/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
சரித்திரத்தை சிதைக்க முயலாதீர்கள்!
/
சரித்திரத்தை சிதைக்க முயலாதீர்கள்!
PUBLISHED ON : ஜூலை 21, 2024 12:00 AM

சரித்திரத்தை சிதைக்க முயலாதீர்கள்!
ஆர்.ராகவன், திருச்சியில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அர்த்த சாஸ்திரம்' என்ற அரசியல்
நுாலை எழுதிய சாணக்கியரை பற்றியோ, அவர் எடுத்துக் கொண்ட சபதம் குறித்தோ,
அந்த சபதத்தில் வெற்றி பெற அவர் கையாண்ட வழிமுறைகள் பற்றியோ, 'ஆனா, ஆவன்னா'
கூட தெரியாத, அ.தி.மு.க., அண்ணன் செல்லுார் ராஜு, பொதுச்செயலர்
பழனிசாமியை, அந்த மாமேதையுடன் ஒப்பிட்டு பூரித்து மகிழ்ந்து இருக்கிறார்.
சாணக்கியத்தனம்
என்பது, என்னமோ வைகை ஆற்று நீர் ஆவியாகாமல் தடுக்க, தெர்மாகோல் அட்டைகளை
போட்டு மூடிவிடும் சங்கதி என்று நினைத்து விட்டார் போலும்!
இன்றைய
பீஹாரும், அன்றைய பாடலிபுத்திரமுமான நாட்டை ஆண்ட, நந்தவம்ச அரசர்,
விருந்துண்ண அமர்ந்திருந்த சாணக்கியரை, விரட்டி வெளியேற்றியதில்
துவங்குகிறது சாணக்கியரின் சாணக்கியத்தனம்.
வெளியேற்றும் போது
அவிழ்ந்த குடுமியை, 'இந்த நந்தவம்சத்தை ஆட்சியில் இருந்து அகற்றாமல், முடிய
மாட்டேன்' என்று சபதம் போட்டு வெளியேறி, அதை நிறைவேற்றிக் காட்டியவர் அந்த
சாணக்கியர்.
அதுபோல, பழனிசாமியும் சபதம் ஏதும் எடுத்து இருக்கிறாரா... இல்லையே!
தான்
எடுத்த சபதத்தை நிறைவேற்றி, அந்த நந்த வம்சத்தினரை பூண்டோடு ஒழித்துக்
கட்டி, சந்திரகுப்த மவுரியரை ஆட்சி பீடத்தில் அமர வைத்து அழகு பார்த்தவர்
சாணக்கியர்.
அந்த சாணக்கியரின் ஆலோசனைப்படி ஆட்சி நடத்தியதில்,
வரலாற்றில் எப்படி குப்தர்கள் காலம் பொற்காலம் என்று போற்றப்படுகிறதோ,
அதுபோல சந்திரகுப்த மவுரியனின் ஆட்சிகாலமும் பொற்காலம் என்று
புகழப்படுகிறது. 'எப்படி ஆட்சி செய்யப் போகிறாரோ என்று
விமர்சித்தவர்களெல்லாம் வியக்கும் அளவுக்கு, தன் தனித்திறமையால் நான்கரை
ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தார் பழனிசாமி' என்று கதை அளக்கிறார்
அண்ணன் செல்லுார் ராஜு.
சிறப்பான ஆட்சியை பழனிசாமி கொடுத்து
இருந்தால், 2021 சட்டசபை தேர்தலில், தமிழக மக்கள் பழனிசாமியை தோற்கடித்து
விரட்டி அடித்து இருப்பரா என்ன!
நான்கரை ஆண்டுகள் ஆட்சியை
கவிழ்க்காமல் காபந்து பண்ணிக் கொண்டிருந்த மத்திய அரசை ஆண்ட பா.ஜ.,வையே
எடுத்தெறிந்து பேசி, கூட்டணியை விட்டு விலகி எள்ளி நகையாடி, ஏளனம் பேசியவர்
தானே இந்த பழனிசாமி! அவரையா, அந்த வரலாற்று சிறப்பும், பெருமையும் மிக்க
சாணக்கியருடன் ஒப்பிடுகிறார் அண்ணன் செல்லுார் ராஜு?
பா.ஜ.,வின்
கூட்டணியை முறித்துக் கொண்டால், சிறுபான்மையினரின் ஓட்டுகளை, 'லம்ப்'பாக
லவட்டி, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று தப்புக் கணக்கு போட்டு,
ஆட்சியை பறி கொடுத்து மூக்குடைப்பட்டவர் இந்த பழனிசாமி.
நுாறு
ஆண்டுகள் முயன்றாலும் சிறுபான்மையினர் ஓட்டுகளில் ஒரு விழுக்காடு அலகைக்
கூட, அ.தி.மு.க.,வால் கைப்பற்ற முடியாது. சாணக்கியரோடு ஒப்பிட்டு
பேசிவிட்டால், அடுத்து வரும் 2026 தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று
ஆட்சி அமைத்தால், 'கனமான' உள்ளாட்சித் துறை தனக்கு கிடைக்கும் என, நினைத்து
விட்டார் போலும் தெர்மாகோல் ராஜு!
இந்திய அரசியல் நிர்ணய சட்டம்
கூட பின்பற்றும் அர்த்த சாஸ்திரம் என்ற நுாலை நாட்டுக்குத் தந்த மாமேதை
சாணக்கியரின் அரசியல் வரலாறு தெரியாமல், வாய்க்கு வந்தபடி உளறி,
சரித்திரத்தை சிதைக்க முயலாதீர்கள் ராஜு!
புத்தகங்கள் தான் நம்மை பண்பாளனாக்கும்!
ந.தேவதாஸ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: புத்தகங்கள் தான் மிகச் சிறந்த நண்பர்களும் மற்றும் மிகச் சிறந்த பண்புகளை வளர்க்கும் நல்லாசிரியர்களும் என்பது பொதுவான கருத்து.
ஆபிரகாம் லிங்கனுக்கு புத்தகங்களை படிப்பதென்றால் அலாதி பிரியம். அவர் படிப்பதை பார்த்தாலே, அவர் மனைவி மிகவும் கோபமடைவாராம். 'இதை படித்து வாழ்க்கையில் என்ன சாதித்தீர்கள்?
பணம் கிடைத்ததா அல்லது பதவி தான் கிடைத்ததா? ஒன்றுக்கும் பயன் தராத இதைப் படித்து நேரத்தை வீணாக்குகிறீர்களே...' என பொரிந்து தள்ளுவாராம்.
லிங்கனோ மிகவும் அமைதியாக சிரித்தபடியே மனைவியை பார்த்து, 'கோபம் கொள்ளாதே... புத்தகங்கள் எனக்கு பணத்தையோ, பதவியையோ தராவிட்டாலும் இன்று என்னை ஒரு பண்பாளனாக மாற்றி இருக்கிறது. நல்ல மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்பதை தினமும் போதித்துக் கொண்டிருக்கும் சிறந்த ஆசான் இப்புத்தகங்கள்' என்றாராம்.
ஆம், ஒரு மனிதனை சிறந்த பண்பாளனாகவும், வெற்றிப்படிகளை நோக்கி அழைத்து செல்லும் சிறந்த நல்லாசிரியர்களாகவும் விளங்குபவைகள் புத்தகங்கள் தான். வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கும் மந்திரக்கோலை மறைத்து வைத்திருப்பதும் இப்புத்தகங்கள் தான்.
தினமும் நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை வைத்திருந்தால் மனதை ஒருமுகப்படுத்தும் சிறப்பான விஷயத்தை கைக்கொள்ள முடியும். ஆகவே தினமும் நல்ல புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்வோம். ஒரு சிறந்த பண்பாளனாக வாழ்க்கையின் வெற்றியை நோக்கி பீடு நடை போடுவோம்!
கூட்டணி கட்சிகள் மவுனம் ஏன்?
என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணத்தை அதிரடியாக 4.83 சதவீதம் தமிழக மின் வாரியம் உயர்த்தி உள்ளது. மின் வாரியத்தில் ஏற்பட்டுள்ள லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை ஈடு செய்யவே, இத்தகைய கட்டண உயர்வு என்று திராவிட மாடல் அரசு சமாதானம் சொல்லலாம்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் 2.18 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இப்போது கூடுதலாக 2.65 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தியது மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.
அடுத்ததாக, வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்னர், பஸ் கட்டணம், சொத்துவரி, நிலவரி, வணிக வரி, என்று அனைத்து வரிகளையும் திராவிட மாடல் அரசு உயர்த்தினாலும் ஆச்சரியம் இல்லை.
இந்த தி.மு.க., அரசு தற்போது அமல்படுத்தும் இலவச திட்டங்களுக்கு, 'டாஸ்மாக்' கடைகள் வாயிலாக கிடைக்கும் வருவாய் மட்டும் போதாது போலும். இந்த லட்சணத்தில், மாநில அரசு கேட்கும் நிதியை, மத்திய அரசு தராமல், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டையும் எழுப்புகிறது.
எதிர்க்கட்சித் தலைவர்களோ, மின் கட்டண உயர்வை கண்டித்து, வார்த்தைகளில் வசைபாடுவதுடன் நிறுத்திக் கொள்வர். தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கட்சித் தலைவர்கள் வழக்கம் போல மவுனம் சாதிப்பர்.
இதுமாதிரி குறைந்த கட்டண உயர்வுகளால், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி எந்த விதத்திலும் பாதிக்காமல் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று நம்பிக் கொண்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதையும் நாம் பார்க்கத்தான் போகிறோம்.