/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
மக்களை காயப்படுத்தி ரத்தம் ருசிக்கணுமா?
/
மக்களை காயப்படுத்தி ரத்தம் ருசிக்கணுமா?
PUBLISHED ON : டிச 29, 2025 01:31 AM

அ.அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இஸ்லாமியர்களுக்கு, முஸ்லிம் லீக் கட்சி இருந்தால், அது ஜனநாயகம்; ஹிந்துக்களுக்கு ஓர் அமைப்பு இருந்தால், அது மதவாதமா? இந்த எண்ணம் கொடுத்த எழுச்சியால் தான், இன்று, மூன்றாவது முறையாக மத்தியில் பா.ஜ., ஆட்சியில் அமர்ந்துள்ளது. மாநிலங்கள் தோறும் அக்கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
அக்கட்சியின் பாதுகாப்பில், ஹிந்துக்கள் தாங்கள் இழந்த உரிமைகளை, உடைமைகளை மீட்டெடுத்து வருகின்றனர். அவ்வகையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் முயற்சியும் நடந்தது. ஆனால், தமிழக அரசு அதை தடுத்து விட்டது. இதனால், விரக்தி அடைந்த ஓர் இளைஞர், தன் உயிரையே பலி கொடுத்துள்ளார்.
இது தவறு என்றாலும், உயிரை இழந்தவர், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி போன்ற அமைப்புகளை சேர்ந்தவர் அல்ல... தி.மு.க., அனுதாபி; அவரது குடும்பமே உடன்பிறப்பு வகையறாவினர் தான்.
அப்படியும், அந்த இளைஞர், தான் இறக்கும் முன், 'அரசியலுக்காக தீபம் ஏற்றுவதை இந்த அரசு தடுக்கிறது' என்று கூறி, 'ஓர் ஹிந்துவாக அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியவில்லை' என்று கூறியுள்ளார்.
அதுபோல், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாததை கண்டித்து, ராமேஸ்வரம் தி.மு.க., கவுன்சிலரும் நகர தி.மு.க., பொருளாளருமான சங்கர், அக்கட்சியை விட்டு விலகி, பா.ஜ.,வில் இணைந்துள்ளார்.
இது துவக்கம் தான்... ஹிந்துக்கள் விழிப்படைய துவங்கி விட்டனர். எனவே, பெரும்பான்மை மக்களை காயப்படுத்தி, அவர்களின் ரத்தத்தை ருசித்துக் கொண்டே, ஆட்சி அதிகாரத்தை பிடித்து விடுவோம் என்று தி.மு.க., நினைத்தால், அது, இனி நடக்காது!
--------
குறித்த நேரத்தில் ரத்த பரிசோதகர் வருவாரா?
நாகை ஆசைத்தம்பி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப்பூர் மாவட்டம், வேலாம்பாளையத்தில், 48.68 கோடி ரூபாய் செலவில், அரசு மருத்துவமனையை சமீபத்தில் முத ல்வர் திறந்து வைத்தார். மருத்துவமனை என்னவோ பிரமாண்டமாகத் தான் இருக்கிறது; ஆனால், அதன் செயல்பாடுகள் தான் பிரமிக்கும் அளவுக்கு இல்லை.
தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இந்நகரத்தில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை போல், காலை 7:00 மணிக்கே திறந்தால் தான், அனைத்து தரப்பு நோயாளிகளுக்கும் வசதியாக இருக்கும். ஆனால், இம்மருத்துவமனையோ, 9:00 மணிக்கு மேல் தான் திறக்கப்படுகிறது. அதன் பிறகே மருத்துவர்கள் ஒவ்வொருவராக வருகின்றனர்.
பிரஷர் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு, 7:00 மணிக்கு ரத்தம் எடுத்தால்தான், அதன்பின் அவர்கள் சாப்பிட்டு, குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் கழித்து இரண்டாவது முறையாக ரத்த பரிசோதனை செய்ய வசதியாக இருக்கும்.
ஆனால், இங்குள்ள ரத்த பரிசோதனை மையத்தில் உள்ளவரோ, 9:00 மணிக்கு மேல் தான் மருத்துவமனைக்கே வருகிறார். அதன்பின், எப்போது ரத்தம் எடுத்து, பின் நோயாளி சாப்பிட்டப் பின் இரண்டாவது முறை ரத்தம் எடுப்பது?
பிரஷர், சுகர் உள்ளவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள். அவர்கள் காலை உணவை, 10:00 மணிக்கு மேல் எப்படி சாப்பிட இயலும்? மயக்கம் ஏற்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்படுமானால் யார் பொறுப்பு? இதை மருத்துவமனையில் கேட்டால், ரத்த பரிசோதனை செய்பவர் ரொம்ப துாரததில் இருந்து வருவதாக சொல்கின்றனர்.
அவர் தாமதமாக வருவதற்கு நோயாளி எப்படி பொறுப்பேற்க முடியும்? குறித்த நேரத்தில் வரவேண்டியது ஊழியர்களின் கடமை அல்லவா? எனவே, பல கோடி ரூபாய் செலவில் உருவான மருத்துவமனை சரியாக செயல்பட வேண்டும் என்றால், மருத்துவமனை ஊழியர்கள் குறித்த நேரத்தில் வர வேண்டும். பரிசோதனை மையங்களில் உள்ள பணியாளர்கள் காலை, 7:00 மணிக்கே வரவேண்டும். அரசு இதை கவனத்தில் கொள்ளுமா?
------------
பாக்., இம்ரான் வழக்கு இங்கே இருந்திருந்தால்...
எஸ்.ரகு, புதுச்சேரியில் இருந்து எழுதிய, 'இ - மெயில்' கடிதம்: பரிசு பொருட்களை பதுக்கியது தொடர்பான ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம், தலா, 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாகிஸ்தான் தெஹ்ரிக் -- இ - -இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ராம் கான், 2018 முதல் 2022 வரை அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் மீது, 'தோஷாகானா' எனும் கருவூல ஊழல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், பாகிஸ்தான் துாதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசிய விட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கானுக்கு ஏற்கனவே, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 2023 முதல் அவர் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
'தோஷாகானா' என்பது அரசு கருவூலம். அரசு உயர் பதவியில் இருப்போர் தங்கள் பதவிக் காலத்தில், வெளிநாடுகள் மற்றும் பிற வழிகளில் கிடைத்த பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காமல் விற்றதாகக் கூறி, இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி மீது ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டனை வழங்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், 2021ல் மேற்காசிய நாடான சவுதி அரேபியா சென்றபோது, அந்நாட்டு அரசு குடும்பம், பல்கேரிய நாட்டு நகைகளை, இம்ரான் கானுக்கு பரிசாக வழங்கியது. அதை கருவூலத்தில் ஒப்படைக்காமல், மிகக் குறைந்த தொகையை செலுத்தி விட்டு, தனதாக்கி கொண்டதாக கூறி, இப்போது, இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது, அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம்.
இதேபோன்ற விவகாரம் இந்தியாவில் நிகழ்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும்... முதலில், குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, தீர்ப்பை வேறு ஒரு தேதிக்கு ஒத்தி வைத்திருப்பர். அடுத்து, தீர்ப்பு நாளன்று தீர்ப்பை வாசித்து விட்டு, மேல் முறையீடு செய்ய, 30 நாட்கள் அவகாசம் உள்ளது என்று சொல்லி, சிறைக்கு அனுப்புவதை ஒத்தி வைத்திருப்பர். பின், குற்றவாளி மேல்முறையீடு செய்திருந்தால், சொந்த ஜாமினில் வெளியே வழியனுப்பியும் வைத்திருப்பர்.
இங்கு, 'சட்டம் அனைவருக்கும் பொது' என்று வாயால் வடை சுட்டுக் கொண்டிருப்போமே தவிர, நடைமுறையில், அரசியல்வாதிகளுக்கு மட்டும் பிரத்யேகமான சலுகைகளை வாரி வழங்குவோம்; அது தான் இந்தியாவின் ஜனநாயகம்!

