தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ மக்கள் நம்பிக்கையை தொலைத்து விடாதீர்கள் விஜய்!

 மக்கள் நம்பிக்கையை தொலைத்து விடாதீர்கள் விஜய்!

 மக்கள் நம்பிக்கையை தொலைத்து விடாதீர்கள் விஜய்!


PUBLISHED ON : மே 11, 2026 01:38 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2026 01:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெ.கோபாலசாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதல்வர் விஜய், தேர்தல் பிரசாரம் முழுதும், தி.மு.க.,வை, 'தீய சக்தி' என்று வசைமாரி பொழிந்தார்; 'குடும்ப ஆட்சி, ஊழல் அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்' என்று இளைஞர்களை உணர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஆனால், இப்போது, ஆட்சி அமைக்க, குடும்ப கட்சியான காங்கிரசின் ஆதரவை பெற்றுள்ளார்; தீய சக்தி என்று வர்ணிக்கப்பட்ட தி.மு.க.,வின் தயவில் எம்.எல்.ஏ.,க்கள் வைத்தி ருக்கும் இந்தியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவை பெற்றுள்ளார்; விடுதலை சிறுத்தை கள் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்து விட்டார்.

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு, அவரது மகள் இந்திரா, அவரது மகன் ராஜிவ் என்று மூன்று தலைமுறை நேரடியாக பிரதமராக கோலோச்சினர்.

ராஜிவின் வெளிநாட்டு மனைவி சோனியா, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி, நிழல் பிரதமராக, 10 ஆண்டுகள் ஆண்டதுடன், 24 ஆண்டுகளாக காங்., கட்சி தலைவராக இருந்தார்.

தற்போது அவரது மகள் பிரியங்கா காங்., - எம்.பி.,யாகி விட்டார். மகன் ராகுல் பிரதமர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டுள்ளனர். இப்படி, 1947 முதல் 2026 வரை, 79 ஆண்டுகளில், 60 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே குடும்பம் அதிகாரத்தில் இருந்து வரும் நிலையில், தி.மு.க.,வின் மூன்று தலைமுறையை வாரிசு அரசியல் என்று குற்றம் சொல்லும் விஜய், காங்கிரசின், ஐந்து தலைமுறை அரசியலுக்கு மட்டும் வரவேற்பு பத்திரம் வாசிப்பது சரியா?

விஜயின் பிரசார கூட்டத்தில் பெரிதாக ஒலிக்கப்பட்டது, 'ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்' என்ற கோஷம் தான்; ஆனால், மத்தியில் ஆட்சியில் இருந்த போது, போபர்ஸ் பீரங்கி ஊழல் முதல், நிலக்கரி, காமன்வெல்த், ெஹலிகாப்டர் ஊழல் என்று அனைத்து துறைகளிலும் ஊழலில் கோலோச்சிய காங்கிரசின் தயவில், ஆட்சி அமைக்க விரும்புவது முரணாக உள்ளதே!

'வாக் த டாக்' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு; சொல்லியபடி செயல்படுதல் என்பது இதன் பொருள். பேசும் வார்த்தைகளில் இருந்து மாறுபடும்போது, மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

மக்கள் நம்பிக்கையை, அரசியல் கணக்கீட்டால் முதல்வர் விஜய் தொலைத்து விடாமல் இருக்க, சரியாக திட்டமிட வேண்டும்.

ஊழல் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்!


மாம்பாக்கம் நாணா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், கிட்டத்தட்ட 422 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார், பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகச் சீர்கேட்டை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியுள்ளது.

ஒடிஷாவில் உள்ள மின் திட்டத்திற்கு ஒப்பந்தங்களை வழங்கியதில் துவங்கி, திட்டச் செலவை தன்னிச்சையாக, 524 கோடி ரூபாய் உயர்த்தியது வரை அதிகாரிகளின் கைவரிசை நீண்டுள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால், 73,000 டன் செம்மண் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டதும், போலி அங்கீகார கடிதங்கள் வாயிலாக வங்கிப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதும் தான்!

இது ஏதோ ஒரு சில நபர்களால் நடந்த தவறல்ல; ஒரு பெரிய கும்பலே இதில் கைகோர்த்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

சமூக நலத் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் நிதியிலும் மோசடி நடந்திருப்பது, ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயல்.

சி.பி.ஐ., அதிகாரிகள் இப்போது தான் முதற்கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர். 2022 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் இவ்வளவு பெரிய ஊழல் நடக்கும் வரை தணிக்கைத் துறையும், உயர் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருந்தனர்?

நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பே, இந்த விசாரணை சூடுபிடித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் என்பது நாட்டின் சொத்து; அதில் கை வைப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்; இழந்த பணம் மீண்டும் அரசு கஜானாவிற்குத் திரும்ப வேண்டும். இல்லையென்றால், நிலக்கரி நிறு வனத்தில் ஊழல் செய்தவர்கள், மக்களின் நம்பிக்கையில், 'கரி' பூசியவர்களாகவே வரலாற்றில் இடம் பெறுவர்!

வெற்றி உணர்த்தும் செய்தி!


த.ராம் மோகன், மதுரவாயல், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிட அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற் படுத்தி உள்ளது. வெறும் இலவச அறிவிப்புகளால் மட்டும் மக்களைத் திருப்தி படுத்த முடியாது என்பதையும், இத்தேர்தல் முடிவு உணர்த்தியுள்ளது.

குறிப்பாக, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு போன்ற மக்களை நேரடியாக பாதிக்கும் விஷயங்களில் அரசு காட்டிய மெத்தனப்போக்கை மக்கள் மன்னிக்கவில்லை; குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படா தது, நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை தகர்த்துஉள்ளது.

ஆளுங்கட்சியின் தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டிய கூட்டணி கட்சிகள், தங்கள் இருப்பைத் தக்கவைக்க, அரசுக்கு, 'ஜால்ரா' அடித்ததையும், எதிர்க்கட்சியாக செயல்பட தவறியதால், அ.தி.மு.க.,வையும் சேர்த்து மக்கள் நிராகரித்துஉள்ளனர்.

இதிலிருந்து, தவறு எங்கு நடந்தாலும், அதை தட்டிக்கேட்கும் தலைமையையே மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதை, ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்படும் கட்சிகள் உணர வேண்டும்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், தொகுதி பக்கம் எட்டிப் பார்க்காமல் தேர்தலை முன்னிட்டு தரும் இலவச பொருட்களும், பணமுமே தங்கள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி என நினைத்து, ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும் பணத்தை வாரி இறைத்தன.

அத்தனையையும் வாங்கி பைக்குள் போட்டுக் கொண்டு, கமுக்கமாக தங்கள் ஓட்டை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அளித்திருப்பது, ஒரு புரட்சிகரமான திருப்பம்!

கிட்டத்தட்ட, 59 ஆண்டு களாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் பிம்பம், இன்று சிதைந்து விட்டது.

வாரிசு அரசியல், ஊழல் மற்றும் ஒரே மாதிரியான அரசியல் அணுகுமுறை ஆகியவற்றால், மக்கள் சலிப்படைந்து விட்டனர் என்பதே, விஜயின் வெற்றி உணர்த்தும் செய்தி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us