தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/அணைகளை தனியாரே துார்வாரலாமே!

அணைகளை தனியாரே துார்வாரலாமே!

அணைகளை தனியாரே துார்வாரலாமே!


PUBLISHED ON : ஜூலை 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 28, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரெ.ஆத்மநாதன், புளோரிடா, அமெரிக்காவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேட்டூர் அணை துார்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதென்றும், அதன் கொள்ளளவு கணிசமான அளவுக்கு குறைந்து விட்டதென்றும், நீர் வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

அணையில் நீர்மட்டம் குறைந்துள்ள இந்த நேரத்தில், தனியார் அமைப்புகள் மற்றும் விவசாயிகளுடன் அரசு கை கோர்த்தால், மேட்டூர் அணை விரைவாகவே துார்வாரப்பட்டு விடும்.

ஒவ்வொரு ஆண்டும் நீருக்காக கர்நாடக அரசுடன் போராடும் தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களை துார்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுப்பதில்லை.

அகண்ட காவிரியில் ஆங்காங்கே தடுப்பணைகள் அமைத்தாலே போதும்; நீரை தேக்கி வைத்து, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தலாம்.

அதேபோன்று, மழைக்காலங்களில், பல்லாயிரக்கணக்கான கன அடி நீர், வீணாகக் கடலில் கலப்பது குறித்து தமிழக அரசு கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும், அணைகளும் முறையாக துார்வாரப்பட்டு சரியாக பராமரிக்கப்பட்டிருந்தாலே, இன்று நீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டு இருக்காது.

புதிய அரசாவது, வறண்டு கிடக்கும் அனைத்து நீர்நிலைகளையும் உடனடியாக துார்வாரி, வரும் மழைக்காலத்தில் கிடைக்கிற நீரை தேக்கி வைக்க, போர்க்கால அடிப்படையில் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்!

கையில் இருக்கும் களாக்காயை அலட்சியப்படுத்தி விட்டு, உச்சியில் இருக்கும் பலாக்காய் எப்போது விழும் என்று கையேந்தி காத்திருக்க வேண்டாமே!

------

வீண் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்!


முனைவர் ரா.சந்திரசேகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ் மொழியில், பிற மொழி சொற்கள் அதிகமாகக் கலப்பதால், தமிழின் தனித்தன்மை குறைந்து போவதாகவும், துாய தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்து போவதாகவும், அதனால், 'ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ' போன்ற கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று, தமிழ் ஆர்வலர்கள் சிலர் கூறுகின்றனர்.

தமிழக மக்களின், 90 சதவீத பெயர்கள் பிற மொழி சொற்களில் தான் உள்ளன. இந்த வடமொழி மற்றும் பிறமொழி சொற்களை துல்லியமாக உச்சரிக்க, கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவது, காலத்தின் கட்டாயம்!

பார்லிமென்ட்டில், 'வெள்ளி நாக்கு வித்தகர்' என்று புகழப்பட்ட வி.எஸ்.ஸ்ரீநிவாஸ சாஸ்திரி, விடுதலைப் போராட்ட வீரர்களான ஸ்ரீ அரவிந்தர், லக்ஷ்மி சாகல், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, மூதறிஞர் ராஜாஜி போன்ற ஆளுமைகளின் பெயர்களையோ அல்லது 'ஆக்ஸிஜன், ஹைட்ரஜன்' போன்ற அறிவியல் கலைச்சொற்களையோ, ஜனவரி, ஆகஸ்ட் போன்ற மாதங்களின் பெயர்களையோ கிரந்த எழுத்துக்கள் இன்றி எழுத முயலும்போது, அவற்றின் அசல் உச்சரிப்பு முற்றிலும் சிதைந்துவிடும்.

இது தேவையற்ற குழப்பங்களை உருவாக்குவதோடு, தமிழ் வழியில் கற்போரின் உச்சரிப்பு திறனையும் பலவீனப்படுத்தும்.

கிரந்த எழுத்துக்களை தமிழை அழிக்கும் கருவி என்கின்றனர். ஆனால், அவை, பல நுாற்றாண்டுகளாக தமிழ் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் தடையின்றி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

தமிழ் மொழியின் இலக்கண வரம்பிற்குள் நின்று, உலகளாவிய பெயர்களை அதன் தனித்துவம் மாறாமல் ஒலிப்பதற்கு, இந்த எழுத்துக்கள் ஒரு பாலமாக செயல்படுகின்றனவே தவிர, தமிழ் மொழியின் துாய்மைக்கோ, தனித்துவத்திற்கோ இந்த எழுத்துக்களால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை.

மேலும், சரியான உச்சரிப்பிற்காக, கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தும் போது, அது மொழியின் வளர்ச்சிக்குத் தான் பயன்படுமே அன்றி, தமிழை அழிக்காது.

'எங்களுக்கு தமிழ் மீது ஆர்வம்' எனச் சொல்லி, தமிழறிஞர் என்ற பட்டமெல்லாம் சூட்டிக் கொண்டு, இந்தியாவில் மெதுவாக ஆங்கிலத்தை நுழைத்து வெற்றி கண்ட ஆங்கிலேயர் தான் இத்தகைய சிந்தனைகளுக்கு சூத்திரதாரி.

ஏனெனில், தமிழை ஒழித்துக்கட்டும் நோக்கில், அவர்கள் நம்மை மூளைச் சலவை செய்ய இதுபோன்ற, 'ஷ, ஸ, ஹ, ஸ்ரீ' போன்ற எழுத்துக்களை தான், துாண்டுகோலாக பயன்படுத்தி இருக்க வேண்டும்.

எனவே, மக்களிடம் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்களின் பேச்சுக்கு, நாம் செவி சாய்க்க வேண்டியதில்லை!

--------

பட்ஜெட்டில் எதிரொலிக்குமா?


எல்.ரவி, செ.புதுார், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக அரசின் முதல், 'பட்ஜெட்' அடுத்த மாதம் முதல் வாரத்தில் சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கிறது.

இந்நிலையில், அரசுக்கு சில வேண்டுகோள்:

அரசின் சலுகை திட்டங்களும், கடனுதவிகளும் காலங்காலமாக ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு மட்டுமே சென்று கொண்டிருக்கின்றன. அதை மாற்றி, ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும், அரசின் அனைத்து சலுகைகளும் சமமாக போய் சேர வழி செய்ய வேண்டும்.

* அரசு காலி பணியிடங்களில் தகுதியான இளைஞர்களை உடனடியாக பணி நியமனம் செய்து, அவர்கள் பாதை மாறுவதை தடுக்க வேண்டும்

* அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால், அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்

* அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கும், 60 வயதை கடந்த மகளிருக்கும் மட்டுமே இலவச பேருந்து பயணம் என்பதை அறிவிக்க வேண்டும்; அத்துடன், 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் அரசு துவக்கப் பள்ளிகளை மூடி, அம்மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க வேண்டும். இதனால் ஆசிரியர்களின் ஊதியம் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் அரசு கஜானாவில் சேரும்!

* மழை இன்றி வானம் பொய்த்துப் போனதால், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மாற்று வருமானத்திற்கு வழி ஏற்படுத்த வேண்டும்

* உணவுப்பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்றாலும், தரமற்ற கலப்பட பொருட்களை விற்றாலும், கடுமையான தண்டனை வழங்கி, கடைகளுக்கு 'சீல்' வைக்க வேண்டும்

* கோவில் சொத்துக்களை, பழுதடைந்த கோவில்களை புனரமைக்கவும், அக்கோவில்களில் பூஜைகள் நடத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவையெல்லாம் முதல்வர் விஜயின் முதல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, அவற்றை நனவாக்க வேண்டும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us