தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ பொறியியல் மாணவர்களின் எதிர்காலம் சிறக்க...

 பொறியியல் மாணவர்களின் எதிர்காலம் சிறக்க...

 பொறியியல் மாணவர்களின் எதிர்காலம் சிறக்க...


PUBLISHED ON : செப் 25, 2026 02:13 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 25, 2026 02:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சி.சுருதி, செங்கோட்டை, தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிக்கும் மாணவ- - மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறைந்து வருவதால், எத்தனை கல்லுாரிகளில் மோசமான தேர்ச்சி உள்ளது என்பதை கண்டறிய, ஆய்வு செய்யப் போவதாக, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலையின் கீழ், 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் தரமான கல்லுாரிகளா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை!

தரமான கல்வியை வழங்கும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் படிப்பை முடிப்பதற்கு முன்பே நல்ல நிறுவனங்களில், நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்து விடுகிறது.

ஆனால், போதுமான ஆசிரியர்கள் கூட இல்லாத நிலையில் நடத்தப்படும் கல்லுாரிகளில் பல லட்சம் ரூபாயை செலவிட்டு படித்து, பொறியாளர் பட்டம் பெறுவோர், மிகவும் குறைந்த சம்பளத்திற்கு, கிடைத்த வேலைகளை செய்து வருகின்றனர்.

இந்த அவல நிலைக்கு காரணம், தரமில்லாத கல்வியை வழங்கி, பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் சுயநிதி கல்லுாரிகள் தான்!

இப்போதும் கூட, 24 பொறியியல் கல்லுாரிகளில் படித்த, 2,425 மாணவர்கள், 2021 முதல் 2025 வரையிலான கல்வியாண்டுகளில் நடைபெற்ற பருவத் தேர்வுகள் ஒன்றில் கூட தேர்ச்சி பெறவில்லை என்று தகவல் வந்துள்ளது. சில கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளதாம்!

எனவே, தரமான கல்வியை வழங்கும் கல்லுாரிகளை ஊக்கப்படுத்த வேண்டும். அதேபோன்று, பண பலம், அரசியல் பலத்திற்கு அடிபணியாமல், போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத, தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இல்லாத, தேர்ச்சி விகிதம் குறைந்த கல்லுாரிகளை இழுத்து மூடவும் அண்ணா பல்கலை முன்வர வேண்டும்.

அப்படிச் செய்தால், பொறியியல் கல்வியின் தரமும் உயரும்; மாணவர் களின் எதிர்காலமும் சிறக்கும்!

இடைநிற்றல் குறையும்!


முனைவர் சே.சுப்பிரமணி, பெரியகுளம், தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல், இடையில் விலகிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, தமிழக பள்ளிக் கல்வித் துறை.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த எத்தனையோ காரணங்கள் உண்டு. வறுமையின் காரணமாக, சிலர் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர் என்றால், இன்னும் சிலருக்கு பெற்றோர் வேலைக்காக இடம் பெயர்வதால் அவர்களது கல்வி தடைபடுகிறது.

குறிப்பாக, கிராமப்புறங்களில் போக்குவரத்து வசதியின்மை, குடும்பப் பொறுப்புகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லாமை போன்ற காரணங்களால் பலர் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர்.

ஒரு மாணவன் பள்ளியை விட்டு இடையில் வெளியேறும்போது, அவன் கல்வியை மட்டும் இழப்பதில்லை; அவனுடைய வளமான எதிர்காலத்தையும் சேர்த்து இழக்கிறான்!

கல்வியறிவு இல்லாத தலைமுறை உருவாகும்போது, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், சமூக சமத்துவம் என அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.

அதனால், மனிதன் வாழ்வதற்கு உணவு எவ்வளவு அவசியமோ, கல்வியும் அந்த அளவுக்கு முக்கியமானது.

இதை உணர்ந்து தான், பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்களை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது, பள்ளிக்கல்வித் துறை.

அதேநேரம், இடை நிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் போது, கற்றலில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்பும் வகையில், சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

அவர்களின் வயதுக்கும், கற்கும் திறனுக்கும் ஏற்ற வகையில், பாடத்திட்டங்களை எளிமைப்படுத்த வேண்டும். கூடவே, இத்தகைய மாணவர்களுக்கு கற்பிக்கும் போது, ஆசிரியர்களுக்கு அன்பும், பொறுமையும், சமூக பொறுப்பும் மிகவும் அவசியம்.

பள்ளிக்கு திரும்பிய மாணவன், மற்றவர்களைவிட தான் பின்தங்கியவன் என்ற எண்ணம் ஏற்படாத வகையில், ஆசிரியர்கள் அவர்களை சக மாணவர்கள் மத்தியில் ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தால், மாணவர்களும் அவர்களது வயதை, கல்வியில் ஏற்படும் தேக்கத்தை கேலி செய்யாமல், அவர்களை தங்களுக்குள் ஒருவராக இணைத்துக் கொள்வர்.

அதேபோன்று, பெற்றோரின் பங்களிப்பும் இதில் முக்கியமானது. தங்கள் பிள்ளை, பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்வதுடன், வீட்டில் படிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்.

மொத்தத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் பெற்றோர் இணைந்து செயல்பட்டால், தமிழகத்தில் பள்ளி இடைநிற்றலை முழுதுமாவே நிறுத்த முடியும்!

பழைய முறையை அரசு பரிசீலிக்குமா?


என்.பாடலீஸ்வரன், திருவேற்காடு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் தற்போது, டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், கொசுக்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள் கலந்த புகையை தெருக்களில் அடிக்கின்றனர், மாநகராட்சி ஊழியர்கள்.

புகை அடிப்பதன் வாயிலாக, வெளியில் நடமாடும் கொசுக்களை வேண்டுமானால், ஓரளவு கட்டுப்படுத்தலாம்; ஆனால், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதை, இப்புகையினால் கட்டுப்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை.

முன்பெல்லாம், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த, கழிவுநீர் கால்வாய்கள், தண்ணீர் தேங்கும் இடங்கள் மற்றும் வீட்டு தோட்டங்களில் தெளிப்பான்களை பயன்படுத்தி, மருந்தை, 'ஸ்பிரே' செய்வர்.

அதனால் கொசுக்களை, முட்டை பருவத்திலேயே அழித்து, கொசு உற்பத்தியை பெருமளவு கட்டுப்படுத்தினர். தற்போது, அந்த முறை முழுமையாக கைவிடப்பட்டு, புகை மட்டுமே அடிக்கப்படுகிறது.

கொசு உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே தடுக்க, பழைய முறையான தெளிப்பான்கள் வாயிலாக கொசு மருந்து தெளிப்பது குறித்து, அரசு ஆலோசனை செய்ய வேண்டும்.

அதன்வாயிலாக, ஆரம்ப கட்டத்திலேயே கொசு உற்பத்தியை தடுத்து, டெங்கு, மலேரியா போன்ற கொடிய நோய்களிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும்!

அரசு பழைய முறையை பரிசீலிக்குமா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us