PUBLISHED ON : அக் 04, 2026 12:00 AM

எஸ்.ராமையா, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: கடந்த 2024 பார்லிமென்ட் தேர்தலுக்கு முன், ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் மீது குற்றம் சுமத்தினார், காங்., – எம்.பி., ராகுல். அது பயன்தரவில்லை என்றதும், இப்போது தேர்தல் கமிஷனர் மீது பாயத்துவங்கி உள்ளார்.
சட்டசபை தேர்தலில் அதிகாரத்தை கோட்டை விட்டவர்களும், ராகுலுடன் சேர்ந்து துள்ளத் துவங்கியுள்ளனர். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆரம்பித்த அவர்களது கோரிக்கை, தற்போது, அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதில் வந்து நிற்கிறது.
‘தேர்தல் ஆணையத்தின் நாயகன்’ என்று வர்ணிக்கப்பட்டவர், டி.என்.சேஷன்; இவர், தலைமை தேர்தல் ஆணையராக இருந்த போது, அப்போதைய காங்., கட்சியை சேர்ந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ரெட்டி, ‘பார்லிமென்ட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்’ என்றாராம் சேஷனிடம்!
உடனே, ‘தேர்தல் ஆணையம் என்பது அரசின் துறை அல்ல; பார்லிமென்ட்டில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல’ என்று மறுத்து விட்டார், சேஷன்.
இதனால் கடுப்பான விஜயபாஸ்கர் ரெட்டி, அப்போதைய காங்., பிரதமர் நரசிம்மராவிடம், சேஷன் குறித்து குற்றப்பத்திரிகை வாசித்தார்.
நரசிம்மராவும் சேஷனை வரவழைத்து, ‘நீங்கள் ஏன் சட்டத்துறை அமைச்சருக்கு ஒத்துழைக்க மறுக்கிறீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு, ‘நான் ஒன்றும் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்தவன் அல்ல; அவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்ட. நான், தேர்தல் ஆணையத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவன்’ என்று, ‘பட்’டென்று பதில் கொடுத்தார்!
இதைக் கேட்டு வாயடைத்து போனாராம், நரசிம்மராவ்.
இதுமட்டுமா... தேர்தல் நடத்துவதில் காங்., கட்சியினர் குடுத்த குடைச்சல்களை பொறுக்க முடியாமல், 1993 ஆகஸ்ட் 2 ல், ‘தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை அரசு அங்கீகரிக்கும் வரை, நாட்டில் எந்தத் தேர்தலும் நடக்காது’ என்று அதிரடியாக அறிவித்தார், சேஷன்.
இதன் காரணமாக, மே.வங்கத்தில் கம்யூ., கட்சியை சேர்ந்த அப்போதைய முதல்வர் ஜோதிபாசு, சேஷனை, ‘பைத்தியக்கார நாய்’ என்று வசைபாடினார். அவர் மட்டுமல்ல; அக்காலகட்டத்தில் தேர்தல் ஆணையத்தை தங்களுக்கு சாதமாக பயன்படுத்த முடியாத காங்., கட்சி உட்பட மாநில கட்சிகள் வரை அவரை, ‘அல்’சேஷன் என்று அழைத்து, குரூர திருப்தி அடைந்தனர்.
இப்படி காங்., ஆளுங்கட்சியாக இருந்தால், தேர்தல் ஆணையம் தங்களுக்கு சாதகமாக வளைந்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், எதிர்க்கட்சியாக இருந்தால், ‘தான் திருடி பிறரை நம்பாள்’ என்பது போல் சந்தேகம் கொள்வதும் அதன் மரபணு கோளாறு.
அதனால் தான், அன்று சேஷனை, ‘அல் சேஷன்’ என்று வசைபாடிய வர்கள், இன்று, ஞானேஷ்குமாரை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூக்குரல் இடுகின்றனர்.
தேர்தல் ஆணையரை மாற்றி விட்டால் மட்டும் ராகுல் அதிகாரத்திற்கு வந்து விடுவாரா... மக்கள் ஓட்டுப் போட வேண்டாமா?
