PUBLISHED ON : செப் 24, 2026 01:46 AM

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சி, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, 'கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களை குழப்புகின்றனர்' என்று கூறியுள்ளார், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர், அன்புமணி. 'கவர்னர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்றுதான், த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம்; அதேநேரம், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களான மரகதம் குமரவேல், சத்யபாமா தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவது, ஓட்டளித்த மக்களுக்கு எதிரான செயல்; இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இடைத்தேர்தலை புறக்கணித்து, ஓட்டு உரிமையை தடுப்பதை எங்கள் கட்சி விரும்பவில்லை' என்று தெளிவாகவே கூறிவிட்டனர், கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர்கள்.
இதில் அன்புமணிக்கு என்ன குழப்பம்? இவர்தான் மக்களை குழப்பும் விதமாக, 'மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை' என்று, அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
மரகதம் குமரவேல் தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த போது, 'தனக்கு ஓட்டு போட்ட மக்களை, 10 நாட்களில் புறக்கணித்த மரகதம் குமரவேலுவை தோற்கடிப்பேன்' என்று சொன்ன அன்புமணி, இப்போது தன் நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்!
ஒன்று, தன் கட்சி வேட்பாளர்களை களத்தில் நிற்க வைத்திருக்க வேண்டும்; இல்லையென்றால், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி, ஆளும், த.வெ.க., அரசுக்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். இப்படி எதுவுமே இல்லாமல், இடைதேர்தலை புறக்கணித்து, தன் கட்சியினரை ஓட்டு போட விடாமல் தடுப்பதுதான், அன்புமணியின் ஜனநாயக கடமையா?
முன்பு ஒருமுறை, 34 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் ராஜ்யசபா எம்.பி., ஆனார், அன்புமணி. தற்போதும் அதேபோன்று தான், எம்.பி., ஆகியுள்ளார்.
பெற்ற தந்தையே அன்புமணியை புறக்கணித்தபோது, அவரை ஆதரித்தது, அ.தி.மு.க., தான்!
ஆனால், இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வை ஆதரிக்க மனம் இல்லாமல், கம்யூனிஸ்ட்களை குறை கூறிக்கொண்டிருக்கிறார், அன்புமணி.
அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாகத் தான் உள்ளனர். அன்புமணி தான், ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைத்து நிலை தடுமாறுகிறார்!
அன்புமணியின் இந்த தடுமாற்றத்திற்கு காரணம் என்ன... வெளிப்படையாக அறிவிப்பாரா?
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது!
சொ.முத்துசாமி, பாளையங்கோட்டை, நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பிரிக்ஸ்' மாநாடு நடந்த செப்., 12, 13, 14, மூன்று நாட்களும் உலகத்தின் பார்வை, இந்தியாவின் மீது தான்!
குறிப்பாக, பிரதமர் மோடியின் மீது தான்!
சீன அதிபர் ஷீ ஜின்பிங் முதல் ரஷ்யா அதிபர் புதின், ஈரானின் மசூத் பெசஷ் கியான், வியட்நாமின் லீ மின் ஹங், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் வரை, மொத்தம், 17 நாடுகளின் பிரதிநிதிகள்!
அனைவரும் ஒரே நாளில், ஒரே இடத்தில் டில்லியில் சங்கமம்!
மாநாட்டிற்கு வருகை தந்த உலகத் தலைவர்களை வரவேற்பதில் இருந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு, ஒன்பது பொருட்கள் அடங்கிய சிறப்புப் பரிசு பை வழங்கியது வரை, மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்ததை, பாராட்டாமல் இருக்க முடியாது.
இவை எல்லாவற்றையும் விட சிறப்பான விஷயம், மாநாட்டின், 'ஏக மனதான கூட்டுப் பிரகடனம்' தான்!
எதிரும், புதிருமான கொள்கை கொண்டவர்கள் பங்கேற்கும் மாநாட்டில், எல்லாருக்கும் பொதுவான கூட்டுப் பிரகடனம் வெளிவருமா என்ற சந்தேகம் இருந்த நிலையில், உலக நாடுகளே வியக்கும் வண்ணம் ஏக மனதான கூட்டுப் பிரகடனம் வெளி வந்தது!
இதை, இந்தியாவின் ராஜ தந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று, இன்று உலகமே கொண்டாடுகிறது; மாநாட்டின் உண்மையான வெற்றியும் இதில் தான் அடங்கி உள்ளது!
பிரதமர் மோடியின், 'நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல; அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையுடன் முன்னேறுவதே நம் நோக்கம்' என்ற மாநாட்டு உரையை, 'தினமலர்' நாளிதழில் படித்த போது, 'யாரோடும் பகை கொள்ளான் என்றபின், போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது' என்ற கம்பரின் வரிகள் தான் மனத்தில் தோன்றியது!
வாழ்க பாரதம்!
வரிப்பணத்தை விரயம் செய்ய வேண்டாமே!
அ.குணா, கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இரு திராவிடக் கட்சிகளின் ஊழல் ஆட்சி மற்றும் வீண் ஆடம்பரத்தால் எரிச்சலுற்று, ஒரு மாற்றத்திற்கான அரசாக, தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர்.
ஆனால், சமீபத்தில், முதல்வர் விஜய் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விட மேட்டூர் சென்றபோது, இரும்பு தடுப்பு வேலிகள் உட்பட பாதுகாப்பு பணிக்காகவே பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. கூடவே, 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்ட போவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, தமிழக அரசு கிட்டத்தட்ட, 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கும் நிலையில், 1,200 கோடி ரூபாயில் தலைமை செயலகம் தேவையா?
த.வெ.க., ஆட்சியில் அமர்ந்து, 100 நாட்களைத் தான் கடந்துள்ளது. இந்நிலையில், முதலில் மாநிலத்திற்கு என்ன தேவை என்ற புரிதல் முதல்வருக்கு வேண்டும்.
மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் ஆடம்பர செலவுகளை பின்னுக்கு தள்ளி, மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
'வீ த லீடர்ஸ்' தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது போல், முதலீடுகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு பதில், உள்ளூர் தொழில் முனைவோரை சந்தித்து, அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, அவர்களை ஊக்கப்படுத்தினால், தமிழகத்தின் பொருளாதாரம் மட்டுமல்ல; வேலை வாய்ப்பும் உயரும்!
முதல்வர், அவரது கொள்கை தலைவர்களில் ஒருவரான காமராஜர் வழியில், மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யாமல் ஆட்சி செய்ய வேண்டும்.
அதுவே மக்களின் எதிர்பார்ப்பு!
