/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
என்ன நடக்கிறதென முதல்வருக்கு தெரியாதோ?
/
என்ன நடக்கிறதென முதல்வருக்கு தெரியாதோ?
PUBLISHED ON : ஜன 30, 2026 03:37 AM

வீ.மரகதம்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக - கர்நாடக எல்லை
நகரான ஓசூரில் விமான நிலையம் அமைக்க ராணுவ அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளதாக
கூறுகின்றனர். காரணம், பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்திலிருந்து,
150 கிலோ மீட்டர் சுற்றளவில் வேறெந்த விமான நிலையமும் இருக்கக்கூடாது
என்கின்றனர்.
அதேநேரம், ஆந்திர முதல்வர் சந்திர பாபுவின்
தொகுதியான குப்பத்தில், விமான நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
குப்பமும், பெங்களூரு விமான நிலையத்திலிருந்து, 100 கி.மீ., துாரத்தில்
தான் இருக்கிறது.
ஆனாலும், சந்திரபாபு நாயுடு,
'கிருஷ்ணகிரியிலிருந்து குப்பம், 36 கி.மீ., தொலைவில் தான் உள்ளது; அதுவே,
ஓசூர் என்றால், 90 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டும். அதனால், கிருஷ்ண கிரி
மாவட்ட மக்கள் குப்பம் விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்'
என்று கூறி, சாதுர்யமாக காய் நகர்த்தி காரியம் சாதித்து வருகிறார்.
சந்திரபாபு நாயுடுவின் சாமர்த்தியம் ஸ்டாலினுக்கு இல்லை. மாநில வளர்ச்சி
குறித்து சிந்திக்காமல், எப்போதும் மத்திய அரசை எதிர்த்துக்கொண்டே
இருக்கிறார். இதனால், தமிழகத்திற்கு என்ன பயன்?
மத்திய அரசுடன்
சுமுகமான உறவைப் பேணுவதால் விசாகப்பட்டினமும், ஹைதராபாதும் வேகமாக முன்னேறி
வருகின்றன. தமிழகமோ தொழில் துறையில் பின்தங்கி வருகிறது.
இதேபோன்று தான், மத்திய அரசு மும்மொழி கல்வி திட்டத்தை முன் மொழிந்தபோது,
அதை வரவேற்றதுடன், 'ஆந்திர மக்கள் திரை கடலோடி திரவியம் தேடி உலக அரங்கில்
தலை நிமிர்ந்து நிற்க, மூன்று மொழிகள் என்ன... 10 மொழிகள் கூட கற்க
வாய்ப்பை ஏற்படுத்துவேன்' என்றார் சந்திரபாபு நாயுடு.
இப்போது,
ஆந்திர மாநிலத்திலிருந்து சர்வதேச விமானங்கள் அதிகளவில் வந்து செல்லும்
வகையில், மாநிலத்தில் ஏழு இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்படும்
என்றும் அறிவித்து உள்ளார்.
இப்படி மாநில வளர்ச்சிக்கு எது வெல்லாம் தேவையோ, அதில் அரசியல் செய்யாமல் வளர்ச்சி பணிகளில் அக்கறை காட்டுகிறார், ஆந்திர முதல்வர்.
ஆனால், தி.மு.க., முதல்வரோ, எல்லாவற்றிலும் அரசியல், 'அவியல்' செய்து கொண்டிருக்கிறார்.
மத்திய அரசோடு ஒவ்வொரு விஷயத்திலும் ஏறுக்குமாறாக நடந்து முறைத்துக்
கொண்டிருப்பதால், தமிழகத்திற்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை.
ஒருவேளை, தமிழகத்தில் என்ன நடக்கிறதென்றே, முதல்வருக்குத் தெரியவில்லையோ?
புலம்புவதில் அர்த்தம் இல்லை!
க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்றைய மும்பை, நாடு சுதந்திரத்திற்கு முன், குஜராத்தின் பல பகுதிகளுடன் இணைந்து பம்பாய் மாகாணம் என்று அழைக்கப்பட்டது.
அக்காலகட்டத்தில், பம்பாய் மாகாணத்தின் முதல்வராக இருந்தார், முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்.
அவரது மகள் மருத்துவ கல்லுாரி இறுதித் தேர்வு எழுதியிருந்தார். நன்றாகப் படித்திருந்தும், அப்பெண் தேர்வில் தோற்று விட்டார். மறுகூட்டல் செய்து பார்த்தால் நிச்சயம் வெற்றி அடைவோம் என்று நம்பி, தன் தந்தையிடம் அனுமதி கேட்டார்.
அதற்கு, 'நீ ஒரு சாதாரண குடிமகனின் மகளாக இருந்தால், மறுகூட்டல் செய்து அதில் வெற்றி பெற்றால், யாரும் எதுவும் பேசமாட்டர். ஆனால், நீ இம்மாகாண முதல்வரின் மகள்.
தப்பித் தவறி மறு கூட்டலில் வென்று விட்டாய் என்றால், தேசாய் தன் அதிகாரத்தை பயன்படுத்தி மகளை வெற்றியடையச் செய்துவிட்டார் என்று பேசுவர். அதனால், சிரமம் பாராமல் இன்னொரு முறை படித்து தேர்வு எழுது' என்றார்.
உலகம் அறியாத அச்சிறு பெண், தந்தை தன் கஷ்டத்தை புரிந்து கொள்ளவில்லையே என்று மனம் மறுகி, தற்கொலை செய்து கொண்டார்.
தான் உயிருக்கு உயிராக வளர்த்த மகளை பறிகொடுத்தும், அந்த தந்தை என்ன சொன்னார் தெரியுமா... 'நான் நேர்மையோடு வாழ்வதற்கு, என் மகளைப் பலிகொடுத்து தான் ஆகவேண்டும் என்றால், அதை செய்வேனே தவிர, நேர்மையைக் கைவிட மாட்டேன்' என்றார்.
இதேபோன்று தான், மறைந்த முன்னாள் பிரதமர் குல்சாரிலால் நந்தாவும் திகழ்ந்தார்!
விடுதலைப் போராட்ட வீரரான இவர், மிகச் சிறந்த பொருளாதார நிபுணர். நாடு விடுதலை பெறும் முன்பே, இந்தியத் தொழிலாளர்களின் அவல நிலையை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்வதற்கு, பல உலக மாநாடுகளில் பங்கேற்று, தன் சொல்லாற்றலால், பல தலைவர்களை வசீகரித்தவர்.
விடுதலைக்குப் பின், இந்திய திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும், தொழிலாளர் துறை மற்றும் உள்துறை அமைச்சராகவும் இருந்தவர், இந்தியாவின் இடைக்கால பிரதமராக, இருமுறை பதவி வகித்தவர்.
இத்தனை செல்வாக்கு இருந்தும், கடைசி வரை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான பென்ஷன் தொகையான, 500 ரூபாயில் தான் குடும்பம் நடத்தினார்.
வாடகை கொடுக்க முடியாமல் வீட்டு உரிமை யாளரால் விரட்டப்பட்ட பின், 1995ல் தியாகிகளுக்கான சலுகையாக சிறிய வீடு கேட்டு அரசிடம் விண்ணப்பம் செய்தார். அந்தத் தியாகியின் கோரிக்கையை, அவர் இறக்கும் வரை செய்து கொடுக்கவில்லை அரசு.
ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்... இன்று பஞ்சாயத்து யூனியனில் கவுன்சிலராக பொறுப்பேற்ற இரண்டு வாரத்திலேயே, 'ஆடி' காரில் பயணம் செய்யும் மனிதர்கள் மிகுந்த இந்நாட்டில், அமைச்சராகவும், பிரதமராகவும் இருந்த ஒருவர், சொந்தமாக ஒரு குடிசை வீடு கூட இல்லாமல், 500 ரூபாய் பென்ஷன் பணத்தில் வாழ்ந்துள்ளார்.
மொரார்ஜி தேசாய்களும், குல்சாரிலால் நந்தாக்களும் இம்மண்ணில் மறைந்து போயிருக்கலாம்; ஆனால், அவர்கள் விதைத்துச் சென்ற மாண்புகள் இன்னும் மாண்டு விடவில்லை.
ஆயிரம் ஊழல்வாதிகள் இந்நாட்டை சுரண்டிக் கொண்டிருந்தாலும், இன்னும் இந்நாட்டின் தியாகம் எனும் தர்மம் உயிருடன் தான் இருக்கிறது.
அதன் அடித்தொட்டு நடக்கும் தலைவர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு, நமக்கான தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டியது, ஒவ்வொரு குடிமகனின் கடமை!
அதைவிடுத்து, ஊழல்வாதிகளை நம்மை ஆளுவோராக தேர்வு செய்து விட்டு, 'நாட்டில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது, சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது' என்று புலம்புவதில் அர்த்தம் இல்லை!

