PUBLISHED ON : செப் 08, 2026 12:00 AM

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காசுக்கு ரெண்டு குதிரையும் வேண்டும்; அது காற்றைப் போல் பறக்கவும் வேண்டும்' என்பது தான், இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் எண்ணமாக இருக்கிறது!
ஆனால், மத்திய பிரதேசம், பியோரா நகரை சேர்ந்த, 20 வயதே ஆன, பிட்டு தபாஹி என்ற கல்லுாரி மாணவர், அங்குள்ள அஜ்னார் என்ற நதியை தனியொரு மனிதராக சுத்தம் செய்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள எத்தனையோ நதிகளைப் போலவே, பியோரா நகரில் அஜ்னார் நதியும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசு அடைந்து காணப்பட்டுள்ளது.
எல்லாரையும் போல் அதை கடந்து செல்லாமல், ஒரு பொறுப்புள்ள குடிமகனாக, கிட்டத்தட்ட, ஏழு மாதங்கள் எவருடைய உதவியும் இன்றி, தானே களத்தில் இறங்கி சுத்தம் செய்துள்ளார்.
கழிவுகள் நிறைந்து காணப்பட்ட நதியின் நீர், இப்போது, சுத்தம் செய்யப்பட்ட கரைகளுக்குள் பளிங்கு போல் ஓடுவதை பார்க்கும் போது, மனம் நிறைவாக இருக்கிறது.
பிட்டு தபாஹியின் செயலை பாராட்டி, இந்தியா முழுதும் பாராட்டு குவிந்து வருகிறது. நெதர்லாந்தில் உள்ள, 'ஓஷன் க்ளீன் அப்' என்ற நிறுவனம், இவருக்கு வேலை வழங்கியுள்ளதுடன், அந்த நாட்டின் குடியுரிமை பெற்றுத் தரவும் உறுதியளித்துள்ளது.
இதுபோன்ற இளைஞர்களை அல்லவா இளம் தலைமுறையினர் வழிகாட்டியாக கொள்ள வேண்டும்!
அதைவிடுத்து, எங்கோ ஒரு வெளிநாட்டில் வசதியாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, சமூக வலைதளத்தில் மத்திய அரசை விமர்சித்து, அதன் வாயிலாக எதிர்க்கட்சியினரின் ஆதரவை பெற்று, தங்களை பெரிய ஆளாக காட்டிக் கொள்ளும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே, அரசியல் விமர்சகர் துருவ் ரதீ போன்றோரை பின் தொடர்வதால் இந்த நாட்டிற்கு என்ன நன்மை கிடைத்து விடும்?
அபிஜித் அமெரிக்காவில் உட்கார்ந்து, இந்திய இளைஞர்களை துாண்டி விடுகிறார் என்றால், துருவ் ரதீ, ஜெர்மனியில் இருந்து கொண்டு, இந்திய அரசியலை விமர்சித்துக் கொண்டு இருக்கிறார்.
இவர்களுக்கு பின்னால் இருப்பது நாட்டின் பிரிவினை சக்திகளும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தான்!
இளைஞர்களை மத்திய அரசுக்கு எதிராக துாண்டி விடுவது மட்டுமே இவர் களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அஜண்டா!
அதனால், இளைஞர்கள் யோசிக்க வேண்டும்; எதிர்க்கட்சிகளின் கைக்கூலிகளாக இருந்து சுயலாபம் அடையும் கரப்பான் பூச்சிகளை பின்தொடர்வதா, இல்லை இந்நாட்டை நேசித்து, இங்குள்ள குறைகளை சீர்செய்யும் பிட்டு தபாஹி போன்றோரை பின்தொடர்வதா என்று!
-----
முதல்வர் கவனமாக இருக்க வேண்டும்!
ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்தியாவின் அடுத்த பிரதமர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்தான். பிரதமரை தீர்மானிக்கப்போவது தமிழக அரசியல்தான்; டில்லி அரசியல் அல்ல' என்று திருவாய் மலர்ந்துள்ளார், அக்கட்சி எம்.எல்.ஏ., கனிமொழி.
மேலும், 'காங்கிரஸ் எம்.பி., ராகுல், விஜயை முதல்வர் பதவியில் அமரவைத்தது போல், பிரதமர் பதவியிலும் அமர வைப்பார்' என்றும், 'காமெடி' செய்துள்ளார்.
எப்படியாவது இந்த நாட்டின் பிரதமராகிவிடவேண்டும் என்று, கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அனைத்து விதமான குட்டிக் கரணங்களையும் அடித்து வருகிறார், ராகுல்.
ஆனாலும், மோடி என்ற ஒற்றை மனிதரை எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல், அவர் திக்குமுக்காடுகிறார்.
இந்த லட்சணத்தில் இவர் விஜயை பிரதம ராக்கப் போகிறாரா?
கடந்த 1964-ல் முன்னாள் பிரதமர் நேரு மற்றும் 1966-ல் முன்னாள் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரி மறைந்த போது பிரதமராகும் வாய்ப்பு வந்த போது, அதை பெருந்தன்மையோடு நிராகரித்து, இந்திராவை பிரதமர் நாற்காலியில் அமர வழி வகுத்தவர், காமராஜர்.
அவரைப் போல், 2029-ல் விஜயை பிரதமர் நாற்காலியில் அமரச் செய்வதற்கு, ராகுல், காமராஜரும் அல்ல; விஜய், இந்தியாவின், 'அயர்ன் லேடி' என்று அழைக்கப்பட்ட இந்திராவும் அல்ல.
ஒரு சினிமாவில், தமாஷ் நடிகர் கவுண்டமணியின் அரிசி ஆலைக்கு வாடிக்கையாளர் ஒருவர் வந்து, '500 மூட்டை நெல் அரைக்க கூலி எவ்வளவு?' என்று கேட்பார். கவுண்டமணியும் கூலியைக் கூறி, 'எங்கே நெல் மூட்டைகள்?' என்று கேட்பார்.
அந்த வாடிக்கையாளரோ, 'இனிமேல்தான் வயலே வாங்கப்போகிறேன்' என்பார்.
அதுபோல், பார்லிமென்டில் இன்னும் தங்கள் கட்சிக்கான கணக்கையே துவக்காத த.வெ.க.,வினர், பிரதமர் பதவி குறித்து பேசுவது கவுண்டமணி காமெடியை மிஞ்சிவிட்டது.
முதல்வர் விஜய், இதுபோன்ற ஜால்ரா எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களின் புகழ்ச்சியில் மயங்கிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்; இல்லையெனில், ஆசையை துாண்டி மூலையில் அமர வைத்து விடுவர்!
-----
விமர்சன அரசியலை கைவிடுங்கள்!
ஆர்.கந்தையா, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.8 சதவீதமாக உள்ளது. நம் பொருளாதாரம் இறந்து விட்டதாக கூறிய காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலை வர் ராகுல் இதற்கு என்ன சொல்ல போகிறார்? பொய் சொன்னதற்காக அவர், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறியுள்ளார், பா.ஜ., -- எம்.பி., ரவிசங்கர் பிரசாத்.
அதற்கு, 'நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார்; பொய் சொல்லும் அவரது திறனை தவிர, வேறு எதுவும் மாறவில்லை. நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்ந்துள்ளது. இது குறித்து மோடி என்ன சொல்லப் போகிறார்?' என்று பதில் கேள்வி கேட்டுள்ளார், காங்கிரசின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., கட்சி, 12 ஆண்டுகளாகத்தான் மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் உள்ளது.
அதற்கு முன், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி தானே... 50 ஆண்டு நிர்வாகத்தில், நாட்டில் வேலையின்மையையும், விலைவாசியையும் கட்டுப்படுத்தி இருந்தால், காங்கிரசை ஒதுக்கி, மக்கள் பா.ஜ.,வை தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர வைத்திருப்பரா?
காங்., ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம், பணவீக்கம், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு எந்த அளவு இருந்தது; தற்போது, நாட்டின் வளர்ச்சி என்ன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!
எனவே, காங்., தலைவர்கள் விமர்சன அரசியலில் செலவிடும் நேரத்தை, மக்கள் பணிக்காக செலவிட்டால், 2029ல் வரும் பார்லிமென்ட் தேர்தலில், எம்.பி.,க்களின் எண்ணிக்கையாவது உயரும்!
