை
மதுக்கடை பக்கம் போகாமல் பார்த்துக் கொண்டால், இதுபோன்ற மாநாடுகளுக்கு
அவசியமே இல்லை. ஆண்கள் மதுக்கடை பக்கம் வராவிட்டால், அரசால் எப்படி
தொடர்ந்து மதுக்கடைகளை நடத்த முடியும்? ஆகவே, மதுவை ஒழிப்பது என்பது
பெண்கள் கையில் தான் இருக்கிறது' என்று பேசினார்.
தடுக்கி
விழுந்தால் டாஸ்மாக் கடை மீதுதான் விழ வேண்டும். அந்த அளவு எல்லா
பகுதிகளிலும் கடைகளை திறந்து வைத்துக் கொண்டு, பெண்கள் தான் ஆண்களை மது
அருந்த விடாமல் தடுக்க வேண்டும் என்று கூறுவது எத்தகைய பித்தலாட்டம்?
டாஸ்மாக் மதுவிற்கு கணவனை காவு கொடுத்த பெண்களும், போதை கணவனால் நிம்மதி
இல்லாமல் தவிக்கும் இல்லத்தரசிகளும், குடிக்கு அடிமையாகி குப்பையில்
வீழ்ந்து கிடப்பவரை தந்தையாக பெற்ற குழந்தைகளும், இந்த அரசுக்கு சாபமிடுவதை
அறியாமல், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோவின், போதை
எதிரான நடை பயணத்தை துவக்கி வைத்துள்ளார், தி.மு.க., முதல்வர்.
மக்களை முட்டாள்களாக நினைத்து, ஓட்டுக்காக இதுபோன்ற கேவலமான நாடகத்தை
அரங்கேற்றுவதற்கு பதில், பாவத்தை போக்க பாதயாத்திரை செல்லுங்கள்!
lll
கட்டண கொள்ளைக்கு முடிவு எப்போது? -ரெ.ஆத்மநாதன், செங்கல்பட்டு
மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பணி நிமித்தமாக
சென்னையில் தங்கியுள்ள பல லட்சம் பேர், தீபாவளி, பொங்கல் பண்டிகையை கொண்டாட
தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, பொது போக்குவரத்தையே நம்பியுள்ளனர்.
ஆனால், பண்டிகைக் காலம் வந்து விட்டாலே, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்து விடுகிறது.
'நான் அடிப்பது போல் அடிக்கிறேன்; நீ அழுவது போல் அழு' என்பது போல்,
ஒவ்வொரு ஆண்டும், இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல், அரசு அறிக்கை
வெளியிடுகிறது.
அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், கட்டண கொள்ளை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்குமா?
இதற்கு விதி விலக்கு ரயில்வே மட்டுமே!
அதில் மட்டுமே ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
அதிலும், 'ஆன்லைன்' முன்பதிவுகள் சில நிமிடங்களிலேயே முடிந்து விடுவதால்,
வேறு வழியின்றி, இருமடங்கு அதிக கட்டணம் செலுத்தி பேருந்துகளில் பயணிக்க
வேண்டியுள்ளது.
எனவே, மத்திய - மாநில அரசுகள், ரயில்வே துறையில்
உள்ளது போல், ஆம்னி பேருந்துகளுக்கும், விமானங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட
கட்டணங்களை உறுதி செய்ய வேண்டும்!
lll
சாது மிரண்டால்
காடு கொள்ளாது! ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: திருப்பூர் மாவட்டம், ஈட்டிவீரம்பாளையம் குமரன் குன்று கோவிலை,
வருவாய் துறை அகற்ற முயற்சித்த போது, ஹிந்து முன்னணியினருக்கும்,
போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
கோவில்
இடிக்கப்படுவதை பார்த்து பெண்கள் கதறி அழுதுள்ளனர். இப்போராட்டத்தில்
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் காயமடைந்து,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பக்தர்கள், நிர்வாகிகள் உட்பட, 200
பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பு கொடுத்த கடுப்பில், திருப்பூரிலுள்ள கோவிலை இடித்துள்ளது, தி.மு.க., அரசு.
உலகில் மத சகிப்புத்தன்மையுடன் ஓர் பிரிவினர் இருக்கின்றனர் என்றால், அவர்கள் ஹிந்துக்கள் தான்!
கோவிலுக்கு செல்லும் போது, எந்தளவு பக்தியுடன் செல்கின்றனரோ, அதேபோன்று,
நாகூர் தர்காவிற்கு சென்று வழிபடுவர்; கிறிஸ்துவர்களின் வேளாங்கண்ணி
கோவிலுக்கும் செல்வர்.
எந்த மதமாக இருந்தாலும், அக்கடவுளை அருளின்
வடிவமாகத் தான் பார்க்கின்றனரே தவிர, அக்கடவுள்களையோ, அம்மதத்தின்
கோட்பாடுகளையோ அவர்கள் கேலி செய்வதில்லை.
'சங்கு சுட்டாலும்
வெண்மை தரும்' என்பது போல், நாத்திகவாதிகளும், பிற மதத்தினரும் அவதுாறு
பேசினாலும், தங்கள் சனாதன தர்மம் கடவுள் குறித்து போதித்த நெறிகளில்
இருந்து அவர்கள் விலகுவதில்லை.
அவர்களையே தற்போது பொறுமையிழக்க வைத்துக் கொண்டிருக்கிறது, தி.மு.க., அரசு.
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் விளக்கேற்ற, சிலரை மட்டும்
அனுமதித்து, மற்றவர்களை மலையடிவாரத்தில் நிற்க வைத்து வழிபட செய்வது
ஒன்றும் அரசால் சமாளிக்க முடியாத செயல் அல்ல; ஆனாலும், இரு
சமூகங்களுக்கிடையே கலவரம் ஏற்படும்; சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என்று
கூறி, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்து மேல்முறையீடு செய்துள்ளது,
தி.மு.க., அரசு.
இது, ஹிந்துக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை ஆளுவோர் மனதில் கொள்ள வேண்டும்!
lll
l

