தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றுமா?

 ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றுமா?

 ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றுமா?

4


PUBLISHED ON : செப் 27, 2026 01:09 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2026 01:09 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முனைவர் ரா. ஷண்முகசுந்தரம், விவசாய ஆராய்ச்சியாளர், அவினாசி, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தமிழகத்தில் பல தசாப்தங்களாகப் பேசப்பட்டு வரும் திராவிடக் கட்சிகளின், 'இருமொழிக் கொள்கை' உண்மையிலேயே ஏழை மாணவர்களின் நலனுக்கானதா அல்லது அது ஓர் அரசியல் முரணா என்பதை, உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

பணம் படைத்தவர் வீட்டுப் பிள்ளைகள், தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் என, பல மொழிகளை கற்று, இந்திய மற்றும் உலக அளவில் தங்களுக்கான வேலை வாய்ப்புகளை பெறுகின்றனர்.

ஆனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை - எளிய மாணவர்கள் மட்டும் இருமொழிக் கொள்கை எனும் கூட்டுக்குள் அடைந்து, குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்றனர்.

மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்கு வந்தால், கிராமப்புற ஏழை விவசாயக் குடும்பத்து பிள்ளைகளும், பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளும் தரமான கல்வி, நவீன ஆய்வகங்கள், நுாலகங்கள், விளையாட்டு வசதிகள், தங்குமிடம் மற்றும் உணவு ஆகிய அனைத்தையும் இலவசமாகப் பெற்று, தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெல்லும் தகுதியை பெறுவர்.

இந்த அருமையான வாய்ப்பை அரசியலுக்காக எதிர்த்து, ஏழை மாணவர்களுக்கு கிடைக்க இருக்கும் உயர்தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான கதவுகளை அடைக்கின்றனர், தி.மு.க.,வினர்.

பணம் படைத்தவர் வீட்டுப் பிள்ளைகள் தனியார் பள்ளியில் கூடுதல் மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம்; ஏழை பெற்றோரின் பிள்ளைகள் இலவசமாக கூட உயர்தரக் கல்வியை பெற்றுவிடக் கூடாது என்ற ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடு தான், இவர்களது இருமொழிக் கொள்கைக்கான காரணம்!

புதிய அரசாவது, திராவிடக் கட்சிகளின் இந்த போலி மொழிக் கொள்கையை புறந்தள்ளி, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் காலடி எடுத்து வைக்க ஆவன செய்தால், கிராமப்புற ஏழை மாணவர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்!

த.வெ.க., அரசு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்து, வருங்கால தலைமுறையின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்!

பழைய பஞ்சாங்கத்தை துாக்கி எறியுமா தி.மு.க.,!


ஆர்.சேஷாத்திரி, சென்னையில் இருந்து எழுதுகிறார்:

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன், இளைஞர்கள் காது வரை கிருதா வளர்த்து, தலைமுடியை குருவிக் கூடு போல் வைத்து, பெல் பாட்டம் பேன்ட் தரையில் புரள நடந்து செல்வர். இப்போதோ, கிழிந்த ஜீன்ஸ் போடுவதும், தலையில் கலர் கலராக பெயின்ட் அடித்துக் கொள்வதும் பேஷனாக உள்ளன.

அதேபோன்று, அன்றைய இளம் பெண்கள் அடக்கமாக தாவணி அணிந்து, நெற்றியில் குங்குமம் வைத்து, கை நிறைய கண்ணாடி வளையல் குலுங்க காட்சி அளிப்பர். இன்று பெரும்பாலான இளம்பெண்கள் விரித்த தலையும், பொட்டில்லா நெற்றியுமாக காட்சி அளிக்கின்றனர்.

அவர்களது அம்மா, பாட்டி பயன்படுத்திய அம்மி, உரல், உலக்கை எல்லாம் காணாமல் போய் விட்டன. இனிமேல் எவராவது தரையில் மணலில் உட்கார்ந்து சினிமா பார்ப்பரா, அரசியல் மீட்டிங் தான் கேட்பரா?

அந்தக் காலம் மாறிவிட்டது. படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; மக்கள் பொருளாதார வளம் பெற்றுள்ளனர்; குடிசை வீட்டில் கூட கட்டில், மெத்தை, மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ், 'டிவி' என்று சொகுசு வசதிகள் உள்ளன.

இந்த மாற்றம் காலத்தின் நியதி!

அரசியலும் இதைப் போன்று தான் என்பதை தி.மு.க., உணர வேண்டும்.

'அன்றொரு நாள் ஆரியர்கள், ஆற்றங்கரையிலிருந்து அக்ரஹாரத்திற்குள் அடி எடுத்து வைத்தனர்' என்று அண்ணாதுரை பேசியது போன்றோ, 'காகிதப் பூ மணக்காது; காங்கிரஸ் கட்சியின் சமதர்மம் இனிக்காது' என்று தன் கரகரத்த குரலில் கருணாநிதி பேசியது போன்றோ இப்போது பேசினால், அதை எவரும் ரசிக்க மாட்டார்கள்.

செய்ய முடியாத வாக்குறுதிகளை இன்று மக்கள் விரும்புவதில்லை. எனவே, தி.மு.க., தன் கொள்கைகளை, மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்போது பார்த்தாலும் பிராமண எதிர்ப்பு, ஹிந்தி, சனாதன எதிர்ப்பு, மும்மொழி கொள்கை, கச்சத்தீவு என்று அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்தால், வருங்காலத்தில் குவாட்டர், கோழிப் பிரியாணி கொடுத்தால் கூட எவரும் அதை காது கொடுத்து கேட்க மாட்டார்கள்.

அதனால், பழைய பஞ்சாங்கத்தை துாக்கிப் போட்டு, காலத்திற்கு ஏற்ப, தி.மு.க., தன் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மாறாக, தாத்தா வெட்டிய கிணற்று தண்ணீர் உப்பு நீராக இருந்தாலும், அதைத்தான் குடிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால், இந்திய அரசியல் வரலாற்றில் காணாமல் போன கட்சிகளில், தி.மு.க.,வும் ஒன்றாகி விடும்!

மறுபடி துாங்கிவிடக் கூடாது!


எஸ்.கந்தசாமி, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தி.மு.க.,கூட்டணியில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த காங்கிரஸ், இப்போது, தமிழக வெற்றிக் கழக அரசில் இணைந்து, இரண்டு அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளது.

பல ஆண்டுகளாக தங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியை அரவணைத்து, தங்கள் ஆட்சியில் ஒன்றிரண்டு அமைச்சர் பதவிகளை கொடுத்திருந்தால், அக்கட்சி கூட்டணியை விட்டு நகர்ந்து, த.வெ.க., ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க முன் வந்திருக்காது!

அமைச்சர் பதவி கூட வேண்டாம்; குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று வாரியத் தலைவர் பதவிகளையாவது கொடுத்திருக்கலாம்!

மொத்தமாய் ஏமாற்றியது, தி.மு.க.,

காங்கிரசாரும் எத்தனை காலத்துக்கு தான், அடுத்தவர் புசிக்கும் அறுசுவை உணவை, நாவில் நீர் ஊற வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பர்?

நேரம் பார்த்து, தி.மு.க.,விற்கு டாடா காட்டி, த.வெ.க.,வுக்கு ஆதரவு அளித்து, அதற்கு பரிசாக இரண்டு அமைச்சர் பதவிகளையும் பெற்று விட்டனர்.

இப்போது அவர்களை கண்டு மனம் புழுங்கி என்ன பயன்?

காங்.,கை தனிமைப் படுத்தவும், விஜயின் பிரதமர் ஆசைக்கு முட்டுக்கட்டை போடவும், ஹிந்தி தெரிந்த தன் தங்கை கனிமொழியை,'இண்டி' கூட்டணியில் இருந்த சில கட்சி தலைவர்களிடம் துாது அனுப்பி பார்த்தார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்.

அவர்கள் அணிசேர மறுத்து விட்டனராம். காரணம், உதயநிதியின் சனாதன எதிர்ப்பு என்ற வாய்க் கொழுப்பு!

வடமாநில ஹிந்து தலைவர்கள் தங்களுக்கு கடவுள் பக்தியும், ஹிந்து என்ற உணர்வும், பகுத்தறிவும் நிறையவே உள்ளது என நிரூபித்து விட்டனர். நாமும் விழித்துக் கொண்டு, தி.மு.க.,வை ஓரங்கட்டி வைத்துள்ளோம்; ஆனால், அடுத்த தேர்தலுக்குள் மறுபடியும் துாங்கி விடக் கூடாது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us