PUBLISHED ON : செப் 26, 2026 01:15 AM

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்தியா முழுதும் இயங்கிக் கொண்டிருக்கும் நவோதயா பள்ளிகள், தமிழகத்திற்கு மட்டும் தேவையில்லை என்று தன்னிச்சையாக எப்படிக் கூற முடியும்?' என்று, தமிழக அரசைப் பார்த்து கேள்வி எழுப்பி உள்ளது, உச்ச நீதிமன்றம்.
தமிழகத்தில் ஹிந்தி நுழைந்துவிட்டால், தமிழ் மொழியின் தனித்துவம் குறைந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டி மக்களை முட்டாளாக்கி வருகின்றனர், திராவிடக் கட்சியினர்.
அண்டை மாநிலங்களான கேரளாவில், 14 நவோதயா பள்ளிகளும், கர்நாடகாவில் 31, ஆந்திராவில், 15 நவோதயா பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி களெல் லாம் அழிந்து விட்டதா என்ன?
கடந்த 2014- பார்லிமென்ட் தேர்தலின் போது, மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட, தி.மு.க., - எம்.பி., தயாநிதி மாறனை வடமாநிலத்தை சேர்ந்த மார்வாடி போல் புகைப்படம் எடுத்து, 'மாறன் கோ வோட் தேங்' என்று ஹிந்தியில் போஸ்டர் அடித்து ஒட்டி, வடமாநில வாக்காளர்களிடம் ஓட்டு கேட்க, தி.மு.க.,விற்கு ஹிந்தி தேவைப்பட்டது.
'மாறனுக்கு ஹிந்தி தெரியும்; அமைச்சர் பதவி கொடுத்தால், பார்லிமென்டையே கலக்கிவிடுவார்' என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ஏமாற்றி அமைச்சர் பதவியைப் பெறுவதற்கு கருணாநிதிக்கு ஹிந்தி தேவைப்பட்டது.
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியைக் கழற்றி, மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக வடமாநில அரசியல் கட்சித் தலைவர்களிடம் பேச்சு நடத்த, தி.மு.க., - எம்.பி., கனிமொழிக்கு ஹிந்தி தேவைப்படுகிறது.
தி.மு.க.,வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்க, பாடத்திட்டத்தில் ஹிந்தி தேவைப்படுகிறது; ஆனால், தமிழகத்தில் உள்ள கிராமத்து ஏழை மாணவர்கள் நவோதயா பள்ளியில் ஹிந்தி படித்து விடக் கூடாது.
என்னே... தி.மு.க.,வின் தில்லாலங்கடி மொழிக் கொள்கை!
கடந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில், லஞ்சம், ஊழல் முறைகேடுகளுடன், மூன்று பெரிய இமாலயத் தவறுகள் நடந்தன. அவை, நெல் சேமிப்பு கிடங்குகளை முறையாகப் பராமரிக்காமல் அலட்சியம் செய்தது; தமிழகமெங்கும் பரவிக் கிடக்கும் கருவேல மரங்களை அகற்ற அக்கறை காட்டாமல் இருந்தது; நவோதயா பள்ளிகளை வரவிடாமல் தடுத்தது!
மக்களின் அதிருப்தியை தி.மு.க., சம்பாதிக்க, இந்த மூன்று தவறுகளும் ஒருகாரணம்.
எனவே, தமிழக வெற்றிக் கழக அரசு, இந்த மூன்று தவறுகள் இந்த ஆட்சியிலும் நீடிக்காமல் தடுக்க வேண்டும்.
அப்போது தான், இது உண்மையிலேயே மாற்றத்திற்கான அரசாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கும்!
குறுகிய எண்ணங்களால் குழி தோண்டும் ராகுல்!
வி.கோபாலன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: டில்லியில் நடைபெற்ற, 11 நாடுகள் அடங்கிய, 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பயங்கரவாதத்தையும், பஹல்காம் படுகொலையையும் கண்டித்து வெளியிடப்பட்ட ஏகமனதான தீர்மானம், இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம்!
'பிரிக்ஸ்' மாநாடு வெகு சிறப்பாக நடந்து முடிந்ததற்காக, அனைத்து கட்சி தலைவர்களும் கட்சி வேறுபாடின்றி பிரதமர் மோடியை பாராட்டி இருக்க வேண்டும்.
ஆனால், அந்த மாதிரியான விசால மனப்பான்மை, 'இண்டி' கூட்டணி தலைவர்கள் எவருக்கும் இல்லை. அதிலும், பிரதமர் மீதான காழ்புணர்ச்சியில், குறை கூற வேண்டும் என்பதற்காகவே, காங்., - எம்.பி., ராகுல், 'வெளிநாட்டு தலைவர்களுக்கு ஏன் சைவ உணவு அளித்தீர்கள்?' என்று கேள்விக் கணை தொடுத்துள்ளார்.
மாநாட்டிற்கு வந்த தலைவர்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல், பிரதமர் மோடி வைக்கும் விருந்தில் வயிறு நிறைக்க வந்துள்ளனர் போலும்... அவர்கள் ரசித்து ருசித்து சாப்பிட, அசைவ உணவு வழங்காதது குறித்து கவலைப்படுகிறார், ராகுல்.
இதுபோன்ற அறிவற்ற அறிக்கைகளால் தான், காங்., கட்சி நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது. ராகுல், தன் குறுகிய எண்ணங்களாலும், செயல் களாலும் காங்., கட்சியை குழி தோண்டி புதைக்காமல் விட மாட்டார் போலும்!
சிவன் சொத்து குல நாசம்!
சி.ஸ்ரீதேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவில் சொத்துக்கள் மற்றும் வாடகை விபரங்களை மூன்று மாதங்களில் அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என்று, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே கோவில் சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்தது தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பூங்கா சாலையில், தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தையும், பழனியை அடுத்த ஆயக்குடி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.40 ஏக்கர் நிலத்தையும் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 400 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20.47 ஏக்கர் நிலத்தையும் தனிநபர் அறக்கட்டளையின் பெயருக்கு மாற்றி விற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
மதுரையில், மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளையின், 60 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.79 ஏக்கர் இடத்தை பட்டா மாற்றம் செய்து, பத்திரப் பதிவு செய்துள்ளனர்.
அதுமட்டுமா... திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் வாயிலாக, தி.மு.க., நிர்வாகி ஒருவரால் அபகரிக்கப்பட்டு, தற்போது அந்த இடத்தில், தி.மு.க., அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
முந்தைய தி.மு.க., ஆட்சியில் கூட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டதாக கூறினர். அப்படி மீட்கப்பட்ட நிலங்கள், இப்போது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது தி.மு.க.,வினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனரா என்பதையும், த.வெ.க., அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
ஏனென்றால், தி.மு.க., முன்னாள் அமைச்சர் ம.சுப்பிரமணியன் மீதும், சிட்கோ நிலத்தை போலி ஆவணம் வாயிலாக அபகரித்ததாக வழக்கு பதிவாகியுள்ளது.
எனவே, குறைந்தது கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள அனைத்து பத்திரப்பதிவுகளையும் ஆய்வு செய்து, பறிபோன நிலத்தை மீட்பதுடன், தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதன் வாயிலாக, 'சிவன் சொத்து குலநாசம்' என்பதை, கோவில் நிலத்தை, 'ஆட்டை' போட்டவர்களுக்கு, த.வெ.க., அரசு உணர்த்த வேண்டும்!
