/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
பா.ஜ., தலைமை கவனத்தில் கொள்ளுமா?
/
பா.ஜ., தலைமை கவனத்தில் கொள்ளுமா?
PUBLISHED ON : ஜன 29, 2026 04:27 AM

கி.சந்தானகிருஷ்ணன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ., கட்சி தலைவராக
தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின் நபின், தன் முதல் பேச்சிலேயே,
'திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்தவர்கள், ராமர் பாலம்
இருப்பதை மறுத்தவர்களுக்கு, அரசியலில் இடமே இல்லாதபடி செய்யவேண்டும்' என்று
தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து, நிதின் நபின் தமிழகத்தின் அரசியல் நிலையை நன்கு அறிந்தவராகவே தெரிகிறார் என்பது புரிகிறது.
வரும் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, அ.தி.மு.க., தலைமை
வகித்தாலும், பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும்,
மேலும் சில விஷயங்களில், பா.ஜ., உறுதியான நிலைப்பாடு எடுத்தால் தான்,
கட்சியை அடுத்தகட்ட நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும்!
தற்போது
கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, ஜாதிக் கட்சி என்பதால்,
கடந்த சட்டசபை தேர்தலில் அவர்கள் போட்டியிட்ட இடங்களில், மற்ற ஜாதியினர்
ஓட்டு போடாத காரணத்தால், தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியைத் தழுவியது.
இம்முறை, பா.ம.க.,வின் மற்றொரு பிரிவு, அன்புமணியை ஜெயிக்க விடாமல் தடுக்க முற்படும். இதன் பாதிப்பு, தே.ஜ., கூட்டணிக்கு தான்!
அதேபோன்று, தே.மு.தி.க.,விற்கு, 2.5 சதவீதம் தான் ஓட்டு உள்ளது; மேலும், அது குடும்ப கட்சியாக செயல்படுகிறது.
மற்ற சிறிய கட்சிகளுக்கு, பெரிதாக ஓட்டு வங்கி இல்லை.
எனவே, அ.தி.மு.க., 120 இடங்கள் போக மீதமுள்ள, 114ல் பா.ஜ., 90 இடங்களையும், மீதமுள்ள 24ல் மற்ற கட்சியினரும் போட்டியிட வேண்டும்.
அ.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் தம்பிதுரை, 'தேர்தலுக்கு மட்டும் கூட்டணி; ஆட்சியில் கூட்டணி கிடையாது' என்கிறார்.
ஆனால், பா.ஜ., வெற்றி பெற்றால், ஹிந்து அறநிலையத் துறையிடம் இருந்து
கோவில்கள் விடுவிக்கப்படும்; மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்;
போதை பொருட்கள் ஒழிக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றனர், தமிழக மக்கள்.
அதேபோன்று, காவல் துறை நிர்வாகத்தில் சீரமைப்பு ஏற்படுத்தி, சட்டம் -
ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்; மத்திய அரசின் கல்விக் கொள்கையை செயல்படுத்தி,
நவோதயா பள்ளிகள் வர வேண்டும் என்பதும், மக்களின் எதிர்பார்ப்பாக
இருக்கிறது.
எனவே, பா.ஜ., தேசிய தலைவர், இதையெல்லாம் கவனத்தில் கொண்டு காய் நகர்த்தினால், தமிழகத்தில் தாமரை, வெகு விரைவிலே மலர்ந்து விடும்!
சட்டசபைக்கு 'டிமிக்கி' கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகள்!
சொ.காளிதாசன், பண்ருட்டியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபையில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள் என்று படித்தவர்கள் பலர், எம்.எல்.ஏ.,க்களாக இருக்கின்றனர். அதேநேரம் இவர்கள் பெரும்பாலும் சட்டசபையில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகளை பேசுவதில்லை.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரையும் அவர் புதல்வரையும் வானளாவ புகழ்வதும், பந்தா காட்டுவதுமாக இருக்கின்றனரே தவிர, தங்கள் ஜனநாயக கடமைகளை சரிவர செய்வதில்லை.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களோ கூச்சல் குழப்பம், வெளிநடப்பு செய்து, தங்கள் பங்கிற்கு ஜனநாயகத்தை அவமரியாதை செய்கின்றனர்.
இவர்களில், 59 சதவீதம் பேர் குற்றக்கறை படிந்தவர்களாகவும், 25 சதவீதம் பேர் மீது உச்ச நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகளும் உள்ளன.
மூன்று வயதே நிரம்பிய குழந்தைகளே ஆண்டிற்கு, 240 நாட்களுக்கு குறையாமல், பள்ளி சென்று கல்வி கற்கும்போது, எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையின் ஒரு கூட்டத் தொடருக்கு, 3 - 4 நாட்கள் கூட செல்லாமல், 'டிமிக்கி' கொடுக்கின்றனர்.
எனவே, சட்டசபை கூட்டத்தொடரை புறக்கணிக்கும் எம்.எல்.ஏ.,க்களை வரும் தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும்; அதுதான், அவர்களுக்கு தரும் சரி யான தண்டனையாக இருக்கும்!
ஆய்வாளரா, அரசியல்வாதியா?
எஸ்.எஸ்.நாராயணன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதுரையில் சிறுபான்மையின மகளிர் கல்லுாரி ஒன்றில், 'சுயமரியாதை' இயக்க நுாற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராம கிருஷ்ணா, ராமா யணம், மஹாபாரதம் குறித்து, தேவையில்லாமல் விமர்சனம் செய்துள்ளதுடன், 'கீழடி ஆய்வு குறித்து ஆதிக்க சக்திகளுக்கு பயம்' என்று அரசியல்வாதி போல் முழங்கி யுள்ளார்.
இவர் தொல்லியல் துறை அதிகாரியா, அரசியல்வாதியா?
இதேபோன்று, 'காஞ்சி புரம் அகழாய்வுகள் குறித்து செய்திகள் வெளிவரவில்லை. அங்கு கிடைத்த தொல்பொருட்களை, சென்னை பல்கலையில் தேடிப்பார்த்தால் ஒன்றும் கிடைக்காது; காரணம், அவை மண்ணோடு மண்ணாகி விட்டன' என்று பேசி, கடந்த ஆண்டு சர்ச்சையை கிளப்பினார்.
ஆனால், சென்னை பல்கலையோ அதை மறுத்து, அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தி, இவர் மூக்கை உடைத்தது.
அத்துடன், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அறி ஞர்களும் கண்டனம் தெரிவித்து, 'காஞ்சிபுரம் அகழாய்வுகள் குறித்து, தொல்லியல் அறிஞர்கள் குருமூர்த்தி, சண்முகம் உள்ளிட்டோர் நிறைய நுால்களை எழுதி உள்ளனர்.
'மத்திய தொல்லியல் துறையும், பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளது' என்று கூறியிருந்தனர்.
தற்போது, கீழடி ஆய்வில் மத்திய தொல்லியல் துறை கூடுதல் அறிக்கைகளை கேட்கிறது. அதுகுறித்த தயாரிப்பில் ஈடுபடாமல், திராவிட கழகங்கள், கம்யூனிஸ்ட் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்று, தான் ஓர் அரசு அதிகாரி என்பதை மறந்து, அரசியல்வாதி போல் பேசி வருகிறார்.
இப்போதும் கூட, தி.க., தலைவர் வீரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கூட்டத்தில் தான், கீழடி ஆய்வு குறித்து, 'ஆதிக்க சக்திகளுக்கு பயம்' என்று பேசியுள்ளார்.
ஒரு தொல்லியல் ஆய்வாளர், பொது வெளியில் பேசும்போது, ஓர் ஆய்வாளர் போல் ஆதாரங்களை முன் வைத்து பேச வேண்டுமே தவிர, அரசியல்வாதி போல் பேசக் கூடாது!
ஆளுவோர் மனம் குளிர பேசுவதுதான் அவரது விருப்பம் என்றால், தொல்லியல் துறை ஆய்வாளர் என்ற அரசு பதவியை துறந்து விட்டு, தி.மு.க.,விலோ, கம்யூனிஸ்ட் கட்சியிலோ இணைந்து அரசியல் பேசட்டும்; யாரும் அவரை குற்றம் சொல்ல மாட்டர். மாறாக, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு ஆளுவோருக்கு ஜால்ரா அடிக்க வேண்டாம்!

