அரசு அலுவலகங்களுக்குள் கட்சியினரை சேர்க்காதீர்கள்!
அரசு அலுவலகங்களுக்குள் கட்சியினரை சேர்க்காதீர்கள்!
PUBLISHED ON : மே 31, 2026 12:06 AM

அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமூக நீதி அடிப்படையில் அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்யும் வகையில், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில், 34 அமைச்சர்களை நியமனம் செய்துள்ள முதல்வர் விஜய், நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவரே!
அதிலும், பட்டியலினத்தவர் எட்டு பேருக்கு அமைச்சரவையில் இடமளித்துள்ளது, இதுவரை திராவிட கட்சிகள் செய்யாதது!
இருப்பினும், தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் அமைச்சர்கள், முதல்வர் விஜயின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, ஊழலற்ற நிர்வாகத்தை தருவரா என்ற கேள்வி எழுகிறது.
ஏனெனில், அதிகாரத்தில் இல்லாத போதே, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கார் முன், ஸ்கூட்டரை நிறுத்தினார் என்பதற்காக, ராஜிவ் காந்தி என்ற வழக்கறிஞரை நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சென்று கடுமையாக தாக்கினர், வி.சி.க.,வினர்; அக்கட்சி எம்.எல்.ஏ., பாலாஜி, ெஹலிகாப்டர் நிறுவனம் ஒன்றிடம் கமிஷன் கேட்டு தகராறு செய்த கதையும் உண்டு.
இப்படி அதிகாரத்தில் இல்லாத போதே ரவுடியிசம் செய்தவர்கள், இப்போது அதிகாரம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், எந்த அளவு நியாயமாக, நேர்மையாக நடந்து கொள்வர் என்பது கேள்விக்குறி தான்!
கடந்த, 1967ல் முதன் முதலில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது, அக்கட்சியின் முக்கிய கூட்டணி கட்சி தலைவரான ராஜாஜி, 'கட்சியினரை அரசு அலுவலகங்களுக்குள் அனுமதிக்காதீர்கள்' என்று, முதல்வர் அண்ணாதுரைக்கு அறிவுரை வழங்கினார்.
அவர் கேட்கவில்லை. விளைவு... கட்சியினர் சொல் கேட்டு ஆடும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டனர்; ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க.,வினரும், அவர்களது குடும்பத்தினரும் தமிழகத்தை சுரண்டி கொழுத்தனர்.
எனவே, ஊழலுக்கு எதிராக சாட்டையை சுழற்றி வரும் முதல்வர் விஜய், 34 அமைச்சர்களுக்கான உதவியாளர்கள் நியமனத்தில் ஜாதிய ஆதிக்கம் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது போல், அனைத்து துறைகளிலும் நேர்மையான அதிகாரிகளை உதவியாளர்களாக நியமனம் செய்து, ஊழலற்ற ஆட்சியை தர வேண்டும்.
சமரசம் செய்து கொள்ளாத நேர்மையாளர்களால் மட்டும் தான், ஊழலை ஒழிக்க முடியும்!
திருச்செந்துாருக்கு கூடுதல் ரயில் இயக்கப்படுமா?
முனைவர் செ.அ.ராகுல் கோல்டன், திருச்செந்துாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக திகழும் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் போன்ற திருவிழா நாட்களில், லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்துாரை நோக்கி பயணம் செய்கின்றனர்.
ஆனால், உலகப் புகழ்பெற்ற இந்த ஆன்மிக நகரத்திற்கு, போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை என்பது தான் வேதனை!
குறிப்பாக, அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால், பொதுமக்களும், பக்தர்களும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சென்னை, கோயம்புத்துார், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து, திருச்செந்துாருக்கு போதிய அளவில் நேரடி பேருந்துகள் இல்லை. இதனால், மக்கள் பல இடங்களில் பேருந்து மாறிச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், இரவு நேரங்களில் பெண்கள், முதியோர், குழந்தைகள் நீண்ட நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருக்கின்றனர்.
சென்னையிலிருந்து திருச்செந்துாருக்கு மிகக் குறைந்த ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தென் மாவட்ட மக்களின் தேவையை கருத்தில் கொண்டு சென்னை - திருச்செந்துார்; கோயம்புத்துார் - திருச்செந்துார்; மதுரை - திருச்செந்துார் போன்ற வழித்தடங்களில் கூடுதல் விரைவு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். திருவிழா நாட்களில் சிறப்பு ரயில்களும், வழக்கமான ரயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட வேண்டும்.
திருச்செந்துார் போன்ற ஆன்மிக நகரத்திற்கு, போக்குவரத்து வசதிகள் உருவாக்கப்படுவது என்பது, பக்தர்களின் தேவைக்கானது மட்டுமல்ல; அதனால், தமிழக சுற்றுலா வளர்ச்சி அடையும்; தென் மாவட்டங்களின் பொருளாதாரமும் முன்னேறும்!
எனவே, தமிழக அரசு உடனடியாக திருச்செந்துாருக்கு கூடுதல் அரசு பேருந்துகள், புதிய விரைவு ரயில்கள் மற்றும் மேம்பட்ட போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி, பக்தர்களின் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்!
செய்கூலி, சேதாரமில்லா, 'பார்முலா'வெற்றி பெறுமா?
ஜெ.ஜி.சுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க.,வின் நான்கு அதிருப்தி எம்.எல்.ஏ.,-க் கள், சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர். இதன் வாயிலாக இடைத்தேர்தல் வருவது உறுதியாகிவிட்டது.
ஆனால், எந்தவித சிரமமும் இன்றி இந்த கட்சி தாவல்கள் நடப்பதைப் பார்க்கும்போது, 'செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை' என்று வெளியாகும் நகைக்கடை விளம்பரம் தான் நினைவுக்கு வருகிறது!
கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம், சட்டப் போராட்டம், மக்கள் மத்தியில் அவப்பெயர் என பெரும் இழப்புகளை, கட்சி தாவும் அரசியல்வாதிகள் சந்தித்து வந்தனர்.
தற்போது, அ.தி.மு.க., வில் இருந்து த.வெ.க.,விற்கு தாவியுள்ள உறுப்பினர்களுக்கு அந்த தலைவலிகள் இல்லை.
தகுதி நீக்கம் செய்யப்படும் வரை காத்திருக்காமல், தாங்களாகவே ராஜினாமா செய்ததன் வாயிலாக சட்டச் சிக்கல்களை தவிர்த்துள்ளனர், இந்த எம்.எல்.ஏ.,க்கள்!
தங்களை துரோகிகளாக காட்டிக்கொள்ளாமல், வளர்ந்து வரும் ஒரு சக்தியை நோக்கி செல்லும் சித்தாந்தவாதிகளாகக் காட்டி, தங்களின் பச்சோந்தி முகத்தை, எந்தவொரு சேதாரமும் இல்லாமல் பாதுகாத்துள்ளனர்.
தலைமைச் செயலகத்திற்கு சென்று, ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு, அப்படியே த.வெ.க., தலைமையை சந்திக்கச் செல்வது என்பது, பழைய தங்கச் சங்கிலியைக் கொடுத்துவிட்டு, புதிய வைர நகையை வாங்குவது போல், எந்தவித உழைப்பும் இல்லாமல் சுலபமாக நடந்து முடிந்துள்ளது.
இந்த, 'மெகா தள்ளுபடி ஆபர்' அ.தி.மு.க.,விற்கு பெரும் பலவீனத்தை ஏற்படுத்தி வருகிறது; த.வெ.க.,விற்கோ எந்த சிரமமும் இன்றி சட்டசபையில் தன் பலத்தை நிலைநிறுத்த, சுலபமான வாய்ப்பாக அமைகிறது.
அரசியல்வாதிகள் இந்த சேதாரமில்லா, 'பார்முலா'வை கொண்டாடினாலும், நுகர்வோரான வாக்காளர்களின் முடிவு என்னவாக இருக்கும்?
இடைத்தேர்தலின் போது, இவர்களின் இந்த செய்கூலி, சேதாரமில்லா பார்முலாவை மக்கள் ஏற்பரா அல்லது இந்த திடீர் மாற்றத்திற்கு பெரும் விலை கேட்கப் போகின்றனரா என்பதை பொறுத்திருந்து தான் பா ர்க்க வேண்டும்!
