PUBLISHED ON : அக் 03, 2026 12:00 AM
வி.மோகன், நெல்லிக்குப்பம், கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து, சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளிப்பதாக உத்தரவு பிறப்பித்திருந்தது, தமிழக அரசு.
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, தற்போது, அந்த உத்தரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது, அரசு.
இதேபோன்று தான், பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டுவதற்கான அரசாணை வெளியிட்டு, எதிர்ப்பு கிளம்பியதால் நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், விமான நிலைய விரிவாக்கத்திற்கான இடம் தேர்வு, மதுவிலக்குத் துறையில் பார்களில் உணவகம், சமூகநலத்துறை விடுதிகளில் மாட்டிறைச்சி என, ஒவ்வொரு துறையிலும் அறிவிப்புகளை வெளியிட்டு, பின் வாபஸ் பெறுவதாக அறிவிப்பது, தமிழக வெற்றிக் கழக அரசு இன்னும் குழப்ப நிலையில் இருப்பதாகவே தெரிகிறது.
இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடுமுன், முதல்வர் கவனத்திற்கு சென்ற பின்தான் அறிவிக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.
எம்.ஜி.ஆர்., முதல்வராக பொறுப்பேற்றதும், நேர்மையான அதிகாரிகளை தேர்வு செய்து, அவர்களின் ஆலோசனைகளை பெற்றாலும், அவர் சுயமாக முடிவெடுத்தே, மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி, சிறப்பான ஆட்சியை கொடுத்தார்.
த.வெ.க., அமைச்சர்கள் ஆட்சிக்கு புதியவர்கள் என்பதால் அதிகாரிகள், அவர்களை தங்கள் வசப்படுத்தி, இஷ்டத்திற்கு ஆட வைக்கலாம்; இதனால், ஆட்சிக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும்.
எனவே, முதல்வர் தன் துறையில் மட்டும் கவனம் செலுத்தாமல், பிற துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
கூடவே, ஒரு சில அமைச்சர்களின் முன் யோசனை அற்ற பேச்சுகளுக்கு கடிவாளம் போடுவதும் அவசியம். அப்போதுதான் இதுபோன்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும்!
lll
