தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ ஒப்பீடு வேண்டாம்!

 ஒப்பீடு வேண்டாம்!

 ஒப்பீடு வேண்டாம்!


PUBLISHED ON : செப் 17, 2026 12:49 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2026 12:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.மோகன், நெல்லிக்குப்பம், கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'கோவில்களில் சாதாரண வசதிகள் கூட சரியாக இல்லை; சில பழமையான கோவில்கள் மிகவும் மோசமாக உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இதையெல்லாம் பார்க்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்?' எனக் கேட்டுள்ளார், அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ்.

கடந்த ஆட்சியின் அவலம் இனியும் தொடரக் கூடாது என்று தான், தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். த.வெ.க.,வும் ஆட்சிக்கு வந்து, 100 நாட்களைக் கடந்து விட்டது!

இப்போதும், 'கடந்த ஆட்சியில் அதைச் செய்யவில்லை; இதைச் செய்யவில்லை' என குறை கூறிக் கொண்டிருந்தால் எப்படி?

அறநிலையத்துறை மட்டுமல்ல; மின்வாரியம், உணவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை என பிற துறை அமைச்சர்களும் இன்னமும் கடந்த கால ஆட்சியின் குறைகளை கூறி, நேரத்தை வீணடித்து வருகின்றனர்.

த.வெ.க., அமைச்சர்கள் கூறிதான் கடந்த ஆட்சியின் செயல் திறனை மக்கள் அறிந்து கொள்ளப் போகின்றனரா என்ன... ஐந்து ஆண்டுகள் அவதிப்பட்டதால் தானே, த.வெ.க.,வை மக்கள் தேர்ந்தெடுத்தனர்...

அதனால், இந்த ஒப்பீடு புராணத்தை விட்டு, செயலில் வேகம் காட்டுங்கள்!

வரலாற்றை மாணவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்!


எஸ்.ஏ.ஸ்ரீனிவாச சர்மா, ைஹதராபாத், ஆந்திராவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் சரி, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளும் சரி, இன்று ஒரு நுாதனமான பிரச்னையை சந்தித்து வருகின்றன.

கடந்த 2001, செப்., 11ல் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தியதில், 3,000க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதனால், தேசத்திற்காக பொங்கி எழுந்த அமெரிக்கர்கள், நாட்டைப் பாதுகாக்க, ராணுவம் மற்றும் கடற்படையில் சேர்ந்தனர்.

ஆனால், இன்றோ வேறுபட்ட மற்றும் கடினமான சூழலை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது.

அங்குள்ள கல்வி வளாகங்களில் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் மீதான அனுதாப பேச்சுகளும், அவர்களுக்கு ஆதரவான முழக்கங்களும் அதிகரித்து வருவது, தேசபக்தி கொண்ட அமெரிக்கர்களை கவலையடையச் செய்துள்ளன.

மேலும், மார்க்சியக் கோட்பாடுகளை வலியுறுத்தி, அமெரிக்க எதிர்ப்பு பிரசாரம் வகுப்பறைகளில் புகுத்தப்படுவதாக, 'தி வாஷிங்டன் டைம்ஸ்' பத்திரிகை கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெக்சாஸ் மாகாண கல்வி வாரியம், உயர்நிலைப் பள்ளி வரலாறு பாடத்திட்டத்தில், நியூயார்க் தாக்குதல் குறித்து, ஒரு புதிய பாடத்தை இணைத்துள்ளது. இது, தற்போது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது!

'ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் தனிமைப்படுத் திக் காட்டுவது நியாய மற்றது' என்றும், ஒரு சிலரின் செயல்களுக்காக அனைத்து முஸ்லிம்களையும் களங்கப்படுத்த முயற்சிப்பதா கவும், அமெரிக்க இஸ்லாமிய கவுன்சில் கூறுகிறது.

அமெரிக்கா இன்று எதிர்கொண்டு வரும் இதுபோன்ற பிரச்னைகளை, நம் நாடு பல ஆண்டுகளாகவே சந்தித்து வருகிறது. ஆனாலும், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான வலுவான ஆட்சி அமைந்திருப்பதால், பல எதிர்ப்பு போராட்டங்கள் புஸ்வாணம் ஆகி விட்டன.

எனினும், சுயநலவாதிகள், பிரிவினைவாத சக்திகளுடன் இணைந்து, நாட்டிற்கு எதிரான மனநிலையை மாணவர்கள் மத்தியில் உருவாக்குவதை தடுக்க வேண்டும்.

மத்திய - மாநில அரசுகள், இம்மண்ணின் மகத்தான தலைவர்கள் குறித்த வரலாறை மாணவர்களிடம் கொண்டு சேர்த்தால் தான், பிரிவினைவாத சக்திகளிடம் இருந்து, இந்த தேசத்தை காப்பாற்ற முடியும்!

நினைவு கூரப்படும்!


ராமன் கிருஷ்ணமாச்சாரி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா மறைந்த செய்தி கேட்டதும், என் நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது...

கடந்த 1980 காலக்கட்டத் தில் , மதுரையில் முதுகலை கல்வி பயின்று கொண்டிருந்தேன். அப்போது, மதுரை அகில இந்திய வானொலி நிலையத்திற்காக, போதைப் பழக்கத்திற்கு அடிமையா னவர்கள் குறித்து, ஒரு நிகழ்ச்சி தயாரித்து வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத் தது.

ஒரு டேப் ரிக்கார்டருடன் மதுரையை சுற்றி வந்து, பலரது கருத்துகளை அதில் பதிவு செய்தேன். என் நிகழ்ச்சிக்கு சுவாரசியம் கூட்ட, மக்களுக்கு நன்கு அறிமுகமான குரல் ஒன்று இருந்தால், பெரிய அளவில் மக்களை சென்றடையுமே என்று எண்ணி, மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றிய படி, சுற்று வட்டார திருவிழாக்களின் பட்டிமன்றங்களில் பேசிக்கொண்டிருந்த, சாலமன் பாப்பையாவை அணுகி, விஷயத்தைக் கூறினேன்.

வேறொரு கல்லுாரி மாணவர் தானே என்று அலட்சியப்படுத்தாமல், 'வாங்க தம்பி... பேசி தருகிறேன்' என்று கூறி, உடனே பேசியும் கொடுத்தார்.

ஆனால், அந்த பதிவில், அமெரிக்கன் கல்லுாரி மரங்களில் இருந்த காகங்களும் சேர்ந்து பேசிவிட்டன.

அதனால், தயக்கத்துடன், 'ஐயா... நீங்க என்னுடன் வானொலி நிலையம் வந்தால், அங்கே மீண்டும் பதிவு செய்து விடலாம்' என்றேன்.

அவர் சிறிதும் யோசிக்காமல், 'அப்படியா... வாய்யா போகலாம்...' என்று, என்னை அவருடைய, டி.வி.எஸ்.,50 வண்டியில் பின்னால் உட்கார வைத்து, வானொலி நிலையம் வந்து, ஒலிப்பதிவு கூடத்தில் பேசிக்கொடுத்தார்.

நான் நன்றி சொல்லி யபோது, 'நன்றியெல்லாம் வேணாம்ய்யா... படிச்சு நல்லா வாய்யா அது போதும்...' என்று, என்னை வாழ்த்திவிட்டு சென்றார்.

இன்று அவரது பூத உடல் மறைந்திருந்தாலும், எல்லாரிடமும் இனிமையாக பழகும் அவரது நற்குணம், என்னைப் போன்ற பலரால் எப்போதும் நினைவு கூரப்பட்டுக் கொண்டே இருக்கும்!



வரும்முன் காப்பதே சிறப்பு! நா.ராஜகோபாலன், தாசில்தார் (பணி நிறைவு), பல்லடம், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலக வெப்பமயமாதல் காரணமாக, தமிழகத்திலும் கடும் பாதிப்பு ஏற்படும் என, வானிலை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

'நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகமான மழை இருக்கும்; சென்னையில், 2015ல் வந்த வெள்ளம் போல், இந்த ஆண்டும் வர வாய்ப் புள்ளது' என்றும் எச்சரித்து ள்ளனர்.

அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முடிந்த அளவு ஆறுகளில் தடுப்பணை கட்டுதல், ஆறு, ஏரி, குளங்களை துார்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று, 2027 ஏப்ரல் முதல், ஜூன் வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என கணிக்கின்றனர்; மழைநீரை சேகரிக்காவிட்டால், கோடையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.

மனித தவறுகளால் ஏற்படும் பருவநிலை மாற்றமும், அதன்விளைவாக இயற்கை ஆற்றும் எதிர்வினையையும் சமயோசிதமாக கையாள, வரும்முன் காப்பதே சிறப்பு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us