/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
லஞ்சம் கொடுத்தாலும் தண்டனை தரணும்!
/
லஞ்சம் கொடுத்தாலும் தண்டனை தரணும்!
PUBLISHED ON : ஜன 09, 2024 12:00 AM
ந.தேவதாஸ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: நம் அண்டை நாடான சீனாவில், அதிபர் ஷீ ஜின் பிங் தலைமையிலான, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவர் அதிபராக பதவியேற்ற 2012 முதல், ஊழலுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், சீனாவில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை வழங்கும் வகையில், குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது.
சமீபத்தில், இச்சட்டம் அந்நாட்டு பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டப்படி, முக்கியமான தேசிய திட்டங்களில் ஊழலில் ஈடுபடும் கட்சிகளுக்கும் கடுமையான தண்டனை தரப்பட உள்ளது.
மேலும் நிர்வாகம், நீதித்துறை ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள், மற்றும் நிதி, சுகாதாரம், உணவு, கல்வி போன்ற துறைகளில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கும், கடுமையான தண்டனை வழங்கப்பட உள்ளது.
இச்சட்டத்தை, தற்போது லஞ்ச ஊழலில் புரையோடிப் போன நம் நாட்டிலும் உடனடியாக அமல்படுத்த வேண்டிய மிக அவசர, அவசியமாகும். குறிப்பாக, தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் தலை விரித்தாடுகிறது.
தற்போதுள்ள ஊழல் தடுப்பு சட்டம் என்பது கண்ணுக்கு தெரியாத சட்டமாகவே இயங்கி வருகிறது. இதனால், சகல துறைகளிலும் ஊழல் தாண்டவமாடுகிறது. இதை முற்றிலுமாக ஒழிக்க ஒரே வழி...
தற்போது சீனாவில் அமல்படுத்தப்பட்டதை போன்று, நம் நாட்டிலும் இச்சட்டம் அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தான். குற்றம் செய்தவரை விட, குற்றம் செய்ய துாண்டியவருக்கே அதிக தண்டனை தரப்பட வேண்டும் என்கிறது சட்டம்.
அந்த வகையில், தங்கள் வேலை சீக்கிரம் முடிய வேண்டும் அல்லது விதிகளை மீறி, தங்களது காரியத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான மக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தாங்களாக முன்வந்தே லஞ்சம் கொடுக்கின்றனர்.
இதனால், இவர்களுக்கும் தண்டனை என்று சட்டம் கொண்டு வந்தாலே, நம் நாட்டில், 90 சதவீதம் அளவுக்கு லஞ்சம், ஊழலை ஒழித்து விட முடியும். இதன் வாயிலாக, நம் நாடு பொருளாதாரத்தில் இன்னும் பீடுநடை போடும் என்பதிலும், மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் வேண்டும்!
ரெ.ஆத்மநாதன், டாம்பா, புளோரிடா மாகாணம், அமெரிக்காவில் இருந்து அனுப்பிய,
'இ - மெயில்' கடிதம்: இதோ, அதோ என்று இழுத்தடிக்கப்பட்ட கிளாம்பாக்கம்
பேருந்து நிலையம், ஒரு வழியாக திறப்பு விழா கண்டதில் அனைவருக்கும்
மகிழ்ச்சி. 393 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த நவீன பஸ்
நிலையத்தில், தினமும் 2,000 பேருந்துகளுக்கு மேல் வந்து செல்லும் வசதி
உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உள்கட்டமைப்பு, திரிசூலம் விமான
நிலையத்தை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. டிராலி வசதி உள்ளதால்,
ஏர்போர்ட்டையே ஞாபகப்படுத்துகிறது. தாய்மார்கள், குழந்தைகளுக்கு பாலுாட்ட
தனி அறைகள் அமைக்கப்பட்டது பாராட்டுக்குரியது. எஸ்கலேட்டர், முதல் தளம்,
தரைதளம், அடித்தளம்- 1 மற்றும் அடித்தளம் -2 என, பிரமாண்டமாகவே உள்ளது.
தென்
தமிழகம் செல்லும் பேருந்துகளை இங்கிருந்து இயக்குவதுடன், வடக்கு, மேற்கு
மற்றும் வடமேற்கு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை, தொடர்ந்து கோயம்பேடு
பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்க வேண்டும். அப்போது தான், போக்குவரத்து
நெரிசலுக்கு தீர்வு காண முடியும்.
கிளாம்பாக்கத்தில் இருந்து, 10
நிமிட இடைவெளியில், நகரின் முக்கிய இடங்களுக்கு டவுன் பஸ்களை இயக்குவதாக
கூறியதை அப்படியே சாத்தியப்படுத்தினால், பயணியர் சிரமமின்றி சென்று வர
முடியும்.
வண்டலுார், ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கம் ரயில்
நிலையம் அமைத்து, அங்கிருந்து மேம்பாலம் வாயிலாக, பேருந்து நிலையத்தை
இணைக்க ஏற்பாடுகள் நடப்பதாக கூறியது குறித்தான செய்திகள் ஏதும் தற்போது
காணவில்லை.
இது குறித்து, மத்திய அரசுடன் பேசி, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கிளாம்பாக்கம்,
கோயம்பேடு பேருந்து நிலையங்கள், முறையான பராமரிப்புடன் சிறப்பாக செயல்பட
அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணிகள் முடிந்தால்
தான் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பயணியர் இனிதான பயணத்தை மேற்கொள்ள
முடியும்.
பானையில் ஒரு சோறு மதிவதனி!
எஸ்.ராமகிருஷ்ணன்,
கே.கே.புதுார், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹிந்தி
பயில்வதற்கு தமிழக மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பதற்கான உதாரணம் தான்,
பிரதமர் மோடி திருச்சி வந்தபோது, துவாரகா மதிவதனி என்ற சிறுமி, 'அரசு
பள்ளிகளில் ஹிந்தி பயிற்றுவிக்க வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய அட்டையை,
ஏந்திய நிகழ்வு.
அரசியலுக்காக மட்டும், 'ஹிந்தி எதிர்ப்பு' நாடகம்
போடும் திராவிடக் கட்சியினர், தங்களின் சாதகமான செயல்பாடுகளுக்கு வசதியாக,
அந்த நாடகத்தை அவ்வப்போது மறந்து விடுவர்.
திராவிடக் கட்சிகளின்,
முன்னாள் இந்நாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,-க்கள் நடத்தும்
பள்ளிகளில், ஹிந்தி கற்பிப்பதில், இவர்களுக்கு எந்த தயக்கமும் கிடையாது.
தயாநிதி
மாறனை மத்திய அமைச்சர் ஆக்குவதில், கருணாநிதி எவ்வளவு தீவிரம் காட்டினார்
என்பதை நாடறியும். அதற்கு அவர் கூறிய காரணம், தயாநிதிக்கு ஹிந்தி பேசத்
தெரியும் என்பது தான்.
ஓட்டு அரசியலுக்காக, ஹிந்தியை எதிர்க்கின்றனர் என்பதை, மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.
வேறு
எந்த மாநிலத்தவரும், ஹிந்தி பயில்வதால் தங்கள் தாய் மொழி அழியும் என்று
நினைக்க வில்லை. தாராளமாக ஹிந்தி கற்கின்றனர்; ஹிந்தி மொழி புழங்கும் பிற
மாநிலங்களுக்கும் சென்று சம்பாதிக்கின்றனர்.
தமிழக மக்கள் தமிழ்,
ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியும் கற்றுக் கொள்ளக் கூடாது என்பதில்
திராவிடக் கட்சிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன.
'செப்புமொழி
18 உடையாள்; எனினும் சிந்தனை ஒன்றுடையாள்' என, மகாகவி பாரதியார் பாடியதை,
இளம் சமுதாயத்தினர் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
அதாவது, '18
மொழிகளில் புலமை பெற்றாலும், இந்தியர் என்ற உணர்வு கொண்டவர்கள் நாம்' என,
பாரதி சொன்னது போல வாழத் தான் மதிவதனி ஆசைப்படுகிறார்.
ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்ற சொலவடையில், ஒரு சோறு மதிவதனி. இதை, திராவிடக் கட்சியினர் புரிந்து கொள்வது அவசியம்!