தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ இரட்டை வேடம் தி.மு.க.,விற்கு கைவந்த கலை!

 இரட்டை வேடம் தி.மு.க.,விற்கு கைவந்த கலை!

 இரட்டை வேடம் தி.மு.க.,விற்கு கைவந்த கலை!


PUBLISHED ON : ஆக 07, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.ராமசாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்துக்கு நீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, ஒரு வார்த்தை கூட பேசாத முதல்வரை, தமிழகம் இப்போது தான் பார்க்கிறது. காவிரியில் தமிழகத்தின் உரிமையை காற்றில் பறக்க விடாமல் தீவிரமாக செயல்படும் வரை, தி.மு.க.,வின் போராட்டம் தொடரும்' என்று கூறியுள்ளார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.

கடந்த 1969 துவங்கி, 2011 வரை தமிழகத்தில் ஐந்து முறை கருணாநிதியும், கடந்த ஐந்தாண்டுகளாக ஸ்டாலினும் தானே ஆட்சியில் இருந்தனர்?

காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை தக்க வைக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?

ஆட்சியில் இருந்தபோது, எந்த துறையில் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போட்டு, கல்லாவை நிரப்புவதில் காலத்தை கடத்தி விட்டு, இப்போது அரசியலுக்கு புதியவர்களான தமிழக வெற்றிக் கழக அரசிடம் காவிரி உரிமையை மீட்கவில்லை என்பது அபத்தமாக இல்லையா?

கடந்த தி.மு.க., ஆட்சியில், காவிரி நீரை திறந்து விட மறுத்து, கர்நாடக அரசு அடம் செய்த போது, அன்று முதல்வராக இருந்த ஸ்டாலின், எத்தனை முறை கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து போராட்டம் நடத்தினார்?

காங்கிரஸ் எம்.பி., ராகுலும், ஸ்டாலினும் 'ஒரு கூட்டு கிளியாக, ஒரு தோப்பு குயிலாக' என்று பாடாத குறையாக பாசப் பயிர் வளர்த்தனரே... ராகுலுடனான நட்பை பயன்படுத்தி, அப்போதே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்டிருக்கலாமே... ஏன் செய்யவில்லை?

இதேபோன்று தான், அ.தி.மு.க., ஆட்சியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட போது, அதை எதிர்த்து ஓலமிட்டது, தி.மு.க.,

அதேநேரம், தங்கள் ஆட்சியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக, விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்தி, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது.

இப்படி ஆட்சியில் இருக்கும்போது அதிகார துஷ்பிரயோகம் செய்வதும், ஆட்சியில் இல்லை என்றால், மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதும், தி.மு.க.,விற்கு கைவந்த கலை.

அவ்வகையில், இப்போது, விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடித்துள்ளார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின். அதை நம்பத்தான் மக்கள் தயாராக இல்லை!

-----

மக்கள் அன்பை பெற்ற நிதித் துறை செயலர்!


முனைவர் சு.பால்ராஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட்டை வாசித்து முடித்த தமிழக நிதி அமைச்சர், நிதிநிலை அறிக்கையை தயாரிக்க உதவிய நிதித்துறை செயலர் சித்திக்கை பாராட்டி, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே, ஆட்சியாளர்கள் தங்கள் துறை அதிகாரிகளின் திறமையான செயல்பாடுகளை வெளிப்படையாக பாராட்ட மாட்டார்கள்; அதுவும், சட்டசபையில் வெளிப் படுத்தவே மாட்டார்கள்.

அவர்களை பொறுத்தவரை எல்லா புகழும் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்று நினைப்பர். அதேநேரம், அத்தகைய பாராட்டுக்கு மிகவும் தகுதி உடையவர் தான், சித்திக்.

தருமபுரியில் கலெக்டராக சித்திக் பணிபுரிந்தபோது, மாவட்ட வனத்துறை அதிகாரியாக இருந்த நான், அவருடன் இணைந்து சில ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

அச்சமயங்களில், மக்கள் பணிகளில் அவர் காட்டிய ஆர்வமும், செயல்பாடுகளும் குறிப்பாக, மலைவாழ் மக்கள் மீது அவர் காட்டிய பரிவையும் கண்டு வியந்துள்ளேன்.

அதனால் தான், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மலைவாழ் மக்களுக்காக அமைக்கப்பட்ட குடியிருப்புக்கு, 'கலெக்டர் சித்திக் குடியிருப்பு' என்று அம்மக்கள் பெயர் வைத்து உள்ளனர்.

இப்படி மக்களின் அன்பை பெற்ற சித்திக், அமைச்சரின் பாராட் டிற்கு மிகவும் தகுதி உடையவரே!

-------

சிக்கன் பிரியாணிக்கு பின் ஒளிந்துள்ள சிக்கல்கள்!


டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: கடும் நிதி நெருக்கடியில் தான், சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர்.

நிதி பற்றாக்குறை காரணமாக, மாவட்டத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு, மாநகராட்சி வாகனங்கள் வாயிலாக அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன.

கடந்த 1976ல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்., இத்திட்டத்தை விரிவுபடுத்த நினைத்தார். அதற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில், 'அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சமையல் கூடம் அமைத்து, சமையல்காரர் மற்றும் கண்காணிப்பு பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

'மளிகை மற்றும் மாணவர்கள் உபயோகிக்க தட்டு, டம்ளர் போன்ற பொருட்களை வாங்கி, பள்ளிகளில் சேமித்து வைக்க வேண்டும். மாணவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகள், முதியோருக்கும் வாரம் முழுதும் உணவு வழங்க வேண்டும்' என்று, தன் மனதில் உள்ள திட்டத்தைக் கூறினார், எம்.ஜி.ஆர்.,

அதற்கு அப்போதைய கல்வித்துறை செயலர்வேங்கட சுப்பிரமணியம், 'முதல்வரின் ஆலோசனை நல்ல விஷயம்தான்; அதற்குரியநிதி வசதி அரசிடம் இல்லையே...' என்றார்.

உடனே எம்.ஜி.ஆர்., நிதியமைச்சர் நெடுஞ்செழியன் தலைமையிலான, 34 பேர் அடங்கிய உயர்மட்டக் குழு உறுப்பினர்களின் பட்டியலை வழங்கி, 'நீங்கள் கேட்ட நிதி வசதியை இந்த பட்டியலில் உள்ளவர்கள் வழங்குவர்' என்றார்.

பட்டியலை வாங்கிப் பார்த்த வேங்கட சுப்பிரமணியத்திற்கு இன்ப அதிர்ச்சி! காரணம், அப்பட்டியலில் செல்வந்தர்கள் பலரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

இப்படி கடும் நிதி நெருக்கடியிலும், அரசுக்கு கடன் சுமை இல்லாமல், 1982ல் இத்திட்டத்தை செயல்படுத்தினார், எம்.ஜி.ஆர்.,

அவ்வகையில், தற்போது, த.வெ.க., அரசும் பள்ளி மாணவ - மாணவியருக்கு சிக்கன் பிரியாணி வழங்க நினைக்கிறது, வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்!

அதேநேரம், காமராஜர், எம்.ஜி.ஆர்., காலங்களை விட, அதிக நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் தமிழகம் தள்ளாடிக் கொண்டு இருப்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், பள்ளிகளில் சிக்கன் பிரியாணி போடுவதால், மாணவர்கள் தின்று போடும் எலும்புகளுக்காக தெரு நாய்கள், பூனைகள் பள்ளிகளுக்குள் தஞ்சம் அடையும். எலும்புகளை கடிக்கும் நாய்கள், மாணவர்களின் ரத்தத்தையும் ருசி பார்க்கும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சமீபத்தில் முதல்வர் விஜயின் பா-துகாப்பு போலீசார், பல்லி விழுந்த சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு வாந்தி, மயக்கம் போட்டு விழுந்ததைப் போல், பள்ளி களில் சர்வ சாதாரணமாக நடக்கும்.

தப்பி தவறி கெட்டுப் போன இறைச்சியில் உணவு தயாரிக்கப்பட்டு இருந்தால், உயிரிழப்புகள் ஏற்படும். எனவே, சிக்கன் பிரியாணிக்கு பின் உள்ள சிக்கல்களை எல்லாம் தீர ஆலோசித்த பின், முதல்வர் முடிவுக்கு வருவது நல்லது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us