PUBLISHED ON : நவ 23, 2026 12:00 AM

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழகத்தில், தீபாவளி பண்டிகையை ஒட்டி, இரண்டு நாட்களில், 441 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.
இது தொடர்பான நிருபர்களின் கேள்விக்கு, ‘மது விற்பனை அதிகரிப்பது சாதனை அல்ல; வெட்கப்பட வேண்டிய விஷயம். வரும் காலங்களில் மதுவால் ஏற்படும் தீமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, மது விற்பனை கட்டுப்படுத்தப்படும். 234 தொகுதிகளிலும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும்’ என்று கூறியுள்ளார், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ்.
மது அருந்துவோரால் குற்றச்சம்பவங்கள் மட்டுமல்ல; சாலை விபத்துகளும், தனி மனித உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன் காரணமாக, இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது; குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.
இதெல்லாம் அரசுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், ‘மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு’ என்று மதுபாட்டிலில் கடமைக்கு அச்சிடுகிறது.
அதேநேரம், மது வாயிலாக கிடைக்கும் வருமானத்திற்காக, மக்கள் நலனை புறக்கணித்து, அவர்களின் எதிர்காலத்தை அடகு வைத்து, மதுவை விற்பனை செய்கிறது, அரசு.
‘மக்கள் எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன...’ என்ற எண்ணத்தில், மதுவை விற்றுக் கொண்டே, மறுபுறம் மக்கள் நலனில் அதிக அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ள, 234 தொகுதிகளிலும் போதை மறுவாழ்வு மையங்களை திறக்கப் போவதாக கூறுவது, பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது போல் உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து, ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. அதனால், தமிழகத்தில் போதை கலாசாரம் வளர்ந்துள்ளதற்கு திராவிட கட்சிகளின் ஆட்சிகள் தான் காரணமே தவிர, த.வெ.க., அரசை குற்றஞ்சாட்ட முடியாது.
அதேநேரம், திராவிட கட்சிகளின் மீது விழுந்துள்ள இந்த கரும்புள்ளி, த.வெ.க., மீதும் விழக் கூடாது என்றால், போதை மறுவாழ்வு மையங்களை திறப்பதை விட, மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து, ஆட்சிக்காலம் முடிவதற்குள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த, த.வெ.க., அரசு முன்வர வேண்டும்!
lll
