PUBLISHED ON : செப் 07, 2026 01:19 AM

அண்ணா அன்பழகன், அந்தணபேட்டை, நாகை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 75 ஆண்டுகளாக உண்மை, நம்பிக்கை, ஒற்றுமை எனும் வாக்குறுதிகளில் இருந்து சிறிதும் பிறழாமல், 'உண்மையின் உரைகல்'லாக இருக்கும், எங்கள், 'தினமலர்' நாளிதழை போற்றும் விதமாக, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தபால் தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ள நிகழ்ச்சியை சமூக வலைதளத்தில் பார்த்த போது பரவசமாயிருந்தது.
வரவேற்புரை ஆற்றிய இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, 'தினமலர் நாளிதழ் யாருக்கும் அஞ்சாமல் பயணித்திருக்கிறது; உண்மையை உரக்க பேசியிருக்கிறது; பேசியும் வருகிறது. இந்த அஞ்சாமைக்கு காரணம், எங்களுக்கு பின், எங்கள் முதலாளிகளான லட்சோப லட்சம் வாசகர்கள் இருக்கின்றனர் என்ற தைரியமும், அவர்கள் கொடுக்கும் ஊக்கமுமே!' என்று கூறியுள்ளதை கேட்ட போது, அந்த லட்சோப லட்ச வாசகர்களின் ஒருவனாக பூரித்துப் போனேன்.
வாசகர்களை துாக்கி வைத்து கொண்டாடுவதில் 'தினமலர்' நாளிதழுக்கு இணையாக இந்தியாவிலேயே வேறொரு பத்திரிகை இல்லை.
மேலும், 'தினமலர்' நாளிதழின் வரலாறு குறித்த சிறப்பு காணொளியில், நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் உழைப்பும், நாட்டுப் பற்றும் சிலிர்க்க வைத்தன.
தமிழறிஞர் வையாபுரி பிள்ளை துவக்கி வைக்க, கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளையின் வாழ்த்தில் ஆரம்பித்த, எங்கள் 'தினமலர்' பத்திரிகை இன்று, உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் ஓர் அங்கமாக மாறியுள்ளது.
துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கூறியது போல, பல நுாற்றாண்டுகள் கடந்தாலும், 'தினமலர்' நாளிதழ் தமிழர்களின் வாழ்வில் மட்டுமல்ல; எங்களைப் போன்ற வாசகர்களால் தமிழர்களின் அடையாளங் களின் ஒன்றாக மணம் பரப்பும்!
வாழ்த்துக்கள் எங்கள் 'தினமலர்'நாளிதழுக்கு!
அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்!
சிவ.தியாகராஜ பாண்டியன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்:
மக்கள் தொகைக்கு ஏற்ப, பார்லிமென்ட் தொகுதிகளை மறுவரையறை செய்ய, மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் ஆளுங்கட்சி முதல், எதிர்க்கட்சிகள் வரை அனைவரும், 'தொகுதி மறுவரையறை வேண்டாம்; இப்போது இருக்கும், 543 தொகுதிகளே போதும்' என்கின்றனர்.
கடந்த, 1976ல் முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு எதிரான அலை வீசியதால், தோல்வி பயம் காரணமாக, இதை தள்ளி வைத்தார், இந்திரா.
அதேபோன்று, 2001ல் கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, பா.ஜ., முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் இதை ஒத்தி வைத்தார்.
ஆனால், பிரதமர் மோடி எதையும் தொலைநோக்கு பார்வையுடன், திட்டமிட்டு செய்பவர்; எனவே, யார் எதிர்த்தாலும் தொகுதி மறுவரையறை வந்தே தீரும்.
மக்கள் தொகை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், தொகுதி மறுவரையறை என்பது காலத்தின் கட்டாயம்!
எங்கள் சிவகங்கை பார்லிமென்ட் தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை, 18 லட்சம்; மக்கள் தொகையோ, 22 லட்சத்திற்கும் மேல்!
ஒரு எம்.பி.,யால் எப்படி இத்தனை லட்சம் மக்களையும் சந்திக்க முடியும்?
மேலும், வடக்கே ஆலங்குடியில் ஆரம்பித்து, தெற்கே மானாமதுரை வரை ஆறு தொகுதிகள் உள்ளடக்கியது தான், சிவகங்கை பார்லிமென்ட் தொகுதி!
ஆலங்குடியின் கடைக் கோடி கிராமத்தில் இருந்து, மானாமதுரை கடைக்கோடி கிராமம் வரை உள்ள துாரம் கிட்டத்தட்ட, 175 கி.மீ.,
மேலும், இந்த பார்லிமென்ட் தொகுதிக்குள், 2,000 குக்கிராமங்கள் உள்ளன. இத்தொகுதி எம்.பி., ஒரு நாளைக்கு ஒரு கிராமம் சென்று ஆய்வு செய்தால் கூட, அவரால், ஐந்தாண்டில், 1,000 கிராமத்தை கூட, ஆய்வு செய்ய முடியாது.
தமிழகத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன; ஆனால், அரசியல் கட்சிகள் தங்கள் வசதிக்கேற்ப மாவட்டங்களை, 78 - 88 என்று பிரித்து, மாவட்ட செயலர்களை நியமனம் செய்கின்றன. காரணம், அப்போது தான், அனைத்து மக்களையும் சந்தித்து, தொண்டர்களை ஒருங்கிணைத்து, தேர்தல் பிரசாரம் செய்ய முடியும் என்பதால்!
ஓர் அரசியல் கட்சி, நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கும் போது, மத்திய அரசு மக்கள் நலனுக்காக தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாதா?
தொகுதிகளின் எண்ணிக்கை உயர்ந்தால் தான், மக்கள் தங்கள் எம்.பி.,யை எளிதாக அணுகி, குறைகளை தெரிவிக்க முடியும்.
மேலும், ஒரு மாவட்டத்தின் பிரச்னைக்கு இரு எம்.பி.,க்கள் பேசும்போது, அது கூடுதல் கவனம் பெறும்.
எனவே, இவ்விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகள், தங்கள் எதிர்ப்பை கைவிட்டு மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.
அதுவே தமிழகத்தின் நலனுக்கு நல்லது!
காங்கிரசாருக்கு ஏன் வயிற்றெரிச்சல்?
ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பிரதமர் மோடிக்கு தற்போது, 76 வயது; 2029 பார்லிமென்ட் தேர்தலின் போது அவருக்கு, 79 வயதாகிவிடும். பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தின்படி, அதற்கு மேலும் அவர் பிரதமராக நீடிப்பது சந்தேகம் என்பது, காங் கிரஸ் கட்சியின் கணிப்பு!
அதனால் தான், இந்திய அளவில் காங்., பெரும் பலத்தை பெறவில்லை என்ற போதும், ராகுலை அடுத்த பிரதமர் என்பது போல விளம்பரம் செய்து வருகின்றனர், காங்கிரசார்.
இந்நிலையில், 'இந்தியா டுடே' பத்திரிகை நடத்திய சர்வேயில், பிரதமர் மோடிக்கு, 49 சதவீதம் பேரும், ராகுலுக்கு, 27 சதவீதமும், விஜய்க்கு, 9 சதவீதம் பேரும் ஓட்டளித்துள்ளனர்.
விஜய்க்கு கிடைத்துள்ள ஓட்டு சதவீதம் குறித்து, பா.ஜ., உள்ளிட்ட எந்தமாநில கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், காங்கிரசாரோ அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று, புலம்ப ஆரம்பித்து விட்டனர்.
'முதல்வர் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்றால், த.வெ.க., கூட்டணியிலிருந்து விலகுவோம்' என காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அசோகன் சாலமன் கூற, அக்கட்சியை சேர்ந்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமாரோ, 'வரும் 2029 லோக்சபா தேர்தலில், ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்; அதற்கு, த.வெ.க., உடன்படாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம்' என்று எச்சரித்துள்ளார்.
குளத்தின் மீது கோவித்துக் கொண்டு, குளிக்காமல் போனால் யாருக்கு நஷ்டம்?
காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்தால், தி.மு.க., தயவால் தற்போதுள்ள ஐந்து எம்.எல்.ஏ.,க்களுடன் அக்கட்சி, தமிழகத்தில் இருந்து காணாமல் போய்விடும்.
'மா பழுத்தால் கிளிக்கு; வேம்பு பழுத்தால் காக்கைக்கு' என்பது போல இருக்கிறது காங்கிரசாரின் பேச்சு!
இவர்கள் ராகுலை பிரதமராக்க ஆசைப்படுவது போல, த.வெ.க.,வினர் விஜய் பிரதமராக வர வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.
இதில், காங்கிரசாருக்கு ஏன் வயிறு எரிகிறது?
