/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
ஹிந்துக்களின் உணர்வோடு விளையாடாதீர்கள்!
/
ஹிந்துக்களின் உணர்வோடு விளையாடாதீர்கள்!
PUBLISHED ON : ஜன 21, 2024 12:00 AM
ஹிந்துக்களின் உணர்வோடு விளையாடாதீர்கள்!
என். கந்தசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சனாதனத்தை ஒழிக்க வேண்டும்' என்று பேசி, 'இண்டியா' கூட்டணி தலைவர்களின் கண்டனத்துக்கு ஆளான உதயநிதி,
தற்போது ராமர் கோவில் திறப்பு விழா பற்றி தேவையில்லாத கருத்துகளைக் கூறி, ஹிந்துக்களின் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
'ராமர் கோவிலுக்கு செல்வதை தி.மு.க., எதிர்க்கவில்லை; அது அவரவர் விருப்பம்' என்று கூறியதோடு, அவர் நிறுத்தியிருக்கலாம். அதை விடுத்து, 'பாபர் கட்டிய மசூதியை இடித்து விட்டு, அந்த இடத்தில் ராமர் கோவில் எழுப்பி இருப்பதில் தான் தி.மு.க.,வுக்கு உடன்பாடு இல்லை' என்று கூறி, ஹிந்துக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டிருக்கிறார் உதயநிதி.
ஏற்கனவே இருந்த ராமர் கோவிலை பாபர் இடித்து தரைமட்டமாக்கி, அந்த இடத்தில் புதிதாக மசூதியை கட்டியது, உதயநிதிக்கு அநியாயமாகத் தெரியவில்லை; வழிபாடு நடத்தாமல்,
பாழடைந்து போயிருந்த பாபர் மசூதியை இடித்தது மட்டும், உதயநிதிக்கு அநியாயமாகத் தெரிகிறது.ஏற்கனவே, ராமர் கோவில் இருந்த இடத்தில் தான், புதிதாக ராமர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, பாபர் செய்த பாவத்திற்கு தான், தற்போது பரிகாரம் தேடப்பட்டு உள்ளது.
மற்றபடி டி.ஆர்.பாலு சொல்வது போல ஆன்மிக விழாவில், அரசியல் ஏதும் கலக்கவில்லை. காமாலைக்காரனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத் தெரிவது போல, பிரதமர் மோடி எதைச் செய்தாலும் திராவிட செம்மல் களுக்கு குற்றமாகத் தெரிகிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் எனில், ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு தற்போது தான் மதிப்பு தரப்பட்டுள்ளது. அவர்களின் உணர்வுகளோடு உதயநிதி
போன்றவர்கள் விளையாடக் கூடாது!
கூட்டம் நடத்தி காரியத்தை சாதியுங்க!
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிறுபான்மையினரின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காக பா.ஜ., கூட்டணியை முறித்துக் கொண்ட அ.தி.மு.க.,வினர், 'சிறுபான்மையினருக்கு தி.மு.க., எதுவும் செய்யவில்லை; நாங்கள் தான் நிறைய செய்துள்ளோம். எனவே, அவர்களின் ஆதரவு எங்களுக்கு தான்' என்று கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் இவர்கள் சொல்வதைப் பற்றி தி.மு.க., அலட்டிக் கொள்ளவில்லை. இருந்த போதிலும், சிறுபான்மையினர் அ.தி.மு.க., பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக, 'அ.தி.மு.க. -- பா.ஜ. இடையே ரகசிய கூட்டணி தொடர்கிறது' என்று பதிலடி தந்தனர்.
இந்த சூழ்நிலையில் தான், சமீபத்தில் மதுரையில் இந்திய சமூக ஜனநாயக கட்சியின், மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் பிரமாண்ட மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, 'தி.மு.க.,வை போல் நாங்கள் வாக்கு கொடுத்து ஏமாற்றமாட்டோம். முஸ்லிம்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம்' என்று கூறி, கூட்டத்தினரின் பலத்த கைதட்டலை வாங்கினார்.இதனால், பயந்து போன 'திராவிட மாடல்' அரசின் முதல்வர், சிறுபான்மையினரின் வாக்குகள் தி.மு.க.,விற்கு கிடைக்காமல்
போய்விடுமோ என்ற அச்சத்தில், உடனடியாக சிறுபான்மையினர் கோரிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை நடத்தி, அவர்களின் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, பல கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது. பிப்., -26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.இவர்கள், எஸ்.டி.பி.ஐ., செய்தது போல், பழனிசாமியை அழைத்து பிரமாண்டமாக பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி, உங்கள் பலத்தை காட்டினால் மட்டும் போதும்... அய்யய்யோ... அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் ஓட்டுகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், உங்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
திண்டிவனம் ஷெரீபை தெரியுமாபன்னீருக்கு?
டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகம் முழுதும் நடைபெறும் தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம், கோவை மாவட்டம், சூலுாரில் சமீபத்தில் நடந்தது.
அதில் பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'நான், அ.தி.மு.க., பொருளாளராக இருந்த போது, ஜெயலலிதா என்னிடம், 'பன்னீர்செல்வம்... எனக்கு தனிப்பட்ட முறையில் நிதிச்சுமை இருக்கிறது. இதை தீர்க்க கட்சி நிதியில் இருந்து, 2 கோடி ரூபாய் கடனாக தாருங்கள்; ஒரே ஆண்டில் திருப்பி தந்து விடுகிறேன்' என்றார்...
'அவர் கேட்டபடி, 2 கோடி ரூபாய் கொடுத்தேன். ஒரே மாதத்தில் திருப்பி தந்து விட்டார். இது தான் வரலாறு' என்று பேசினார்.எம்.ஜி.ஆர்., நடிகராக இருந்த போது, 'வருமான வரி கட்டாமல் பாக்கி வைத்துள்ளார்' என, அன்று பரபரப்பான செய்திகள் வெளியாகின. இதை பார்த்த, திண்டிவனத்தை சேர்ந்த தீவிர ரசிகரான ஷெரீப் என்பவர், எம்.ஜி.ஆரின் வரி பாக்கியை செலுத்த, தன் சொந்த வீட்டை தாயின் சம்மதத்துடன், 40,000 ரூபாய்க்கு விற்க தயாரானார்; அதற்காக வெளியூரில் இருக்கும்
தன் அண்ணனையும் வரவழைத்து விட்டார்.'வீட்டை விற்று பணத்தை எடுத்து வருகிறேன். இந்த அதிகப் பிரசங்கி தனத்தை தயவுசெய்து மன்னித்து, பணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்' என எம்.ஜி.ஆருக்கு, ஷெரீப் தாயார் கடிதம் எழுதினார்.
கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த எம்.ஜி.ஆர்., 'வீட்டை விற்கும் விபரீத முடிவுகளை நிறுத்துங்கள்; வரி பாக்கி கடனை நான் பார்த்து கொள்கிறேன். 'முதலில், உங்கள் மகன்களின் எதிர்காலம் பற்றி கவனம் செலுத்துங்கள்' என, அவருக்கு அவசர தந்தி வாயிலாக செய்தி அனுப்பினார்.'அவசரமான நேரத்தில், உங்களுக்கு உதவ முடியாமல் போனதை நினைத்து, எங்கள் குடும்பமே மனம் உடைந்து போயிருக்கிறோம்' என்று ஷெரீப்பின் தாயார் பதில் கடிதம் எழுதினார்.
எம்.ஜி.ஆரை சினிமாவில்மட்டுமே பார்த்த ஷெரீப்பின் குடும்பம், அவரது வருமான வரி கடனை தீர்க்க, தன் சொந்த வீட்டையே விற்க துணிந்த விஷயம் தான், வரலாறு என்பதையும்...மதுரை மாவட்டம், பெரியகுளத்தில் டீக்கடை வைத்திருந்த தன்னை, தமிழக முதல்வராக்கிய தன் தலைவி ஜெயலலிதா, கட்சி நிதியிலிருந்து கடன் வாங்கி திருப்பி கொடுத்தது வரலாறு அல்ல சம்பவம் என்பதையும், பன்னீர்செல்வம் உணர்ந்து கொள்ள
வேண்டும்.அன்று, தன்னிடம் ரகசியமாக கேட்ட உதவியை, இன்று ஊர் முழுக்க பெருமையாக சொல்லும் இவரை, ஜெயலலிதா தெரிந்தோ தெரியாமலோ, 'நான் கண்ட பரதன்' என்று புகழ்ந்து பேசி விட்டார்!
காங்., கட்சிக்கு பேரிழப்பு உறுதி!
அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒவ்வொரு ஹிந்துவின் நீண்ட நாள் கனவாக இருந்த, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், நாளை நடைபெற உள்ளது. இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும், நாம் இந்த தருணத்தில் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், 'அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறது' என்று, போலி மதச்சார்பின்மை பேசும் சில
கட்சிகள் கூறுவதை, மக்கள் நம்ப தயாராக இல்லை.அவர்கள் யாருடைய ஓட்டுகளை நம்பி இப்படி பேசுகின்றனர் என்பதை, ஒவ்வொரு ஹிந்துக்களும் நன்கு அறிவர். இப்படி போலி மதச்சார்பின்மை பேசித்தான், தமிழகத்தில் பல ஆண்டுகளாக தி.மு.க., ஓட்டு வங்கி அரசியல் செய்கிறது.தற்போது, இந்த திராவிடக் கட்சிகளுடன், தேசிய கட்சியான காங்கிரசும் சேர்ந்து, முழுமையாக ஹிந்துக்களை புறக்கணிக்கும் கட்சியாக மாறி விட்டது.சுதந்திரம் அடைந்த பின், நேருவின் காலத்திலேயே காங்கிரஸ் கட்சி போலி மதச்சார்பின்மை அரசியலை துவக்கியது; தற்போது, அதில் உச்சம் தொட்டுள்ளது. 'ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில்
பங்கேற்பது இல்லை' என, காங்கிரஸ் அறிவித்துள்ளது தவறான முடிவு.இதனால், காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட மதங்களுக்கு மட்டுமான கட்சியாக தன்னை சுருக்கிக் கொண்டுள்ளது. ஏற்கனவே, வட மாநிலங்களில் முழுமையாக தோல்வியை தழுவியுள்ள சூழலில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று, தாங்களும் ஹிந்துக்களுக்கு ஆதரவான கட்சி தான் என்பதை நிரூபிக்க, காங்கிரஸ் தவறி விட்டது.
உண்மையில், காந்தி கண்ட ராமராஜ்யம் விரைவில் அமைய இருப்பதை, இனி யாராலும் தடுக்க முடியாது. எது எப்படியோ... ராமர் கோவில் கும்பாபிஷேக புறக்கணிப்பால், மற்ற கட்சிகளை விட காங்கிரஸ் கட்சிக்கு தான் பேரிழப்பு
என்பது, லோக்சபா தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
பிணக்கு கொள்ளாமல் கணக்கை காட்டுங்க!
மரகதம் சிம்மன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசு வழங்கிய நிதிக்கான செலவுகளை கணக்கு கேட்டுள்ளார் கவர்னர் ரவி. அன்று எம்.ஜி.ஆர்., கணக்கு கேட்டார்; தி.மு.க.,
கட்சி உடைந்தது. இன்று கவர்னர் கணக்கு கேட்கிறார்... என்ன ஆகுமோ தெரியாது?எப்போதும், 'மத்திய அரசு பணம் தரவில்லை' என்று மாநில அரசு புகார் கூறுவது வழக்கம். ஆனால் தற்போது, காலம் திரும்புகிறது. 'யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்' என்று கூறுவர். அதுதான் இப்போது நடக்கிறது.
பணம் கொடுத்தோருக்கு கணக்கு கேட்க உரிமை உண்டு; இப்போது மாநில அரசு, உரிய கணக்கை காட்ட வேண்டும். அப்படி காட்டினால் தான், மத்திய அரசு கொடுத்துள்ள பணத்தை, மாநில அரசு எப்படி செலவு செய்துள்ளது என்பது மக்களுக்கும் தெரியும்.மேலும், சில மாநிலங்களுக்கு மட்டும் அதிக பணம் ஒதுக்கப்படுவதாகவும், தமிழகத்திற்கு குறைவாகவே கொடுக்கப்படுவதாகவும் எப்போதுமே ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இப்போது, கவர்னர் கணக்கு கேட்பதால், இந்த குற்றச்சாட்டுக்கும் விடை கிடைத்து விடும்.
அதே நேரம், இந்த கணக்கு விபரங்கள் வெள்ளை அறிக்கையாக, மக்களுக்கும் தெரியும்படிவெளியிடுவது நல்லது. மக்களுக்கும் நாம் கொடுத்த வரிப்பணம், நல்ல முறையில் தான் செலவு செய்யப்படுகிறதா இல்லையா என்பதும் விளங்கிவிடும். இதுவரை எந்த கவர்னரும் கேட்காத கேள்வியை, கவர்னர் ரவி
கேட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இதுவரை கவர்னர் பதவியை, ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்று அனைவரும் கேலி பேசி வந்தனர். ஆனால், கவர்னர் பதவிக்கும் மதிப்பு உண்டு என்பது தற்போது தான் புரிகிறது. எனவே, கணக்கு கேட்டால், பிணக்கு கொள்ளாமல் மாநில அரசு பதிலளிப்பதே முறை!
'திராவிட மாடல்'அர்த்தம் தெரியுமா?
எட்டையபுரத்தான்,கே.கே.புதுார், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திராவிட மாடல் என்றால் என்ன?' என்று கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. சரி போகட்டும்... தி.மு.க., வினருக்காவது தெரியுமா என்றால், அவர்களும் தெளிவான பதிலை
சொல்வதில்லை...'கருணாநிதி பேரனான எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் மருத்துவர்களை தான் கடவுளாக பார்க்கிறேன்' என்று, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறுகிறார்.
கடவுளே கிடையாது என்று சொல்பவர், 'மருத்துவர்களை கடவுளாக பார்க்கிறேன்' என்று சொல்வது எப்படி என்று புரியவில்லை. இல்லாத உருவத்தை எப்படி கடவுளாக பார்க்க முடியும்?
இதுதான் திராவிட மாடல்...!'கிறிஸ்துவர்கள் கூட்டத்தில், நான் ஒரு கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன். நான் கல்வி கற்றது லயோலா கல்லுாரி, என் மனைவி ஒரு கிறிஸ்துவர்' என்று சொல்கிறார் உதயநிதி. ஜாதி இல்லை, மதம் இல்லை, கடவுள் இல்லை
என்று பகுத்தறிவு பேசும் உதயநிதி, தன்னை கிறிஸ்துவர் என்று எப்படி சொல்லலாம்?கடவுள் மறுப்பு பேசுவதால், அவர் இயேசு கிறிஸ்துவை இறைவனாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று தானே பொருள்.
இதுதான் திராவிட மாடல்...!ஹிந்து கோவில்களில் கொடுக்கும் விபூதி, குங்குமத்தை, தரையில் கொட்டிவிட்டு பகுத்தறிவு பேசும் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா கோவில் கோவிலாக சென்று வழிபடுவது பகுத்தறிவுக்கு ஏற்புடையதா? அப்படி என்றால் முதல்வர் வீட்டிலேயே ஈ.வெ.ரா., கொள்கை
எடுபடவில்லை என்று தானே பொருள். இது தான் திராவிட மாடல்...!நாளை நடைபெற இருக்கும் ராமபிரானின் கோவில் திறப்பு வைபவத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனால், தி.மு.க.,வினர் ஹிந்து மத எதிர்ப்பு எனும் போர்வையில் மேற்படி விழாவிற்கு முறையாக அழைப்பிதழ் பெற்ற பின்னரும், 'அதில் பங்கேற்க மாட்டோம்' என, தெரிவித்துள்ளனர்.சுருக்கமாக சொல்வ தென்றால், ஹிந்துக்களுக்கு எதிரான காரியங்களை செய்வது தான், 'திராவிட மாடல்' என்பதன் அர்த்தம். இனியாவது, ஹிந்துக்களின் ஓட்டுகள் இவர்களுக்கு இல்லை என்ற முடிவை அனைவரும் எடுக்க வேண்டும்.

